தமிழுக்கு இலக்கணம் வகுக்க ஏன் அகத்தியரை சிவபெருமான் அனுப்பினார்? (Post No.7718)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7718

Date uploaded in London – 20 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

தமிழுக்கு இலக்கணம் வகுக்க ஏன் அகத்தியரை  சிவபெருமான் அனுப்பினார்? (Post No.7718)

நமது புராணங்களில் இரண்டு முக்கியச் செய்திகள் உள்ளன.

ஒன்று, வடக்கில் மக்கட்தொகை பெருகியதால், ஒரு குழு தெற்கு நோக்கி அனுப்பப்பட்டது. அந்தக் குழுவுக்கு அகத்தியர் தலைமை தாங்கி வந்தார். இரண்டாவது தமிழுக்கு இலக்கணம் வகுக்க அகத்தியரை சிவ பெருமான் அனுப்பினார். தமிழே தெரியாத அகத்தியர் எப்படி தமிழ் மொழிக்கு இலக்கணம் அமைக்க முடியும்? என்ற கேள்வி எழும். இதற்கும் விடை சொல்லிவிட்டனர் தமிழ்ப் புலவர்கள் . தமிழ் மொழியைத் தோற்றுவித்த சிவபெருமானும் அவருடைய மகனான முருகப் பெருமானும் அகத்தியருக்கு தமிழ் மொழியைக் கற்பித்தனர். இதைக் கம்பன் முதல் பாரதியார் வரை பாடிவிட்டனர். முருகன் அளித்த தமிழ் பற்றி அருணகிரிநாதர் பல இடங்களில் பாடி இருக்கிறார்.

என்னுடைய கருத்து இரண்டும் ஒரே வேரிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்த இரண்டு மொழிகள்தான். ஆனால் காலப்போக்கில் இரண்டும் வளம் பெற்று ஓங்கி வளர்ந்ததால், இரண்டுக்கும் உள்ள தொடர்பு வெளிப்படையாகத் தெரியவில்லை.

அத்தோடு மொழியியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள்  என்று சொல்லிக் கொண்டு வெளிநாட்டிலிருந்து வந்தோர் திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்றைக் கற்பித்து மற்றொரு புறம் இந்திய ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்பதைக் கற்பித்து இரண்டும் வேறு வேறு என்று வேற்றுமை கற்பித்தனர். இது சரியல்ல என்பதற்குச் சான்றுகள் தருவேன்.

திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் முதலிய மொழிகளுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு போல உலகில் வேறு எந்த மொழியையும் தமிழுக்கு அருகில் கொண்டு வரமுடியவில்லை. உலகில் எவ்வளவோ மொழிகளைத் தமிழுடன் தொடர்புபடுத்தி ஒவ்வொரு உலகத் தமிழ் மகாநாட்டிலும் எவ்வளவோ கட்டுரைகள் வாசிக்கப்பட்டு எழுத்திலும் வடிக்கப்பட்டுவிட்டன. ஆயினும் சில பல சொற்களோ. வழக்குகளோ இருப்பதைத் தவிர ஒருவர் பேசினால் மற்றொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்றால் முடியவே முடியாது என்றே பதில் வரும். அதாவது மேம்போக்கான ஒற்றுமைகளே. உலகில் எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையே இப்படித் தொடர்பைக் காட்ட இயலும். மற்றொரு விஷயம் அருகருகே இரண்டு மொழி பேசுவதால் ஒன்றின் மீது  மற்றொன்று ஏற்படுத்தும் தாக்கம் ஆகும். இவ்வகையில் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றின் மீது ஒன்றைப் பாதித்திருக்கலாம் என்பது உண்மையே. ஆயினும் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள உறவு ஆழமான உறவு என்பதைக் காண்போம்.

நான் ஒரு புதிய கருத்தை வெளியிட்டு வருகிறேன். பரஞ்சோதி முனிவர்கள் முதலானோர் மறைமுகமாக வெளியிட்ட கருத்து அது. அதாவது தமிழும் ஸம்ஸ்ருதமும் சிவ பெருமானின் உடுக்கையின் இரண்டு பக்கங்களில் இருந்து பிறந்தன. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரு தாயின் இரண்டு பிள்ளைகள்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியைஉலகமெலாம் தொழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்

கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்

–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

கடவுள் தந்த தமிழ்

வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி

நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்

தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

அவ்வாறில்லாவிடில் சிவ பெருமான், அகத்தியனை வடக்கிலிருந்து அனுப்பித் தமிழுக்கு இலக்கணம் செய்யக் கேட்டிருக்க மாட்டார். இந்த இரண்டு மொழிகளுக்குள்ள தொடர்பு போன்ற நெருக்கம் வேறு எந்த மொழிக்கும் இடையில் காண முடியாதது. சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் முதலிய பல அம்சங்களில் இரண்டும் ஒன்றே!

