அறிவியல் வியக்கும் யோகா!(Post No.7717)

SWAMI SIVANANDA OF RISHIKESH

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7717

Date uploaded in London – – 20 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பாக்யா  1-3-2020 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை – அத்தியாயம் 443. இந்த இதழில் பத்தாம் ஆண்டு தொடங்குகிறது.

(பத்தாம் ஆண்டு முதல் கட்டுரை)

அறிவியல் வியக்கும் யோகா!

ச.நாகராஜன்

A B C D E …….. OF YOGA

 அன்பு வாசகர்களுக்கு வணக்கம். 4-3-2011 பாக்யா இதழில் ஆரம்பித்த அறிவியல் துளிகள் தொடர் ஒன்பது ஆண்டுகள் முடிந்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு முழு முதல் காரணம் வாசகர்களின் அன்பும் ஆதரவும் ஆர்வமுமே. வாசகப் பெருமக்களுக்கு என் அன்பு கலந்த நன்றி. சுவர் இல்லையேல் சித்திரம் ஏது? இதைத் தொடர்ந்து வெளியிட ஊக்கமளிக்கும் பாக்யா ஆசிரியர் டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கும், பாக்யா ஆசிரியக் குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.                 ச.நாகராஜன், பெங்களூரு

யோகா பற்றி ஆயிரக்கணக்கான சோதனைகளை அறிவியல் உலகம் உலகெங்கும் நடத்தி விட்டது. பிரமிக்க வைக்கும் யோகாவின் பலன்களை அறிவியல் பட்டியலிட்டுத் தருவதோடு அதை அனைவரும் மேற்கொண்டு பலன்களை அடையுமாறும் வலியுறுத்துகிறது.

மனதை ஒருமுகப்படுத்தி சில நிமிடங்கள் செய்யும் தியானத்தின் பலனே தனி. (தியானம் பற்றியும் -அத்தியாயம் 54- 9-3-2012 இதழ்- ஐன்ஸ்டீன் பற்றியும் – அத்தியாயம் 7- 15-4-2011 இதழ்) இந்தத் தொடரில் விளக்கப்பட்டிருப்பதால் அந்த விவரங்கள் மீண்டும் இங்கு தரப்படவில்லை)

 கவனத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒரு தனிமனிதனின் உணர்வில் செல்வாக்கை ஏற்படுத்தும் ஒரு உத்தியே தியானம் என அறிவியல் தியானத்தை வரையறுத்துக் கூறுகிறது. ஆனால் இதைத் தோற்றி வளர்த்துக் காக்கும் இந்து மதமோ, “ஆன்மாவை உணர்வதற்கான அடிப்படைக் கலையே யோகா” என்று கூறுகிறது.

