மஹாபாரத ரகசியம் – கடவுளின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்? (Post No.7690)

Written by London Swaminathan

Post No.7690

Date uploaded in London – 14 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

உலக வாழ்க்கையில் வெற்றி பெற அனைத்து ரகசியங்களையும் தன்னுள் அடக்கியுள்ள மாபெரும் நூல் மஹாபாரதம்.

இதில் விடை பெற முடியாத கேள்விகளே இல்லை.

பல்வேறு பகுதிகளைக் கோர்த்து ஒரு விஷயம் பற்றிய பல ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும். இதற்காக மஹாபாரதத்தைத் திருப்பித் திருப்பிப் படித்து ரகசியங்களை உணர்ந்து அதன் படி வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம்.

கடவுளின் அருளைப் பெறுவது எப்படி, யார் கடவுளின் அருளைப் பெறுவர் என்ற கேள்விக்கு அநுசாஸன பர்வம் 35ஆம் அத்தியாயம் பதில் சொல்கிறது.

யுதிஷ்டிரர் பீஷ்மரை நோக்கி, “ இந்த உலக வாழ்க்கையில் தனக்கு நன்மையை விரும்பும் ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட ஒழுக்கமுள்ளவனாகி உலக வாழ்க்கையை நடத்த வேண்டும்” என்று கேட்கிறார்.

அதற்கு பீஷ்மர் தரும் பதிலில் வெற்றிக்கான வாழ்க்கை ரகசியம் தரப்படுகிறது.

“தான தர்மங்களைச் செய்து பரிசுத்தமான மனதுடன் நாராயணன், சங்கரன் ஆகியோரிடம் பக்தி வைத்தல் வேண்டும்.

சாதுக்களை பூஜித்தல் வேண்டும்.தியானித்து ஜபம் செய்ய வேண்டும்.

அத்துடன் தேகத்தினால் செய்யப்படும் மூன்று வகை கர்மங்கள்,

வாக்கினால் செய்யப்படும் நான்கு வகை கர்மங்கள்,

மனதினால் செய்யப்படும் மூன்று வகை கர்மங்கள்,

ஆக இந்த பத்து வகை கர்மங்களையும் விட்டு விட வேண்டும்.

தேகத்தினால் செய்யப்படும் மூன்று வகை கர்மங்களாவன :-

  1. உயிரைப் போக்குவது
  2. திருடுவது
  3. பிறன் மனைவியைத் தொடுவது

இந்த மூன்று கர்மங்களும் தேகத்தினால் செய்யப்படும் பாவங்கள். இவற்றை முற்றிலுமாக விட்டு விட வேண்டும்.

அடுத்து வாக்கினால் செய்யப்படும் நான்கு வகை கர்மங்களாவன :-

  1. கெட்ட பேச்சு
  2. கடும் சொல்
  3. கோள் சொல்வது
  4. பொய் சொல்வது

இந்த நான்கு கர்மங்களும் வாக்கினால் செய்யப்படும் பாவங்கள். இவற்றை வாக்கினால் செய்யக்கூடாது; மனதினாலும் நினைக்கக் கூடாது.

அடுத்து மனதினால் செய்யப்படும் மூன்று வகை கர்மங்களாவன :-

  1. பிறர் பொருளை விரும்பாமை
  2. எல்லா பிராணிகளிடத்திலும் அன்பு
  3. புண்ய பாவங்களுக்குப் பலன் உண்டு என்ற நம்பிக்கை ஆகிய இந்த மூன்று வகைக் கர்மங்களை மனதினால் செய்து இவற்றிற்கு எதிரானவற்றை விலக்கி விட வேண்டும்.

மனிதன் வாக்கினாலும், தேகத்தினாலும், மனதினாலும் கெட்ட கர்மத்தைச் செய்யக்கூடாது.

இவ்வுலகில் நல்லதையே செய்து நாராயணரிடத்தில் பக்தி உள்ளவன் அவருடைய அருளைப் பெறுவான்; மேலான பதத்தை அடைவான்.”

இப்படிக் கூறி தர்மபுத்திரருக்கு வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தைச் சொல்வதோடு, கடவுளின் அருளை யார் பெறுவர் என்பதையும் துல்லியமாக விளக்குகிறார் பீஷ்மர்.

இந்த கர்ம ரகசியம் அநுசாஸன பர்வத்தின் முதல் அத்தியாயத்தில் இன்னும் தெளிவாக மனதில் உரைப்பது போலச் சொல்லப்படுகிறது.

பீஷ்மர் தான் உட்பட அனைவரும் கர்மத்தின் வசப்பட்டவர்கள் என்கிறார்.

“இந்த உலகத்தில் கர்மம் ஒரு பாகஸ்தன். ஒவ்வொருவனுக்கும் தன் தன் வினை சம்பந்தமே இலக்கணம்.

கர்மங்கள் ஏவுவதற்குத் தக்கபடி தான் மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏவுகின்றனர்.

மண்ணுருண்டைகளினால் ஒருவன் தான் விரும்பியவற்றை எல்லாம் செய்து கொள்வது போல, மனிதன் கர்மங்களைச் செய்து அவற்றின் பலனைப் பெறுகிறான்.

நிழலும் வெயிலும் எப்போதும் இடைவிடாமல் நெருங்கிச் சேர்ந்திருப்பது போல கர்மமும், அதைச் செய்தவனும் – கார்யமும், கர்த்தாவும் – முன்வினைகளால் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.”

கர்ம ரகசியம் இப்படி விளக்கப்படுகிறது, பீஷ்ம பிதாமகரால்!

இன்னும் ஒரு பெரிய அரிய வாக்கியம் பீஷ்மரால் தர்மபுத்திரரிடம் உரைக்கப்படுகிறது.

“இந்தக் கர்மங்களின் ஸ்வரூபம் புலன்களுக்கு எட்டாத நுட்பமன்றோ?!

ஆம், கர்ம ரகசியம் எளிதில் யாராலும் அறிய முடியாத ஒன்று.

ஆனால், அறியக் கூடியது சாஸ்திர தர்மங்களின் படி நல்லதை எண்ணி, நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும் என்பது தான்!

tags- மஹாபாரத ரகசியம், கடவுளின், பீஷ்மர்,

***

Leave a comment

Leave a comment