
Written by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 1 DECEMBER 2019
Time in London – 6-34 AM
Post No. 7283
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்

அத்வைதம் என்றால் இரண்டு என்பதே இல்லை; ஒன்று தான் என்று உபதேச உரைகள் கூறுகின்றன. ஏகம் ஏவ; அத்விதீயம் ப்ரஹ்ம
ப்ரஹ்மம் ஒன்றே; இரண்டு இல்லை!
இது எப்படி? நான் இதோ இருக்கிறேன்.
நானே இல்லை; ப்ரஹ்மம் தான் என்பது எப்படிச் சரியாகும்?
கேள்வி நல்ல கேள்வி தான்!
இதை விளக்க ஒரு அருமையான குட்டிக் கதையை ஸ்வாமி ஸர்வப்ரியானந்தா கூறுகிறார்.
ஸ்வாமிஜி நியூயார்க்கில் உள்ள வேதாந்தா சொஸைடியின் பொறுப்பு அமைச்சர் (Minister-in-charge of the Vedanta Society of New York, USA).
அவர் பிரபுத்த பாரத ஜனவரி 2019 யோகா சிறப்பிதழில் ‘அஸ்பர்ஷ யோகா’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இந்தக் கதையைக் கூறுகிறார்.
கதைக்கு வருவோம்; கருத்தைப் புரிந்து கொள்வோம்!
***

காசி இளவரசி!
முன்னொரு காலத்தில் கலைகளைப் பெரிதும் ஆதரித்து வந்த ஒரு மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். ஒரு சமயம் அவனது அரசவையில் நாடகம் ஒன்று நடத்த ஏற்பாடானது. அந்த நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் காசியின் இளவரசி பாத்திரம். அந்தப் பாத்திரத்திற்கு ஏற்ற பெண் குழந்தை கிடைக்கவில்லை.
ராணி கூறினார்;”பரவாயில்லை! நமது இளவரசனையே அந்தக் காசி இளவரசி பாத்திரத்தில் நடிக்க வைத்து விடுவோம்”
இளவரசனுக்கு வயது ஐந்து. அவனுக்கு இளவரசியின் அலங்கார ஆடைகள் அணிவிக்கப்பட்டன. அவன் காசி இளவரசியாக்கப்பட்டான்.
நாடகம் அருமையாக நடந்தது.காசி இளவரசி பாத்திரத்தில் இளவரசன் அற்புதமாக நடித்து விட்டான். அனைவரும் பாராட்டினர்.
ராணி அழகிய காசி இளவரசியை அப்படியே ஒரு ஓவியமாக வரையுமாறு தன் அரசவை ஓவியருக்குக் கட்டளை இட்டார்.
ஓவியமும் பிரமாதமாக தத்ரூபமாக அப்படியே வரையப்பட்டது.
பதினைந்து வருடங்கள் உருண்டோடின. இளவரசன் வளர்ந்து அழகிய வாலிபன் ஆனான். இளவரசனுக்கே உரித்தான அனைத்துச் செயல்களையும் நன்கு அவன் செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் அவன் தன் அரண்மனையில் பழைய பொருள்கள் உள்ள அறைக்குச் சென்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போது அழகிய ஓவியம் ஒன்று அவனைக் கவர்ந்தது.
அழகிய காசி இளவரசியின் ஓவியம் தான் அது!
“ஆஹா! என்ன அழகு! மணந்தால் இந்தப் பெண்ணையே தான் நான் மணந்து கொள்வேன். இவளை மணக்காவிட்டால் நான் சந்தோஷமாகவே வாழ முடியாது” என்ற எண்ணத்தில் மூழ்கிய இளவரசன் அது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அவன் கொஞ்சம் வெட்கப்பட்டதால் தாயாரிடமோ தந்தையிடமோ கூட இது பற்றிப் பேசவில்லை.
இளவரசன் சில நாட்களாக ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதை அனைவரும் கவனித்தனர்.
கடைசியில் வயதான மந்திரி அவனை அணுகி, “இளவரசரே!சில நாட்களாக ஏதோ ஒரு சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கிறீர்கள். என்னிடம் அதைச் சொல்லக் கூடாதா?” என்று மெல்ல வினவினார்.
இளவரசன் மெல்ல வாய் திறந்து,”நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்.” என்றான்.
“நல்லது, அந்தப் பெண் யார்?” என்று கேட்டார் மந்திரி.
“ஓ! அவள் காசி இளவரசி” என்றான் இளவரசன்.