சிவன் எழுப்பிய உடுக்கை ஒலியிலிருந்து ஒரு புறம் சம்ஸ்கிருதமும் மறுபுறம் தமிழ் மொழியும் வந்தன என்பது தமிழ்ச் சான்றோர்களின் நம்பிக்கை. மஹேச்வர சூத்திரம் எனப்படும் 14 ஒலிகளிலிருந்து சம்ஸ்கிருதம் வந்ததை பாணினி என்ற உலகப் புகழ் பெற்ற இலக்கண வித்தகன் காட்டி இருக்கிறான். தொல்காப்பியர் இதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அங்கே தெரிந்துகொள்க என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். பாரதி கூட

“ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்

ஆன்ற மொழிகளுனுள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

-என்று பாடியுள்ளார். பாரதிக்கும் மேலான தமிழன் எவரேனும் உண்டோ?

அவரே உயர் சம்ஸ்கிருத மொழிக்கு நிகராக வாழ்ந்தேன் என்னை சிவ பெருமான் படைத்தார்  என்று சொல்லுகிறார்.

இந்தியாவின் இரண்டு பழைய மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமும் ஆகும். இந்த இரண்டு மொழிகளும் சிவனிடமிருந்து தோன்றியவை என்றும் ஒன்றுக்கு பாணிணியையும் மற்றொன்றுக்குக்கு அகத்தியனையும் இலக்கணம் எழுத சிவ பெருமானே பணித்தான் என்றும் ஆன்றோர் கூறுவர். இதை எல்லாம் பிற்காலக் கதைகள் என்று சொல்லுவோரும் கூட வியந்து போற்றக்கூடிய சில மொழியியல் அம்சங்கள் இரு மொழிக்கும் பொதுவாக அமைந்துள்ளன.

எனது நாற்பது ஆண்டுக்கால மொழி ஆய்வில் கண்ட சில உண்மைகளைப் பகிர்ந்து கொள்கிறேன். சுமேரியாவில் ‘’ஊர்’’ என்ற ஒரு இடம் உள்ளது. இது தமிழில் வரும் ‘’ஊர்’’ என்பதைப் போலவே இருப்பதாக எண்ணி தமிழர்கள் மகிழ்வர். இது புரம், புரி என்பதன் திரிபு என்றும் வட இந்தியா முழுதும் ஜெய்ப்பூர், உதய்பூர், நாக்பூர் என்று பல ‘’ஊர்’’கள் காஷ்மீர் வரை பரவிக் கிடப்பதால் இது சம்ஸ்கிருதமே என்றும் சொல்லி வேறு சிலர் மகிழ்வர். உண்மையில் ஒரு மொழி எப்படி இரு வகையாகப் பிரியும் என்பதற்கு இது சரியான எடுத்துக் காட்டு. அதாவது இச் சொல்லுக்கான மூலம் ஒன்றே. அது தமிழில் ஊர் என்றும் சம்ஸ்கிருதத்தில் புரம் என்றும் கவடு விட்டுப் பிரிந்தது.


இன்னொரு எடுத்துக் காட்டு மூலம் இதை விளக்குகிறேன். ஆங்கிலத்தில் எண் 1 என்பதற்கு ‘’ஒன்’’ என்பர். இது தமிழ் ‘’ஒன்று’’க்கு நெருக்கமானது. ஆனால் சம்ஸ்கிருதத்திலோ ‘’ஏகம்’’ என்பர். ஆங்கிலத்தில் எண் 8 என்பதற்கு ‘’எயிட்’’ என்பர். இது தமிழ் ‘’எட்டு’’ என்பதற்கு நெருக்கமானது. சிறிது ஆழமாகப் போய்ப் பார்த்தால் ‘ஒன்’ என்பது ‘யுன்’, ‘ஐன்’ என்று மாறி ‘ஒன்’ என்றாயிற்று என்பர். இதே போல ‘எட்டு’ என்பது ‘ஆக்டோ’, ‘அஷ்ட’ என்பதாக மாறி ‘’எயிட்/அயி’’ட் ஆயிற்று என்பர். ஆக ஒரு மூலச் சொல் இப்படி இருவகையாகப் பிரியமுடியும் என்று தெரிகிறது.

