உடுப்பி கிருஷ்ணன் பற்றிய அதிசயத் தகவல்கள் (Post No.6985)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com


 Date: 19 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 11-53 AM

Post No. 6985

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

இந்த ஆண்டு மூன்றாவது முறையாக இந்தியா செல்ல நேரிட்டது. கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் விட்டுக் கொடுக்கலாமா? அப்போது நல்ல திருமண விருந்துடன்  சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள், சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார், கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன், குக்கே சுப்ரமண்யர் ஆகிய அனைவரின் தரிசனமும் தமிழ்நாட்டில் சமயபுரம் மாரியம்மன், திருச்சி தாயுமானவர், அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், திருவரங்கம் ரெங்கநாதன், சேலையூர் புவனேஸ்வரி/ பிரத்யங்கரா தேவி ஆகியோரின் தரிசனமும் கிடைத்தது. வழக்கம்போல தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் சூறாவளி சுற்றுப் பயணம்தான். இயற்கை எழில் மிக்க ஆகும்பே, பெங்களூரு விஸ்வேரய்யா மியூஸியம் ஆகியவற்றையும் பார்க்கத் தவறவில்லை.

உங்களில் பலரும் அறிந்த விஷயம் என்பதால் சுருக்கி வரைகிறேன்.

உடுப்பி எங்கே உள்ளது?

அரபிக் கடல் ஓரமாக அமைந்த கோவில் நகரம் இது. மங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர்; பெங்களூரிலிருந்து 381 கிலோமீட்டர்.

உடுப்பியில் என்ன பிரசித்தமானது?

த்வைத மத ஸ்தாபகரான மத்வரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் 800 ஆண்டுகளாக அருள் மழை பெய்து வருகிறது.

நான் இரவு நேரத்தில் உடுப்பியை அடைந்தேன். சமன்வய என்ற ஹோட்டலில் தங்கினேன். 3 நட்சத்திர அந்தஸ்து உடைய இந்த ஹோட்டல், லண்டன் நகர ஹோட்டல்களுக்கு இணையான தரம் உடையது. ஹோட்டலில் ஒரு உணவு விடுதியும் உள்ளது.

கோவிலுக்குச் சென்றேன். மங்களகரமான மஞ்சள் புடவைகள் அணிந்த மாதர்கள் கோவிலுக்கு வெளியேயுள்ள மண்டபத்தில், கிருஷ்ண கானம் இசைத்துக் கொண்டிருந்தனர். மறு நாள் காலையில் மீண்டும் கோவிலுக்கு ஓடினேன். அப்போதும் மஞ்சள் புடவை அழகிகள் கிருஷ்ணனின் புகழ்பாடிய வண்ணம் இருந்தனர். இரு முறையும் நான் எடுத்த புகைப் படங்களைப் பார்த்தபோதுதான் இரண்டும் வெவ்வேறு கோஷ்டிகள் என்பது தெரியவந்தது. ‘ரிலே ரேஸ்’ (relay race) போல ஒரு கோஷ்டிக்கு அடுத்ததாக இன்னுமொரு கோஷ்டிவீதம் பாடிக்கொண்டே இருப்பர் போலும்.

கோவிலுக்குள் போனால், கிருபானந்த  வாரியார் போல உரத்த குரலில் ஒரு பெண்மணி உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். அங்கும், சுமாரான கூட்டம்.

15 நிமிடங்களுக்குள் தரிசனம் கிட்டியது.

என்ன விநோதம்?

ஒவ்வொரு கோவிலிலும் பல விநோதச் செய்திகள், விக்ரஹங்கள்,  பழக்க வழக்கங்கள், பிரசாதங்கள் இருக்கும். உடுப்பியிலும் அது உண்டு.

உடுப்பியில் ஒரு ஜன்னல் வழியாகத்தான் கண்ணபிரானைத் தரிசிக்கவேண்டும். அற்புதமான நகைகளை அணிந்த கிருஷ்ணன், ஒரு அறைக்குள் ஏன் இப்படி ஒளிந்து கொண்டு இருக்கிறார்? ஏன் என்றால், கனக தாசர் என்ற கீழ் ஜாதி பக்தர் கோவிலுக்கு வந்தபோது அக்கால வழக்கப்படி அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இறைவனுக்குத்தான் ஜாதிகள் கிடையாதே? உடனே கனகதாசர் இருந்த திசையை நோக்கித் திரும்பி ஜன்னல் வழியே காட்சிதந்தார். இன்று நாம் போனாலும் கூட அதே கனகதாசர் ஜன்னல் வாயில் வழியாகத்தான் கிருஷ்ணனைத் தரிசிக்க வேண்டும். கோவிலுக்குள் எப்போதும் நல்ல கூட்டம். மழை பெய்தாலும் கூட்டம் வருவது நிற்பதில்லை.