“நல்லது! ஒரு இளவரசி தான் உங்களுக்கு ஏற்றவள். அவளை எப்போது பார்த்தீர்கள்?”
“அவளை நான் பார்க்கவில்லை. ஆனால் அவளது ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன்.”
“சரி, அந்த ஓவியம் எங்கே இருக்கிறது?”
“அது ஒரு அறையில் இருக்கிறது. வாருங்கள், உங்களுக்கு அதை நான் காண்பிக்கிறேன். அந்த ஓவியம் அவள் ஐந்து வயதாக இருக்கும் போது வரையப்பட்ட ஒன்று.”
இருவரும் அந்த அறைக்குச் சென்றனர். இளவரசன் காசி இளவரசியின் ஓவியத்தை மந்திரிக்குக் காண்பித்தான்.
மந்திரிக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது.
அவர் இளவரசனிடம் கூறினார்:”இளவரசே! அது காசி இளவரசியின் படம் இல்லை.”
“அது காசி இளவரசியாக இல்லாது போனால் போகட்டும்; யாராக இருந்தாலும் சரி, அவளை தான் நான் மணப்பேன்.”
“இளவரசே! பல ஆண்டுகளுக்கு முன்பு நமது அரண்மனையில் ஒரு நாடகம் நடந்தது.அந்த இளவரசி பாத்திரத்தில் நடிக்க யாரும் இல்லை. அதற்குத் தகுதி வாய்ந்தவர் தாங்கள் தான் என்று எண்ணி உங்களுக்கு அந்த வேஷத்தை அளித்தோம். அந்தக் காசி இளவரசி உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. நீங்களே தான் அது!”
இப்போது இளவரசனின் மனதில் இருந்த ஆசை என்ன ஆனது? அது உடனடியாக மறைந்து விட்டது. ஆனால் அது ஏன் உடனே மறைந்தது?
அது நிறைவேற முடியாத ஒன்று என்பதாலா?
இல்லை. காசி இளவரசி அந்த இளவரசரைத் தவிர வேறு யாரும் இல்லை!
அவரே தான் காசி இளவரசி! எப்போதுமே அந்த இளவரசனே தான் காசி இளவரசி!!
அந்த இளவரசரைத் தவிர வேறு ஒன்று உண்டு என்ற இரட்டை என்ற எண்ணம் அவரது ஆசையால் உதித்தது. அந்த இரட்டையை அவர் விரும்பினார். அதனால் அவருக்கு ஒரு சங்கல்பம் உருவானது.
அது அவரது மனதில் வளர்ந்தது. ‘எனக்கு இது வேண்டும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
இதுவே இன்னொரு விதமாகவும் இருந்திருக்கக்கூடும். “இது மோசம். எனக்கு இது வேண்டாம்” என்று இருந்திருக்கக் கூடும்.
எனக்கு இது வேண்டும் என்பது ராகத்தினால் – பற்றினால் உருவானது.
எனக்கு இது வேண்டாம் என்பது த்வேஷத்தினால் உருவாவது.
அந்த ராக-த்வேஷம் தான் சம்சாரம்!
ஏன் சங்கல்பம் மறைந்தது? ஏனெனில் இரட்டை என்பது மறைந்தது.
“என்னைத் தவிர காசி இளவரசி என்ற இரட்டை இல்லை” –
இதைத் தான் அந்த இளவரசன் உணர்ந்தான்.
த்வைதம் – இரட்டை – மறைந்தது.
சங்கல்பம் மறையும் போது ராகம்-த்வேஷம், பற்று- வேண்டாமை இரண்டும் போகிறது.
ஆத்மா மட்டுமே நிற்கிறது!
ஆத்மனுக்கு எதை விட வேண்டும்? அல்லது எதைச் சாதிக்க வேண்டும்?
அது எப்போதும் என்னுடனேயே இருக்கிறது. அது எப்போதும் நானாகவே இருக்கிறது.
***
அற்புதமான இந்தக் கதை ‘மனமே இல்லை’ என்ற நிலைக்கான ஒரு சரியான உதாரணக் கதையாகும்.
ஸ்வாமிஜியின் கதையைச் சற்று சிந்தித்தால் உயரிய உபதேசம் ஒன்றைப் பெற்றவர்களாவோம்.
***
நன்றி:Prabuddha Bharata : January 2019 issue – Yearly Subscription rs 150/ only; email:prabuddhabharata@gmail.com
பிரபுத்தபாரதம் ஸ்வாமி விவேகானந்தரால் 1896ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

