தூயவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்! – 5 (Post No.7262)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 26 NOVEMBER 2019

Time  in London – 6-10 am

Post No. 7262

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 மூன்றாம் பகுதி கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019 நான்காம் பகுதி:     வெளியான தேதி : 25-11-19 பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 5

ச.நாகராஜன்

அன்புத் திருவுருவங்களே!

உணவு உட்கொள்ளும் முன்னர் புனித மந்திரத்தை ஓதுங்கள். பிறகு எந்த புனிதமற்ற விஷயமும் உங்கள் இதயத்தில் நுழையாது.

அன்னம் ப்ரஹ்மா; ரஸோ விஷ்ணு: போக்தா மஹேஸ்வர:

இந்த மூன்றும் உடல் மனம் செயல் ஆகியவற்றை முறையே தொடர்பு கொண்டதாகும். தூய்மையான எண்ணம்,சொல், செயல் ஆகியவையே உண்மையான ஞானம். நீங்கள் வெறு எந்தவிதமான ஆன்மீகப் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டாம். மக்கள் வெவ்வேறு விதமான சாதனாவை (ஆன்மீகப் பயிற்சி) மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தற்காலிகமான திருப்தியே கிட்டுகிறது. ஆனால் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை கொள்ளும் போது நீங்கள் என்றும் நிலையாக இருக்கும் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.

அன்புத் திருவுருவங்களே!

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் எது மாறாதிருக்கிறதோ அது தான் ரிதம். அதுவே உண்மையான ஞானம். எது மாறுதலுக்கு உட்படுகிறதோ அது மாரகம். எது மாறாதிருக்கிறதோ அது தாரகம்.

“சத்குருவின் அருளால் தாரகத்தின் கொள்கையைப் புரிந்து கொள்ளுங்கள். தற்காலிகத்திற்கும் நிலைத்திருப்பதற்குமுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடியுங்கள். ஜீவாத்மாவானது ஜாக்ரதம் (விழிப்பு) ஸ்வப்னம் (கனவு) சுஷுப்தி (ஆழ்ந்த உறக்க நிலை) ஆகிய மூன்று நிலைகளிலும் எதை இடைவெளியின்றித் திருப்பித் திருப்பிச் (சோஹம்) சொல்கிறதோ அந்த தாரகத்தின் (சோஹம்) இரகசியத்தை அறியுங்கள்.”

  • தெலுங்குப் பாடல் முடிகிறது

நீங்கள் எந்த மதத்தையும் சமூகத்தையும் சார்ந்தவராக இருக்கலாம், ஆயின் நீங்கள் இந்த தாரக மந்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும். இன்று மக்கள் தங்களை பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களைச் சொல்லிக் கொள்வதற்கிணங்க அவர்களது செயல்கள் இருப்பதில்லை. அவர்களது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியவை பொய், அதர்மம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. அவர்களது அன்பு சுயநலத்தினாலும் தங்களது சுய தேவையினாலும் கறை பட்டுள்ளது.

அவர்கள் பக்தர்கள் எனச் சொல்லிக் கொள்கின்றனர், உலகம் முழுவதும் சுற்றுகின்றனர், எல்லா தீய செயல்களிலும் ஈடுபடுகின்றனர். வெளிப்படையாக அவர்கள் பக்தியுடன் காணப்படுகின்றனர், ஆனால் அகத்திலேயோவெனில் தீயவற்றின் மீது நாட்டம் உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பணத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனர். நீங்கள் அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களை தூரத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் முகத்தைப் பார்ப்பதும் கூட பாவம்.

சில பக்தர்கள் சொன்னார்கள் : “ஸ்வாமி, நாங்கள் உங்களது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர விரும்புகிறோம். ஆனால் எங்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. ஆகவே நாங்கள் உடல்நலமில்லை என்று சொல்லி மருத்துவ விடுப்பை எடுத்துக் கொண்டு வருகிறோம்.”

அவர்களிடம் நான் சொன்னேன் :” அது சரியான வழியல்ல. நீங்கள் வரமுடியாதது என்பது ஒரு பொருட்டே இல்லை, ஆனால் பொய்யைச் சொல்லாதீர்கள்.”

சத்ய வ்ரதத்தை கடைப்பிடியுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் சர்வேஸ்வரனின் தரிசனத்தைப் பெறுவீர்கள்.

நீங்கள் பிரார்த்தனையால் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். பிரார்த்தனையின் மூலமாக உங்களிடம் ஞானம் உதிக்கும்.  அந்த பிரார்த்தனை : அன்னம் ப்ரஹ்மம்; ரஸோ விஷ்ணு: போக்தா தேவோ மஹேஸ்வர: வேறு எந்த ஆன்மீகப் பயிற்சியும் தேவையில்லை.

ஆன்மீக சாதகர்களுக்கு ஒன்பது விதமான பக்தி சொல்லப்பட்டிருக்கிறது.

அவை : ஸ்ரவணம் (கேட்டல்)

கீர்த்தனம் ( பாடுதல்)

விஷ்ணுஸ்மரணம் ( விஷ்ணுவை தியானித்தல்)

பாத ஸேவனம் ( அவரது பாதத்தில் சேவை புரிதல்)

வந்தனம் (வணங்குதல்)

அர்ச்சனம் (அர்ச்சித்தல்)

தாஸ்யம் (சேவை புரிதல்)

ஸ்நேஹம் (நட்பு பாராட்டல்)

ஆத்ம நிவேதனம் ( ஆத்ம சமர்ப்பணம்)

 நீங்கள் இறைவனுடன் நட்பு கொள்ள வேண்டும். இறைவன் உங்கள் நண்பன் என்றால்  உலகம் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் இன்று  இறைவனுடனான நட்பை துரதிர்ஷ்டசாலிகள் இழந்து வருகின்றனர். இறைவனுடன் நட்புக் கொள்வது என்பது சுலபமல்ல. ஆனால் இதற்கென நீங்கள் சாத்தியமான அனைத்து முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இறைவனுடன் நட்பைக் கொண்டு விட்டால் அதன் அனைத்து ஆதாயங்களையும் சாதனா (ஆன்மீகப் பயிற்சி) மூலம் நீங்கள் பெற வேண்டும். வெற்றுப் பேச்சில் காலத்தை வீணாக்க வேண்டாம்.

அன்புத் திருவுருவங்களே!

எப்போதும் உண்மையே பேசுங்கள். அது தான் இன்றைக்கு நீங்கள் கற்க வேண்டிய விஷயம். ஸத்தியமே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை. ஸத்தியமே கடவுள். ஆகவே ஸத்திய வழியிலிருந்து ஒரு போதும் விலக வேண்டாம்.

***

அடுத்த பகுதியுடன் பாபாவின் உரை நிறைவுறும்

Leave a comment

Leave a comment