சில சொற்கள் தமிழில் இருந்து வந்ததோ என்றும் சில சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்ததோ என்றும் எண்ண வைக்கும். தமிழில் இருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் எப்படி உருவாயிற்று என்று பார்த்தால் கூட, வரலாறு, புவியியல், பிறமொழிப் படையெடுப்பாளர் ஆகியவற்றால் எல்லாம் எப்படி மொழிகள் உருவாகின்றன என்பது விளங்கும்

ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்


மீன், நீர், மயில் (மயூர) போன்ற தமிழ் சொற்கள் ரிக் வேதத்தில் இருப்பதாகவும், தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் காலம், உலகம், மனம், காமம் முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாகவும் அறிஞர்கள் சொல்லுவர். இதை எதிர்ப்போர் இவை எங்கள் மொழியில் இருந்து அங்கே சென்றவை என்று வாதிடுவர். உண்மையில் சில சொற்கள் காலத்தையும் மீறி உரு மாறாமல் இருந்ததால் இவைகளை இப்போது எந்த மொழியில் புழங்குகிறதோ அந்த மொழிச் சொல் என்று நாம் வாதாடுகிறோம். ஆனால் இவை இரு மொழிக்கும் பொதுவான சொற்கள் என்பதை அறிந்தால் இரு மொழிக்கு இடையில் உள்ள பிரிவினைக் கோடு மறைந்து போகும்.

பெரிய ஆதாரம்


இவைகளை எல்லாம் விட பெரிய ஆதாரம் இரு மொழி இலக்கியங்களில் உள்ளன. தமிழுக்கு மிக நெருக்கமான மொழி சம்ஸ்கிருதம்! இதே போல சம்ஸ்கிருதத்துக்கு நெருக்கமான மொழி தமிழ். இரு மொழிகளிலும் உள்ள பழைய கவிதை நூல்களை எடுத்துக் கொண்டு கடைசி பக்கத்தில் உள்ள பாடல் முதற்குறிப்பு  அகராதிக்குப் போங்கள். ஒவ்வொரு மொழியிலும் உயிர் எழுத்தில் எத்தனை பாடல்கள் துவங்குகின்றன என்று பாருங்கள். அற்புதமான ஒற்றுமை இருப்பதைக் காண்பீர்கள்.

‘’ஔ’’ என்ற எழுத்தில் இரு மொழிகளிலும் பாடலே துவங்காது. அல்லது அபூர்வமாக இருக்கும். யாரும் பழைய காலப் புலவர்களிடம் போய் நீ இந்த எழுத்தில் துவங்கும் பாடல்கள் இவ்வளவுதான் பாட வேண்டும் என்று சொன்னதும் இல்லை. அப்படி இலக்கண விதிகள் எதுவும் இல்லவும் இல்லை. ஆயினும் இரு மொழிகளும் ஒரே பாணியைப் பின்பற்றுவதைக் காணலாம்.

இரு மொழிகளிலும் உயிர் எழுத்துக்களில் துவங்கும் பாடல்கள் ‘மூன்றில் ஒரு பகுதி’ அல்லது ‘நான்கில் ஒரு பகுதி’ இருக்கும். இவ்விரு மொழிகளை மட்டுமே எளிதில் ஒப்பிடும் மாதிரியில் இரு மொழி அரிச்சுவடியும் கிட்டத்தட்ட ஒன்றாகவும் இருக்கிறது. இரு மொழி மக்களின் சிந்தனை, செயல்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியனவும் ஒரே மாதிரி உள்ளன. வெகு சில விஷயங்களே மாறுபடும். அத்தகைய மாற்றங்களை உலகில் எல்லா இடங்களிலும் காண முடிகிறது

.

கீதையும் குறளும்


பகவத் கீதையில் அ-97, ஆ-17, இ-21, ஈ-1, உ-9, ஊ-2, க்ரு-1, ஏ-21, ஓ-2 வில் துவங்கும் ஸ்லோகங்கள் =171
மொத்தம் ஸ்லோகங்கள் 700
ஆக நாலில் ஒரு பகுதி உயிர் எழுத்தில் துவங்குபவை

திருக்குறளில் அ-157, ஆ-23, இ-114, ஈ-8, உ-81, ஊ-21, எ-45, ஏ-9, ஐ-4, ஒ-40, ஓ-6 ஔ-0 -வில் துவங்கும் பாடல்கள் = 508
மொத்தம் உள்ள குறள்கள் 1330

ஆக மூன்றில் ஒரு பகுதி அல்லது நான்கில் ஒரு பகுதி இருப்பதோடு ஔ – வில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல.

