
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 22 NOVEMBER 2019
Time in London – 5-18 AM
Post No. 7245
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!
உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 -பார்க்கவும்.
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 2
ச.நாகராஜன்
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில், பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரையின் தொடர்ச்சி …

அன்னம் பிரம்மா; ரஸோ விஷ்ணு: போக்தா தேவோ மஹேஸ்வர: (அன்னம் பிரம்மா; சாரம் விஷ்ணு; அதை எடுத்துக் கொள்பவர் மஹேஸ்வரன்) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த மூன்றும் உடல், மனம், செயல் ஆகிய மூன்றையும் முறையே குறிக்கிறது.
மனஸ்யேகம் வாசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மன:
(எவருடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஒன்றாக இருக்கிறதோ அவர்களே மஹாத்மாக்கள்)
சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பதே ரிதம்.
இவை பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் ஆகியோரை பிரதிநிதித்வம் செய்கின்றன.
ஆகவே ஒவ்வொருவரும் இந்த மூன்றில் தூய்மையை அடைய முயற்சிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு சிம்னி கண்ணாடியை எடுத்துக் கொள்வோம்.
அதை ஒரு விளக்கின் மேல் பொருத்தும் போது, சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஒரு மெல்லிய கரும் புகைப் படலம் கண்ணாடியில் படிந்திருபப்தைப் பார்க்கிறோம்.
இதன் பயானாக வெளிச்சம மங்கலாக ஆகிறது.
கண்ணாடியை நன்கு சுத்தம் செய்யும் போது தான், வெளிச்சத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
நீங்கள் செய்ய வேண்டியது இதைத் தான்!
கண்ணாடியில் படிந்திருக்கும் மெல்லிய கரும்புகைப் படலத்தை உங்கள் மனதில் உருவாகும் அகங்காரத்துடன் ஒப்பிடலாம்.
உங்கள் மனதில் உள்ள அகங்காரத்தினால் திவ்ய ஞான ஜோதியை உங்களால் பார்க்க முடியவில்லை.
அகங்காரம் உங்கள் மனதில் எப்படி நுழைகிறது?
உண்மையின் வழியை நீங்கள் விடும் போது அது நுழைகிறது.
உங்களுடைய உண்மையான சொரூபத்தை நீங்கள் உணராமல் இருக்கும் போது நீங்கள் அகங்காரம் கொண்டவராக ஆகிறீர்கள்; உலகியல் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் உருவாக்குகிறீர்கள். அகங்காரத்தை விரட்ட, உலகியல் சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அகங்காரத்தை அகற்றாமல் ஞானத்தைப் பெறுதல் இயலாது.
ஆத்மாவின் ஒளி பொருந்திய பிரகாசத்தின் காட்சியை அடைய அகங்காரம் என்னும் கரும்புகைப் படலத்தை உங்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும். இதுவே உபயபாரதியின் உபதேசம்.
பெண்களுக்கு ஆன்மீக அறிவைக் கொடுத்தவாறே அவர் கங்கை நதிக்கரையோரம் ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்தார். பல பெண்மணிகள் அவரது சிஷ்யைகள் ஆயினர். ஒவ்வொரு நாள் காலையும் அவர்கள் கங்கை நதிக்குச் சென்று நீராடுவர்.
செல்லும் வழியில் பிரம்ம ஞானி என்று மக்களால் அழைக்கப்படும் ஒரு சந்யாசி வாழ்ந்து வந்தார்.
ஒரு சின்ன மண்குடத்தின் மீது அவருக்கு மிகுந்த ஒட்டுதல் இருந்தது, அதில் தான் அவர் நீரை நிரப்பி வைத்திருப்பார்.
ஒரு நாள் அந்த மண்குடத்தைத் தலையணையாக வைத்து அவர் படுத்திருந்தார்.
தனது சிஷ்யைகளுடன் அந்த வழியே சென்ற உபயபாரதி அந்தக் காட்சியைப் பார்த்து, “ஞானம் அடைந்தவராக இருந்த போதிலும் அவரிடம் ஒரு சிறிய குறை இருக்கிறது. உலகைத் துறந்து விட்ட போதிலும் தலையணையாக உபயோகித்து தன்னுடைய மண்குடத்தின் மீது அவர் ஒட்டுதலுடன் இருக்கிறார்.” என்று குறிப்பிட்டார்.
இதைக் கேட்ட சந்யாசி கோபம் கொண்டார். உபயபாரதியும் அவரது சிஷ்யைகளும் கங்கையிலிருந்து திரும்பி வரும் போது தான் அந்த மண்குடத்தின் மீது ஒட்டுதலாக இருக்கவில்லை என்பதைக் காண்பிக்க
அந்த மண்குடத்தைச் சாலையில் தூக்கி எறிந்தார்.
இதைப் பார்த்த உபயபாரதி சொன்னார்; “ நான் அவரிடம் அபிமானம் என்ற ஒரு குறை தான் இருக்கிறது என்று நினைத்தேன். இப்போது அவரிடம் இன்னொரு குறையும் இருப்பதை உணர்கிறேன். அகங்காரமும் அவரிடம் இருக்கிறது. அபிமானத்துடன் அகங்காரமும் இருக்கும் ஒருவர் எப்படி ஞானியாக முடியும்?”
அவரது கூற்று சந்யாசியின் கண்ணைத் திறந்தது.
உபயபாரதி நாடெங்கும் பயணித்து ஞான மார்க்கத்தை உபதேசித்தார்; பரப்பினார்.

பெண்கள் இயல்பாகவே விஞ்ஞானம், சுஞ்ஞானம், ப்ரஜ்ஞானம் ஆகியவற்றின் திருவுருவங்கள். அவர்கள் அனைத்து நற்குணங்களின் பெட்டகங்கள். ஆனால் கலியுகத்தின் தாக்கம் காரணமாக, பெண்கள் இழிவாகப் பார்க்கப்படுகின்றனர். இது ஒரு மகத்தான தவறு. அவர்களுக்குரிய மரியாதையுடன் அவர்கள் நடத்தப்பட வேண்டும். இன்று பெண்கள் ஆண்களுக்கு ஈடாக வேலைகளைச் செய்யப் போட்டி போடுகிறார்கள். என்றாலும் அப்படிச் செய்வதற்கு முன், அவர்கள் தங்கள் இல்லத்தின் தேவைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தெலுங்குப் பாடல்
“எல்லாப் பெண்மணிகளும் வேலை பார்க்கச் சென்று விட்டால், இல்லங்களை யார் பார்த்துக் கொள்வார்கள்?
கணவனும் மனைவியும் இருவரும் அலுவலகம் சென்று விட்டால், வீட்டை யார் பராமரிப்பார்கள்?
பெண்கள் இதர குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சென்று விட்டால், அவர்கள் குழந்தைகளுக்கு யார் கற்றுக் கொடுப்பார்கள்?
ஆண்களைப் போலப் பெண்களும் தங்கள் கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்றால், சமையலறையில் யார் வேலை பார்ப்பார்கள்?
சம்பாதிப்பது சில பணப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும், ஆனால் அது எப்படி வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்?
நீங்கள் தீவிரமாக இதைச் சிந்தனை செய்து பார்த்தால் அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு சந்தோஷமே இல்லை.”
தெலுங்குப் பாடலை பாபா பாடினார்.
பாபாவின் உரை தொடரும்
****