தியானத்தின் பலன்கள் எண்ணற்றவை. அவற்றில் சில இதோ:-

  1. வெவ்வேறு வகையான மனிதர்களிடம் அவர்கள் எந்த வகையாக இருந்தாலும் எப்படி வேறுபட்டிருந்த போதிலும் தியானம் பெரிய அளவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  2. மருத்துவத்தில் சுயக்கட்டுப்பாட்டு உத்தியான அது பெரும் நல்விளைவை ஏற்படுத்துகிறது.
  3. கவலையையும் மன அழுத்தத்தையும் அது போக்குகிறது.
  4. மனிதனின் நிஜமான நிலைமைக்கும் இலட்சியமான ஒரு நிலைமைக்கும் அது நல்லதொரு உறவை ஏற்படுத்துகிறது.
  5. மருத்துவத்துறையில் அது ஒரு அங்கமாகவே ஆகி விடுகிறது.
  6. நான் என்னும் அகங்காரத்தை அது போக்குகிறது.
  7. ஒரு மனிதனை ‘இந்தக் கணத்தில்’ (Living in Present) என்ற தற்போதைய நிலையில் அது வைக்கிறது.
  8. தேவையற்ற சிந்தனைகளை அகற்ற அது ஒரு நல்ல வழியாக அமைகிறது.
  9. ஆரோக்கிய மேம்பாட்டிற்கான நல்ல ஒரு  கருவி அது.
  10.  தியானம் மூலமாக உடலைக் கட்டுப்படுத்தி வியக்க வைக்கும் அதீதமான செயல்களைச் செய்ய முடிகிறது. (Levitation எனப்படும் அந்தரத்தில் மிதப்பது உட்பட்ட பல சித்திகளை அடைய முடியும்)
  11. தியானம் மூலமாகத் தானியங்கி நரம்பு மண்டலத்தைக் கூடக் கட்டுப்படுத்த முடிகிறது.
  12.  மன அழுத்தம் சம்பந்தமாக ஏற்படுத்தும் நோய்களை தியானம் போக்குகிறது.
  13. மனிதனின் ஆற்றலின் எல்லையற்ற தன்மையை உணர்ந்து அதைச் செய்து காட்ட வைக்கிறது. (தொலைதூரத்தில் நடப்பதை உணர்வது போன்ற அதிமானுஷ செயல்கள்)
  14.  நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக ஏற்படும் பல்வேறு வியாதிகளைப் போக்குகிறது.
  15. மனித வாழ்க்கையின் எல்லையற்ற மதிப்பை அறிய வைக்கிறது.
  16. மிக எளிதாக ஒருவர் கற்கும் உத்தி தியானம் தான்.
  17. இதைக் கற்கப் பணச்செலவு ஏதும் இல்லை.
  18. இதைக் கற்க வயது வரம்பு எதுவுமில்லை.
  19. ஆண் பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் பொருத்தமானது இது.
  20.  தியானத்தை எங்கு வேண்டுமானாலும் ஒருவர் செய்யலாம்.
  21. தியானத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒருவர் செய்யலாம்.
  22. தியானம் சுலபமாகக் கற்று, செய்முறையில் கடைப்பிடிக்க வல்லது.
  23.  மதம், இனம், நாட்டு எல்லைகள் போன்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது இது.
  24. இதைச் செய்ய அந்தஸ்து எதுவும் கிடையாது.
  25. இதனால் உடல் ரீதியாக ஒருவர் மேம்பாடு அடையலாம்.
  26. இதனால் மனோ ரீதியாக ஒருவர் மேம்பாடு அடையலாம்.
  27. இதனால் ஆன்மீக ரீதியாக ஒருவர் மேம்பாடு அடையலாம்.
  28. மனித பாரம்பரியத்துடன் தொடர்பு படுத்தப்படும் அனைத்து நல்ல குணங்களையும் தியானம் மூலமாக அடையலாம்.
  29. அதிசயக்கத்தக்க, பிரமிக்க வைக்கும் அனுபவத்தைத் தருவது தியானம்.
  30.  நீண்ட ஆயுளைத் தருவது தியானம்.
  31. கெட்ட கனவுகளை நீக்குவது தியானம்.
  32. இரவில் நல்ல உறக்கத்தைத் தர வல்லது தியானம்
  33.  மன அழுத்தம் மேலிட்ட நிலையில் ஒருவர் செய்யும் செயல்களான தாடையை இறுக்குவது மற்றும் முதுகுவலி, தோள்வலி ஆகியவற்றை அகற்றுவது தியானமே.
  34.  எப்போதும் மன அமைதியைத் தருவது தியானம்.
  35. எப்போதும் தூய்மையாக, மலர்ச்சியுடன் புன்னகை பூத்த முகத்துடன் இருக்க வைப்பது தியானம்.
  36. வெட்க உணர்ச்சியை நீக்குவது தியானம்.
  37. Intution எனப்படும் உள்ளுணர்வு ஆற்றலைத் தர வல்லது தியானம். ஆறாவது அறிவு என்று சொல்லப்படும் இந்த உள்ளுணர்வால் தான் அரும் பெரும் கண்டுபிடிப்புகள் உலகில் கண்டுபிடிக்கப்பட்டன; கண்டுபிடிக்கப்படுகின்றன!
  38. படைப்பாற்றல் திறன் அதிகரிக்கவும் உதவுவது தியானமே.

ஒரு பொருளைத் தொலைத்து விட்டால் அதை எங்கே வைத்தோம் என்று அலறித் தவிக்கிறோம். இரவில் ஓய்வாகப் படுக்கையில் படுக்கும் போது திடீரென்று அதை வைத்த இடம் நினைவுக்கு வருகிறது. ஓய்வு மனதின் ஆற்றலைச் சீராக்கும். இதற்கு வழி வகுப்பது தியானமே.