குறில் ஒலிகளில் ( அ, இ, உ, ஒ) அதிகப் பாடல்களும் நெடில் ஒலி எழுத்துக்களில் குறைவான (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ) பாடல்களும் இருப்பதையும் காணலாம். இவை எல்லாம் இரு மொழியிலும் இயற்கையாகவே அமைந்துள்ள விஷயங்கள் —- யாரும் போய் கட்டளை இட்டுச் செய்தது அல்ல. மேலும் கவிதை என்பது உள்ளத்தில் எழுந்து பீறிட்டு எழும் உணர்வுகள். அதற்கு யாரும் தடைகளோ விதிகளோ போட முடியாது. ஆக கவிதைகள் கூட இரு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்து ஏறத் தாழ ஒரே விதிகளைப் பின்பற்றுவதைக் காட்டுகின்றன.

மொழிகளுக்குள் சொற்களை இணைப்பதற்கான சந்தி விதிகள் இருக்கின்றன. இவை உலகில் தற்போதைய மொழிகளில் காணப்படாத புதுமை. ஆனால் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டும் உண்டு.

டூத் + பவுடர் என்ற இரு சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே இணைத்து டூத் பவுடர் என்று எழுதலாம். ஆனால் தமிழில் பல்+ பொடி= பற்பொடி என்று மாறுவதைக் காணலாம். இது போல சந்தி விதிகளை இன்றும் பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே.

இந்தியர்களாகப் பிறந்தவர்கள் உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் இரண்டு அரிய, பெரிய, பழைய மொழிகள் அவர்கள் நாட்டுக்குளேயே புழங்கி வருகின்றன வீட்டுக்குளேயே புழங்கி  வருகின்றன -. உலகிலுள்ள எல்லா மொழிகளையும் இந்த இரண்டு மொழிகளுக்குள் அடக்கிவிடலாம்.


காளிதாசன் வழங்கும் முதல் சான்று


காளிதாசன் என்னும் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். இவனைப் போல நாடகம், காவியம், கவிதைகள் எனும் முத்துறையிலும் சிறப்புற விளங்கியவர் உலகில் மிக மிகக் குறைவு. அவனது ரகு வம்ச காவியத்தில் (6-61, 6-62) ராவணன் – பாண்டியன் – அகத்தியன் ஆகிய மூவரையும் இணைத்துப் பாடியதில் இருந்து நமக்கு அரிய செய்திகள் கிடைக்கின்றன. அவன் அகத்தியன் பற்றியும் பாண்டியன் பற்றியும் பாடியது வட இந்தியாவரை அகத்தியன் – தமிழ் உறவு தெரிந்திருந்ததைக் காட்டுகிறது..

புறநானூறு முதலிய சங்க கால நூல்களில் பொதிய மலையையும் இமய மலையையும் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவர். பொதியில் குன்று என்பது அகத்தியர் ஆசிரமம் இருந்த இடம். ஆதாலால் இப்படிச் சிறப்பு எய்தியது.

மாணிக்கவாசகர் தரும் சான்று


ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் நுற்றுக் கணக்கான இடங்களில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஏத்தித் துதிபாடிவிட்டனர். ஓரிரு எடுத்துக் காட்டுகளைத் தருவன்:–

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவது சிவனையே என்பது அவருக்குப் பின்னோர் வந்த பாடலில் மேலும் உறுதிப்படுத்தப்படும்.

வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் (அப்பர்—ஆறாம் திருமுறை)

முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் (அப்பர்)
தமிழ் சொல்லும் வடசொலுந் தாணிழற்சேர (தேவாரம்)

மந்திபோல திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் தெரிகிலா
அந்த்தகர்க்கு எளியேன் இலேன் – சம்பந்தர் தேவாரம்
(இந்தப்பாடலில் தமிழ் சம்ஸ்கிதரும் ஆகிய இரண்டின் பெருமையையும் அறியாதோரை குரங்கு, குருடர் — என்பார் சம்பந்தர்)


கம்பர் தரும் சான்று
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் — (கம்ப ராமாயணம்)

தமிழ் மொழியை நெற்றிக் கண் கொண்ட சுடர்க் கடவுள் சிவ பெருமான் தான் தந்தான் என்பதை கம்பன் பட்டவர்த்தனமாகப் பாடிவிட்டான்.

அகத்தியன் பற்றிக் கம்பர் கூறியவை:
‘’தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தான்’’ (சலதி = கடல்)
‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

பரஞ்சோதி முனிவர் தரும் சான்று


வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

சிவஞான முனிவர் கருத்து
இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு
இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலி
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ

தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம்? என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.

தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்கள் எனப் பாவித்து இரு மொழி கற்போம் !!

Tags – அகத்தியர், தமிழ், இலக்கணம், சிவபெருமான், பரஞ்சோதி, சிவஞான, முனிவர்

—subham—

Leave a comment

1 Comment

  1. Ambi Iyer's avatar

    Ambi Iyer

     /  March 20, 2020

    அருமையான பதிவு
    அனபுடன்
    அம்பி

    Sent from my iPhone

Leave a comment