

Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 21 NOVEMBER 2019
Time in London – 8-31 am
Post No. 7241
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 1
ச.நாகராஜன்
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில் பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரை.

உரையின் முற்பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.
யார் சூரியனை தினமும் காலையில் உதிக்கச் செய்கிறார்?
யார் தினமும் சூரியனை மாலையில் அஸ்தமிக்க வைக்கிறார்?
இரவில் மட்டும் தாரகைகள் ஏன் கண்ணைச் சிமிட்டுகின்றன?
பகலில் ஏன் அவைகள் ஒளிந்து கொள்கின்றன?
ஒரு கணமும் ஓய்வெடுக்காமல் இடைவிடாது காற்று ஏன் வீசிக் கொண்டே இருக்கிறது, உயிர்களை வாழ வைக்கிறது!
யார் நதியை இடைவிடாது இன்பம் தரும் ஓசைகளுடனும், குமிழ்களுடனும், சலசலப்புடனும் ஓட வைக்கிறார்?
மாயையையும், படைப்பையும் உருவாக்கியது யார்?
பணம், மதம், சமூகம், தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் எப்படி நீங்கள் வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?
யார் இதற்கெல்லாம் எஜமானன்? யாருடைய ஆளுகையில் இந்த அற்புதங்களெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது?
அவரது வார்த்தைகளைக் கேளுங்கள்!
அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வீராக!
(தெலுங்குக் கவிதையைப் பாபா பாடி தன் உரையைத் தொடங்குகிறார்)
அன்புத் திருவுருவங்களே!
ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாக இருக்கவே நினைக்கிறான். ஒவ்வொருவரும் வாழ்க்கையின் லட்சியத்தை அறியவே விரும்புகிறார்.
பத்து லட்சத்தில் ஒருவரே தன் குறிக்கோளை விடாமல் தொடர்ந்து கடைப்பிடித்து தன் லட்சியம் அடையும் வரை செல்கின்றார்.
சாமான்யரோ இந்த வழியில் தீவிரமாக முயற்சி எடுப்பதில்லை; தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் இது என்று அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் உடல் ரீதியான இன்பங்களை அனுபவிப்பதிலேயே தங்கள் வாழ்க்கையைச் செலவிடுகின்றனர். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று மட்டுமே வாழ்க்கையின் அம்சங்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். இதை விட உயரிய குறிக்கோள் பற்றி அறிய அவர்கள் தவறி விடுகின்றனர்.
அத்வைத அனுபவமே ஞானம்
என்றும் உள்ள ஆனந்தத்தை அடைய மக்கள் பல்வேறு பாதைகளைக் கடைப்பிடிக்கின்றனர். தைத்திரீய உபநிடதம் இது பற்றி பறவையை உவமையாகக் கொண்டு கூறுகிறது. பறவையின் தலையே சிரத்தை.
இடது மற்றும் வலது பக்க இறக்கைகளே ரிதம் மற்றும் சத்யம் ஆகும்.
உடலே மஹாதத்வத்தைக் குறிக்கிறது. வால் யோகத்தைக் குறிக்கிறது. ரிதம் என்றால் என்ன?
த்ரிகாலபத்யம் ரிதம்!
நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் மாறாதிருப்பதுவே ரிதம்.
சிரத்தை மிகவும் முக்கியமானது.
ச்ரத்தாவான் லபதே ஞானம்!
பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “சிரத்தையுடன் இருக்கும் ஒருவர் என்னை என்னை அடைய முடியும் என்கிறார். மேலும் அவர், “நான் சிரத்தையின் உருவமாக இருக்கிறேன்” என்கிறார்.
சிரத்தை இல்லாமல் இருக்கும் ஒருவன் ஒரு சிறிய விஷ்யத்தைக் கூட அடைய முடியாது.
முக்கியமாக ஆன்மீகத்தில் சிரத்தை என்பது மிகவும் முக்கியமானது. சஞ்சலமில்லாத வலிமையான நம்பிக்கையே சிரத்தையை அடையச் செய்கிறது.
உபநிடதங்கள் சிரத்தை பற்றிய கொள்கையைப் பலவிதமாக விளக்குகின்றன.
சிரத்தை மூலமாக அடையும் ஞானமே தாரகம். (முக்தி)
சிரத்தை இல்லையேல் அது மாரகம். (தளை)
என்றுமுள்ள கொள்கையான தாரகம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், பயிற்சியில் கொண்டு வரவேண்டும், பரப்பப்பட வேண்டும்.
இதுவே தைத்திரீய உபநிடதத்தின் அடிப்படை உபதேசம்.
அன்புத் திருவுருவங்களே!
தைத்திரீய உபநிடதம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் சிரத்தை கைக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஆன்மீகத்தில் சிரத்தையே தாரக மந்திரம்.
அது சிரஞ்சீவித்வம் கொண்டது; அழியாதது.
மனிதன் ஐந்து அம்சங்களான சிரத்தா, சத்யம், ரிதம், யோகம், மஹாதத்வம் ஆகியவற்றின் மூலமாக இதயத்தைச் சுத்தப்படுத்தினால் மட்டுமே ஞானத்தை அடைய முடியும்.
ஞானம் என்பது புத்தகப் படிப்பல்ல.
அத்வைத தர்சனம் ஞானம்.

பார்க்கின்றபோது (உலகில்) இரண்டாக இருக்கின்றவற்றில் அத்வைதம் அடிநாதமாக இருக்கிறது.
இந்த அடிப்படை உண்மையைத் தான் தைத்திரீய உபநிடதம் போதிக்கிறது.
ஆதிசங்கரர் ஜய யாத்திரை செய்த போது வட இந்தியாவில் மண்டனமிஸரர் என்ற பெரும் அறிவாளியைக் கண்டார். அவருடன் சங்கரர் ஒரு அறிவுபூர்வமான விவாதத்தை மேற்கொண்டார்.
மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் கூட சிறந்த பண்டிதை.
ரிதம், சத்யம், மஹாதத்வம் பற்றி அவர் நன்கு அறிந்தவர்.
மண்டனமிஸ்ரர் வாதத்தில் தோற்றுவிட்டால் சந்யாசியாக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. சங்கரர் உபயபாரதியையே மத்தியஸ்தராக இருக்கும் படி கேட்டுக்கொண்டார்.
வாதம் நடைபெறும்போது உபயபாரதி வாதத்தையும் பிரதிவாதத்தையும் நன்கு உன்னிப்பாகக் கேட்டு வந்தார். நீதியில் ஒரு தலைப்பட்சமாக இராத அவர், சங்கரர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
தனது கணவர் வாதத்தில் தோற்றதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.
மண்டனமிஸ்ரர் சந்யாசத்தை மேற்கொண்டார். மனைவியானதால் அவரில் பாதி என்பதற்கேற்ப – அர்தாங்கியாக இருப்பதால் – அவரும் சந்யாசத்தை மேற்கொண்டார்.
இருவரும் உலகத்தைத் துறந்து ஞானப் பாதையை போதிக்கலாயினர்.
ஞானம் அடையாத மனித வாழ்க்கைக்கு மதிப்பே இல்லை!
– உரை தொடரும்
