இல்லத்தில் மகிழ்ச்சி பெருக கான் மாரி வழிமுறை! (Post No.6990)

WRITTEN BY S. NAGARAJAN

swami_48@yahoo.com


 Date: 20 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 7-03 am

Post No. 6990

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

15-8-19 பாக்யா இதழில்அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதிநான்காம் கட்டுரை : அத்தியாயம் 430

உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருக கான் மாரி வழிமுறை!

 ச.நாகராஜன்

35 வயதே ஆன ஒரு பெண்மணி உலகின் லட்சக்கணக்கான இல்லங்களில் மகிழ்ச்சி பெருகக் காரணமாக இருக்கிறார் என்றால் நம்புவது சற்று ஆச்சரியமாக இல்லை? ஆனால் உண்மை அது தான்! கான்மாரி வழிமுறை (KonMari Method) என்பதைப் பற்றி ‘மகிழ்ச்சி எங்கள் இல்லங்களில் பொங்குகிறது’ என்று ஆயிரக்கணக்கான பேர்கள் உலகின் தலை சிறந்த பத்திரிகைகளின் வாயிலாகவும் தொலைக்காட்சி பேட்டிகள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் சொல்லும்போது அதை நம்பத்தானே வேண்டும்.

அந்த வழிமுறையை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உற்சாக உந்துதல் எழுவதும் இயல்பே.

மாரி காண்டோ (Marie Kondo) ஜப்பானைச் சேர்ந்தவர். 1984, அக்டோபர் 9ஆம் தேதி பிறந்தவர். அவரது சொத்து மதிப்பு இப்போது 80 லட்சம் டாலர்கள். ஒரு மணி நேரத்திற்கு ஆலோசனையைத் தர அவரிடம் பயின்றவர்கள் வாங்கும் சார்ஜ் இந்திய மதிப்பில் சுமார் 7000 ரூபாய்!

அவர் எழுதிய ‘தி லைஃப் சேஞ்சிங் மாஜிக் ஆஃப் டைடியிங் அப்’ (‘The life Changing Magic of Tidying Up’) என்ற புத்தகம் உலகெங்கும் லட்சக்கணக்கில் விற்பனையாகி சக்கைப் போடு போடுகிறது.

மாரி ஷிண்டோயிஸத்தைப் பின்பற்றுபவர். ஷிண்டோயிஸம் என்பது ஜப்பானிய கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் பிறந்தது. அது தூய்மையை மிகவும் வலியுறுத்துகிறது.

இளம் வயதிலிருந்தே இல்லத்தைத் தூய்மைப்படுத்துவதில் அக்கறை காட்டி வந்த மாரி அதில் நிபுணராக மாறி அனைவருக்கும் அதை எப்படி எந்த வழிமுறையில் செய்வது என்பதைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க வைத்தார். உலகின் இன்றைய பிரபலமான பெண்மணிகளுள் ஒருவராக ஆகிவிட்டார்.

அவர் 2012இல் டகுமி கவஹாரா என்பவரை மணந்தார்.தம்பதியர் இருவரும்  உலகின் பல விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கு பெறுகின்றனர்.

முதலி மாரி காண்டோ வழிமுறை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

சுருக்கமாக ஒரே வரியில் சொன்னால் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத பொருள்களை வீட்டிலிருந்து அகற்றி வீட்டைத் தூய்மைப்படுத்துவது தான் மாரி காண்டோ வழிமுறை என்று சொல்லி விடலாம்.

முதலில் வீட்டைத் தூய்மைப்படுத்துவது என்ற உந்துதலையும் கடமை உணர்ச்சியையும்  நீங்கள் கொள்ள வேண்டும். அடுத்து உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். பிறகு தூய்மைப் படுத்தும் பணியை ஆரம்பிக்க வேண்டும். முதலில் துணிகள், பின்னர் புத்தகங்கள், பின்னர் இதர அனைத்துப் பொருள்கள். இறுதியாக நினைவுப் பரிசுகள்.

ஒவ்வொரு பொருளையும் அகற்றும் முன்னர் அது இதுவரை செய்த நன்மைக்காக அதற்கு நன்றி சொல்ல வேண்டும். இடவாரியாக தூய்மைப்படுத்த வேண்டாம். பொருள்கள் வாரியாக தூய்மைப் படுத்துவதைச் செய்ய வேண்டும். மேலே கொடுத்துள்ள வரிசைப்படி வேண்டாத பொருள்களை அகற்ற ஆரம்பிக்க வேண்டும். அதாவது துணிகள், புத்தகங்கள்… இப்படி குறிப்பிட்ட வரிசைப்படி செல்ல வேண்டும். உங்களுக்கு மகிழ்ச்சி பொங்குகிறதா என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.

இப்படிச் செய்யும் போது ஒரேயடியாக அனைத்தையும் தூக்கிப் போட்டு விடலாம். கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம் என்றால் அது வேலைக்கு உதவாது.