ஐன்ஸ்டீன் எப்படி ஒப்புமைக் கொள்கை எனப்படும் தியரி ஆஃப் ரிலேடிவிடியைக் கண்டுபிடித்தார் என்பதை பீட்டர் ரஸ்ஸல் என்னும் அறிஞர் தன் புத்தகத்தில் விளக்கும் போது ஐன்ஸ்டீனுக்கு எல்லா எண்ணங்களும் சித்திர வடிவில் மனதில் தோன்றும். பின்னர் அவர் அவற்றை கணிதச் சமன்பாடுகளாகவும், வார்த்தைக் கோவைகளாகவும் மாற்றுவது வழக்கம் என்கிறார். இதையே உள்ளுணர்வு ஆற்றல் என்கிறார் அவர். லாரி நாடல் (Laurie Nadel) , ‘தி சிக்ஸ்த் சென்ஸ்’ என்ற தனது புத்தகத்தில் இந்த உள்ளுணர்வு ஆற்றல் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த ஆற்றலைத் தருவது தியானமே.

மஹரிஷி மஹேஷ் யோகி கற்பித்த ஆழ்நிலை தியானத்தைப் பற்றி ஏராளமான அறிவியல் சோதனை முடிவுகள் இரு பாகங்களாக படங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது; விவரங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

யோகா பயில்வோம்; தியானத்தைச் செய்வோம்; அனைத்து வழிகளிலும் மேம்படுவோம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

ராட்சத ராட்டினம் என்று அழைக்கப்படும் ஜெயிண்ட் வீல் இல்லாத பொருட்காட்சி இல்லை.இதைக் கண்டுபிடித்தவர் ஜார்ஜ் டபிள்யூ. கேல் ஃபெர்ரிஸ் (George W.Gale Ferris) என்பவர். இவர் ஒரு மெக்கானிகல் எஞ்ஜினியர். 1893ஆம் ஆண்டு கொலம்பஸ் அமெரிக்காவில் இறங்கியதன் 400வது ஆண்டு நினவாக சிகாகோவில் அகில உலக கொலம்பியன் பொருட்காட்சி நடந்தது. அதில் இதை அறிமுகப்படுத்த எண்ணினார் அவர். ஆனால் பொருட்காட்சியை ஏற்பாடு செய்த நிர்வாகிகளோ பயந்தனர். இவ்வளவு பெரிய ராட்டினம் அபாயமில்லாமல் சுற்றுமா, ஏடாகூடமாக ஏதாவது ஆகி விட்டால் கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமே என்று பயந்தனர். இருந்தாலும் 1889இல் பாரிஸில் நடந்த பெரும் பொருட்காட்சிக்காக ஈஃபில் டவர் அமைக்கப்பட்டிருப்பதற்குப் போட்டியாக ஏதாவது செய்ய வேண்டிய நிர்பந்தமும் அமெரிக்கர்களுக்கு இருந்தது. ஆகவே துணிந்து ராட்சத ராட்டினத்தை ஓட விட்டனர். 23-6-1893இல் துவக்க விழா நடைபெற்றது. என்ன ஆச்சரியம், பிரபலங்கள் உட்பட அனைவரும் முதலில் பார்க்க வந்தது இதைத் தான்! 36 பெட்டிகள் இருந்தன. ஒரு பெட்டியில் 60 பேர் வீதம் ஒரு தடவையில் 2160 பேர் இதில் ஏறிச் சுற்றலாம். சக்கரத்தின் குறுக்களவோ 76 மீட்டர் அதாவது 249 அடி.

இதில் ஏறி உயரத்திற்குப் போனவர்கள் நடுநடுங்கி சிகரட்டையும் மதுவையும் குடித்து பதைபதைப்பைப் போக்கிக் கொண்டனர். ராட்டினத்தில் ஒரு தவறும் ஏற்படவில்லை. ஒரு முறை கூட நிற்கவில்லை. அழகாகச் சுற்றி அனைவரையும் பிரமிக்க வைத்து அசத்தியது. ஃபெர்ரிஸுக்கும், பொருட்காட்சி நிர்வாகிகளுக்கும் அபாரமான நற்பெயர் கிடைத்தது. அன்றிலிருந்து பெரிய பொருட்காட்சி என்றால் ராட்சத ராட்டினம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது!

TAGS- யோகா , ஆசனம், தியானம் ,விஞ்ஞானம், ராட்சத ராட்டினம்

***

Leave a comment

Leave a comment