இரண்டாவது அதிசயச் செய்தி மத்வர் காலத்தில் நடந்தது. அவர் கடற்கரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொலைவில் வந்துகொண்டிருந்த ஒரு கப்பல், பாறையுள்ள பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட மத்வர், பெரும் ஆபத்தைத் தடுப்பதற்காக, தன் மேல் துண்டை ஆட்டி எச்சரித்தார். கப்பலும் பிழைத்தது.

கப்பல் கேப்டன் வந்து அவரிடம் நன்றி சொன்னான். தங்களைக் காப்பாற்றியதற்காக கப்பலில் உள்ள விலையுயர்ந்த எந்த ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினான். சந்யாசியான மத்வர் எந்த விலையுயர்ந்த பொருளையும் தொட மறுத்துவிட்டார். ஆனால் அந்தக் கப்பல், புனிதத் தலமான துவாரகையில் இருந்து கல்லையும் மண்ணையும் ஏற்றி வருவதை அறிந்தவுடன் மஞ்சள் நிற களி மண் பாறை ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டார். அதை நாமம் போடவும் உடல் முழுதும் சமயச் சின்னங்களை அணியவும் பக்தர்கள் பயன்படுத்தினர். காலப் போக்கில் அந்தப் பாறையை சிறு துண்டுகளாக உடைத்தபோது, அதில் கிருஷ்ணன் சிலையும், பலராமன் சிலையும் இருப்பது தெரியவந்தது. பலராமனை கடலோரக் கோவிலில் பிரதிஷ்டை செய்துவிட்டு, கிருஷ்ணன் சிலையை உடுப்பிக்குக் கொண்டு வந்தார். அபோது எழுப்பப்பட்ட கோவில் இன்று வரை மக்களை இழுக்கும் ஆகர்ஷண சக்தியாக விளங்குகிறது..

மூன்றாவது முக்கியச் செய்தி என்னவென்றால் உடுப்பி கோவிலைச் சுற்றி எட்டு புனித மடங்கள் இருக்கின்றன. அவற்றின் தலைவர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோவில் பொறுப்பை சுழற்சி முறையில்  ஏற்கின்றனர்.

உடுப்பியைச் சுற்றி மனம் கவரும் இயற்கைக் காட்சிகளும், மணல் நிறைந்த கடற்கரையும் பல கோவில்களும் உண்டு. மத்வாச்சார்யார் பிறந்த பஜக கிராமம் உடுப்பியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வட்டாரத்தில் பல கோவில்கள் இருப்பதால் ஓரிரு நாட்கள் தங்கி எல்லாவற்றையும் பார்ப்பது நல்லது. இயற்கை அன்பர்களுக்கு கடற்கரை விடுதிகளும் அருகாமைத் தீவுகளும் விருந்து அளிக்கும்.

கடைசியாக உடுப்பி ஹோட்டல்களைப் பற்றியும் ஒருவார்த்தை. தென்னிந்தியா முழுதும் ‘உடுப்பி ஹோட்டல்’ என்ற போர்டுகளைப் பார்க்கலாம். சுவை மிகு உணவுகளுக்கு பெயர்போன இடம் உடுப்பி என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

கண்ணனின் நாமத்துக்கு  எவ்வளவு ருசியோ அவ்வளவு ருசி உடுப்பி ஹோட்டல்களின் உணவுக்கும் இருக்கிறது!