சமையலறையில் தேவையற்று இருக்கும் பொருள்கள் ஏராளம். அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு தூக்கிப் பொடுங்கள். சமையலுக்குத் தேவையில்லாத இதர பொருள்களையும அங்கிருந்து அகற்றி விடுங்கள். லிவிங் ரூம் எனப்படும் ஹாலில் தேவையற்ற படிக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் குவியலாக இருக்கிறதே, அதை உடனே அகற்றி விடலாம். குளியலறையில் ஒவ்வொரு டிராயராகப் பார்த்து தூய்மைப் படுத்தலாம்.

இப்படிச் செய்ய ஆரம்பித்தால் மீண்டும் ஒருநாளும் குப்பைகள் உங்கள் இல்லத்தில் சேரவே சேராது என்கிறார் மாரி.

ஆங்கில உளவியல் நிபுணரான ஜேன் க்ரேவ்ஸ் (Jane Graves)  வீட்டில் உள்ள பொருள்களின் ரகசியம் அது நமக்கு ஏற்படுத்தும் மலரும் நினைவுகள், உணர்வுகள், உணர்ச்சி பூர்வமான நிலைகள் ஆகியவையே என்கிறார். ஆகவே தூய்மைப் படுத்தும் போது பழைய சாக்ஸ் – காலுறைகள்- கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

துணிகளை மடித்து வைப்பதில் கூட ஒரு ஒழுங்கு முறை வேண்டும். அப்படி மடித்து முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் துணிகளை அணிவதில் உள்ள மகிழ்ச்சியே தனி தான்!

ஒவ்வொரு அறையும் தூய்மையாகும் போது உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி மலர்கிறதா என்பதைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

இந்த தூய்மைப் படுத்தும் பணியை யாருக்கும் தெரிவிக்காமல் செய்ய வேண்டும். வயதான தாய் தந்தையர் இருந்தால் இப்படி வெளியில் தூக்கி எறியப்படும் பொருள்களைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடையக் கூடும். அது ஏற்படுத்தப் போகும் மகிழ்ச்சியை அவர்களால் உடனடியாக அறிய முடியாது என்பதால் தனியே சற்று ரகசியமாகவே இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இதுவே மாரி காண்டாவைப் பின்பற்றும் ஆர்வலர்களின் அறிவுரை. செய்து தான் பார்ப்போமே!

நிச்சயமாக மகிழ்ச்சி பொங்க ஆரம்பிக்கும்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை விருந்து ஒன்றில் அந்த விருந்தை அளித்த ஒரு பெண்மணி சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த ‘தியரி ஆஃப் ரிலேடிவிடி’ பற்றிக் கேட்டு அதை விளக்குமாறு வேண்டினார்.    

                             அதற்கு ஐன்ஸ்டீன் இப்படி பதில் அளித்தார்:  

                                            “அம்மணீ! ஒரு நாள் கிராமப்புறம் ஒன்றில் சரியான கோடைக்கால வெயிலில் நான் சென்று கொண்டிருந்தேன். என்னுடன் பார்வையற்ற குருடான ஒரு நண்பர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் நான் ஒரு கோப்பை பால் அருந்த வேண்டும் என்றேன். “பாலா? அப்படி என்றால் என்ன? எனக்குத் தெரியாது” என்றார் அவர். “அது ஒரு வெள்ளை நிறமுள்ள திரவம்” என்று நான் பதில் சொன்னேன். “திரவம் என்றால் புரிகிறது. ஆனால் வெள்ளை என்றால் என்ன? எனக்குப் புரியவில்லை” என்றார் அவர்.  “வாத்தின் சிறகுகளின் வண்ணம் தான் அது” என்றேன் நான். “சிறகு என்றால் புரிகிறது. ஆனால் வாத்து என்றால் எனக்குப்  புரியவில்லை” என்றார் அவர். “அது ஒரு நெளிந்த கழுத்துடைய பறவை” என்றேன் நான். “கழுத்து என்றால் எனக்குப் புரிகிறது. ஆனால் “நெளிந்த” என்று சொன்னீர்களே, அது எனக்குப் புரியவில்லை” என்றார் அவர். பொறுமையை இழந்த நான் அவரது கையைப் பிடித்து நன்கு நீட்டினேன். இது தான் நேராக இருப்பது என்று சொல்லி விட்டு அவரது முழங்கையை மடக்கி கைவிரல் மூட்டு வரை கொக்கி போல மடித்தேன். இது தான் நெளிந்து இருப்பது என்று சொன்னேன்.” “ஆஹா! இப்போது தான் பால் என்றால் என்ன என்று எனக்குப் புரிகிறது” என்று சொல்லி அவர் குதூகலப்பட்டார்.” இதைச் சொல்லி நிறுத்தினார் ஐன்ஸ்டீன். அம்மையார் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே. நைஸாக அங்கிருந்து நகர்ந்தார் அவர்!

–subham-

Leave a comment

Leave a comment