
WRITTEN BY S NAGARAJAN
Post No.7713
Date uploaded in London – – 19 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
மஹரிஷி சரபங்கர்!
ச.நாகராஜன்
இராமபிரான் வாழ்ந்த காலத்தில் தண்டக வனத்தில் வாழ்ந்த பெரும் மஹரிஷி சரபங்கர்.
அரிய தவத்தை பல கல்ப காலம் செய்து வந்த அவர் இராமபிரானின் வருகைக்காகவே காத்திருந்தார்.
அவரை தரிசித்த பின் தன் உடலை அக்கினிக்கு ஆகுதியாக அளித்து பெறுதற்கரிய பெரும் மோக்ஷத்தை அடைந்தார்.
சரபங்க மஹரிஷி இராமபிரானை தரிசித்த விவரம் பற்றி வால்மீகி ராமாயணத்தில் ஆரண்யகாண்டத்தில் ஐந்தாவது அத்தியாயம் விவரமாகக் கூறுகிறது. இதில் 40 ஸ்லோகங்கள் உள்ளன.
கம்ப ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் இரண்டாவது படலமாகத் திகழ்வது சரபங்கன் பிறப்பு நீங்கு படலம். இதில் அருமையான 44 கவிகள் உள்ளன.
சரபங்கன் என்பதற்கு (மன்மத) பாணங்களைப் பங்கப்படுத்தினவன் (அதாவது வென்றவன்) என்று பொருள்.
முக்குற்றங்களில் முதலாவதாகத் திகழும் காமத்தை வென்ற மாமுனிவன் என்பதால் மற்ற வெகுளி, மயக்கத்தையும் இவன் வென்றது தானே புலப்படும்.
சரபங்கரின் பெருந்தவத்தை நெடுந்தவம் என கம்பன் வர்ணிக்கிறான். இந்தத் தவத்தைக் கண்டு வியந்த பிரம்மதேவன் இந்திரனை அனுப்பி அவனை தனது லோகமான சத்தியலோகத்திற்கு அழைத்து வருமாறு கூற இந்திரனும் ஐராவதத்தில் ஏறி சரபங்கரின் ஆசிரமத்திற்கு வந்தான்.
அவனை வரவேற்று உபசரித்த சரபங்கர் பிரம்மதேவனின் சத்தியலோக அழைப்பை இந்திரன் கூறக் கேட்டார்.
வால் அறிவான் எனக் கம்பன் புகழும் பெரும் தத்துவ ஞானியான சரபங்கர்
‘அல்லேன்’ – ‘இதற்கு உடன்பட்டு வரமாட்டேன்’ என்று கூறுகிறார்!
காரணம்?
‘என் அரும் தவமோ கற்பம் பல சென்றது; அற்பம் கருதேன்’ – பல கல்பங்கள் கழியப் பெற்ற பெரும் தவம் என்னுடையது. ஆகவே அற்பமான பதவியை மனதாலும் நினைக்க மாட்டேன் என்றார் சரபங்கர்.

சத்தியலோகம் என்றாலும் கூட அதுவும் ஒரு காலத்தில் அழியக் கூடியது தானே!
ஆகவே அழியா வைகுந்த பதத்தை அடைவதே எனது நோக்கம் என்றார் அவர்.
இந்திரன் அப்போது ராமபிரான் அங்கு வந்ததைக் கண்டு சரபங்கரிடம் விடை பெற்றான்.
பெரும் காரியமாக வந்துள்ள ராமனை இப்போது தரிசிக்க மாட்டேன். இராவணனை வதம் செய்யும் காரியம் முடிந்த பிறகு சந்திப்பேன் என்று கூறி விடை பெறுகிறான்.
இது வால்மீகி அளிக்கும் சித்திரம்.
கம்பனோ இந்திரன் இராமபிரானைக் கண்டதையும் இராமனைத் துதிப்பதையும் கூறுகிறார்; இங்கு வால்மீகியிடமிருது அவர் மாறுபடுகிறார்.
இங்கு கம்பன் ஆறு கவிகளில் இந்திரன் துதியைக் கூறுகிறார்.
இதில் ஒரு அதிசயம் கம்பன் கவிதையில் இருப்பதால் அதைத் தனியே (அடுத்த கட்டுரையில்) காணலாம்!
உள்ளே வந்த இராமபிரானை அன்புடன் வரவேற்ற சரபங்கர் தாங்க முடியாத மகிழ்ச்சியால் அழுதார்.
(‘ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான்’ – கம்பர்)
ஒரிரவு இராமன் சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் சரபங்கர் ஆசிரமத்தில் தங்கினார். பின்னர் வனத்தில் வசிக்க இடம் கேட்க, சரபங்கர் ‘சூசௌ தபஸ்வினம் சுதீஷ்ணம் அபிகச்ச’ – பரிசுத்தமான பிரதேசத்தில் தவம் புரியும் சுதீஷ்ண ரிஷியை சென்று காண் – எனக் கூறுகிறார்.’
பின்னர் அக்னியை வளர்த்து நெய்யினால் ஹோமம் செய்து தனது மனைவியுடன் அக்கினியில் புகுந்தார்.
இதை ஆச்சரியத்துடன் ராமர், சீதையுடனும் லக்ஷ்மணருடனும் பார்த்தார்.
பல உலகங்களைக் கடந்து பிரம்மலோகத்தை சரபங்கர் அடைய பிரம்ம தேவன் ‘சுஸ்வாகதம்’ – நல்வரவாகட்டும் – என்று கூறி அவரை வரவேற்றான்.
‘தீயிடை நுழைவது ஓர் தெளிவினை உடையான், ‘நீ விடை தருக என நிறுவினன்’” – கம்பர்.
சரபங்கர் அது வரை தான் ஈட்டிய நல்வினைகளை எல்லாம் இராமபிரானின் திருவடிகளில் சமர்ப்பித்து அதன் பயனாக யாரும் பெறுதற்கு அரிய பெரும் பதத்தைப் பெற்றான்.

சரபங்க மஹரிஷியின் வரலாறு ஆச்சரியமான ஒரு வரலாறு.
வால்மீகி முனிவர் விவரிக்கும் ஸ்லோகங்களையும், கம்பனது கவிகளையும் படிப்போர் உளம் மகிழ்ந்து பக்தியால் நெகிழ்வர்!
***
அடுத்த கட்டுரை கம்பன் தரும் ஒரு ஆச்சரியம் சரபங்கன் பிறப்பு நீங்கு படலத்தில் உள்ளது. அது என்ன என்பது பற்றித் தான்!.