XXX SUBHAM XXX

Leave a comment

3 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    உடுப்பி ஸ்ரீ க்ருஷ்ண விக்ரஹம் ஸ்ரீக்ருஷ்ணரின் தாய் தேவகியிடமும் பின்னர் ருக்மிணியிடமும் இருந்தது என்பது ஐதீகம். த்வாரகை கடல்கோளால் மூழ்கியபோது இது மண்ணில் புதையுண்டது. பின்னர் ஒரு மாலுமியின் வசப்பட்டு, ஸ்ரீ மத்வாச்சார்யாரிடம் வந்தது.
    குருவாயூர் ஸ்ரீ க்ருஷ்ண விக்ரஹமும் இவ்வித தெய்வீக சம்பந்த முடையது.இதை வசுதேவரும் தேவகியும் பூஜித்ததாகவும் பின்னர் க்ருஷ்ணபக்தர் உத்தவரிடம் வந்ததாகவும் அவர் அதைத் தன் குருவான பிரஹஸ்பதியிடம் தந்ததாகவும் அவரும் வாயுவும் சேர்ந்து அதை குருவாயூரில் ஸ்தாபித்தனர் என்பதும் ஐதீகம்.
    புரி-ஜகன்னாதர் விஷயத்திலும் இப்படி ஒரு ஐதீகம் இருக்கிறது. ஸ்ரீ க்ருஷ்ணர் பூவுலகை விட்டு நீங்கியபின், யாதவ குலத்தில் சண்டை ஏற்பட்டு பலரும் அழிந்தனர். எஞ்சிய சிலர் ஸ்ரீ க்ருஷ்ணரின் அஸ்தியை எடுத்துகொண்டு புரி-ஜகன்னாதம் வந்ததாகவும் , அதை ஒரு க்ருஷ்ண விக்ரஹத்தில் வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த விக்ரஹம் மரத்தாலானது. 12 வருஷங்களுக்கு ஒருமுறை இதைப் புதிதாகச் செய்கிறார்கள். அதற்கு ஒருவகை வேப்பமரம் பயன்படுத்தப்படுகிறது. புதிதாக விக்ரஹம் செய்தவுடன் பழைய விக்ரஹத்திலிருந்து அந்த அஸ்திப் பொட்டலத்தை புதிய விக்ரஹத்திற்கு மாற்றுகிறார்கள். இதில் மிக மூத்த அர்ச்சகரையே ஈடுபடுத்துகிறார்கள். அஸ்திப்பொட்டலத்தை மாற்றும் சமயத்தில் அவர் கண்ணைக் கட்டிவிடுகிறார்கள். அர்ச்சகர் இதைத் தம்வாழ்வில் மிகச்சிறந்த நிகழ்ச்சி/ கவுரவமாகக் கருதுகிறார். இதன்பின் பகவான் அடி சேர்வதுதான் அவர் லட்சியமாகிறது!
    ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் புரிஜகன்னாதரிடம் அலாதியான பக்திகொண்டிருந்தார். அங்கு தரும் பிரசாத்தை எப்பொழுதும் தம் அறையில் வைத்திருப்பார். ஆனால் புரிக்குப் போனால் தாம் திரும்பிவர மாட்டோம் என்று நம்பினார். இறுதி நாட்களில் மஹேந்திர நாத குப்தரை புரிக்குப் போகும்படியும் அங்கு ஸ்வாமி விக்ரஹத்தை ஆலிங்கனம் செய்துகொள்ளும் படியும் பணித்தார். குப்தரும் ஏதோ தகிடு தத்தம் செய்து அந்தஅர்ச்சகர்களுக்குப் போக்குகாட்டி ஸ்வாமி விக்ரஹத்தை தழுவிக்கொண்டார். திரும்பி வந்ததும் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் குப்தரைத் தழுவிக்கொண்ட்டார். இதனால் புரிஜகன்னாத விக்ரஹத்தின் மஹிமை விளங்கும்.
    தென் இந்தியாவின் ஸ்ரீ க்ருஷ்ணர் கோவில்களில் குருவாயூரும் உடுப்பியும் மகத்தானவை. இவ்விடங்களில் என்றும் கூட்டம் இருக்கும், தினமும் திருவிழாக்கோலம்தான். குருவாயூரின் மஹிமைக்கு பெரியவர்கள் சொல்லும் காரணம் அங்கு தினமும் ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடைபெறுகிறது என்பது. அதுபோல உடுப்பியிலும் பஜனைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன போலும்.
    89-94 ஆண்டுகளுக்கிடையில் பலமுறை உடுப்பி சென்றிருக்கிறேன், அங்கு பல நாட்கள் தங்கியும் இருந்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இப்படித் தொடர்ந்து பஜனைகள் நடந்ததாக நினைவில்லை.
    ஆனால் இரண்டு இடத்திலும் அரசியல் வாதிகள் குழப்பம் விளைவிக்க முயல்கின்றனர். இடது சாரிகள் பதவிக்கு வரும்போது ..குருவாயூருக்கு ஏதாவது தலைவலி வரும். ஒரு சமயம் அவர்கள் கோவில் நெய்வேத்யத்திற்கும் சமாராதனைக்கும் அரிசி கொடுக்க மறுத்தார்கள். அப்போது அமரர் சேங்காலிபுரம் அனன்தராம தீக்ஷிதர் அன்றைய தமிழ் நாட்டு முதல்வர் அண்ணாதுரையை அணுகினார். அவரோ இரு ரயில்வே வேகன்களில் அன்றே அரிசி அனுப்பினார்!. [ அது ரேஷன் காலம்!] இதுவும் குருவாயூர் மஹிமைதான்! உடுப்பியில் கனகதாசர் பெயரில் குழப்பம் விளைவிக்கின்றனர்.
    இடதுசாரி-செக்யூலர் கைகளில் ஹிந்துக் கோவில்-மடங்களுக்கு நித்ய கண்டம்தான்!

  2. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  September 19, 2019

    super information from sri nanjappa. hats off
    nagarajan

  3. Tamil and Vedas's avatar

    Thanks for adding valuable information. I have never heard about it before. Please keep commenting on all articles. You may add whatever relevant information you have on the subject.

Leave a comment