இந்திரன் இராமனைத் துதித்தல்! – கம்பன் தரும் அதிசயம்! (Post No.7722)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7722

Date uploaded in London – – 21 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இந்திரன் இராமனைத் துதித்தல்! – கம்பன் தரும் அதிசயம்!

ச.நாகராஜன்

கம்ப ராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது. இதில் 116 படலங்கள் உள்ளன. பாடல்கள் 10500 முதல் 10576 வரை உள்ளன. சில பாடல்கள் இடைச் செருகலாக இருக்கக் கூடும்.

கம்பன் பாடிய வண்ணங்கள் 96 என்று ஒரு தனிப்பாடல் கூறுகிறது. இதைக் கூறியவர் நிச்சயமாக கம்பனின் பாடலைத் தனித்தனியாக சந்தத்தைக் கண்டு பாக்களின் வகைகளைக் கணக்கிட்டு 96 வித வண்ணங்களை அவர் கையாண்டிருக்கிறார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

இந்த 96 வண்ணங்கள் மற்றும் சந்தங்கள் பற்றிய ஆராய்ச்சி சம்பந்தமாக (எனக்குத் தெரிந்து) இரண்டு ஆய்வுப் புத்தகங்கள் வந்துள்ளன. 1. இரா.திருமுருகன், புதுச்சேரி எழுதியுள்ள கம்பன் பாடிய வண்ணங்கள் – முதல் பதிப்பு ஏப்ரல் 1987 2. The Metres in Kambaramayana by Dr. K.V. Dakshayani, Annamalai University, Annamalai Nagar, 1979)

பல்வேறு வகையான பா வகைகளைக் கம்பன் கையாளுகிறான். ஒண்பா என்னும் விருத்தத்திற்கு உயர் கம்பன் என அறிஞர்கள் கூறி வந்ததால் கம்பனைப் போல் விருத்த வகைகளைக் கையாளும் திறன் படைத்த கவிஞர் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

இந்த 10000 + பாடல்களில் அவன் சுமார் 43 வகையான விருத்த வகைகளைக் கையாளுகிறான். இந்த 43 வகைகளில் எண்சீர் விருத்தமும் ஒரு வகை. ஆனால் 10576 பாடல்களில் எண்சீர் விருத்தப் பாடல்களாக அவன் அமைத்தது ஆறு பாடல்களே!

இந்த அதிசயப் பாடல்கள் ஆறும் இந்திரன் இராமனை நோக்கிச் செய்யும் துதிப் பாடல்களாக அமைந்துள்ளன.

இதில் இராமனின் பரத்துவத்தை நிர்ணயிக்கும் ஒரு செய்தியை உள்ளே வைக்கிறான் கம்பன். ‘வல்லை வரம்பு இல்லாத’ என்று எண்சீர் விருத்தத்தில் கடைசிப் பாடலாக அமையும் இதை கீழே கட்டுரையின் இறுதியில் காணலாம்.

இதில் வரும் சுவையான வரலாறு இது:

முன்னொரு காலத்தில் முனிவர் தேவர்கள் அனைவரும் மேருமலையின் சிகரத்தில் கூடினர். அங்கு பரத்துவ நிர்ணயம் செய்வதில் பெரும் விவாதம் நிகழ்ந்தது. ஒவ்வொருவரும் ஒருவரைச் சொல்ல அவர்கள் சப்த ரிஷிகளைச் சரண்டைந்து தங்கள் ஐயத்தைத் தீர்க்குமாறு வேண்டினர். சப்தரிஷிகளில் தலைமை பீடம் பெற்ற பிருகு முனிவர், முக்குணங்களுள் சத்வ குணம் உடையவர் எவரோ அவரே பரதத்துவம்; அதை நேரில் அறிந்து வந்து சொல்கிறேன் என்று கூறி  விட்டு முதலில் நேராகக் கைலாயம் சென்றார்.

அங்கு நந்திதேவரால் அவர் தடுக்கப்பட்டார். ஏழுநாள் காத்திருந்தார். பின்னர் தான் சிவபிரான் உமாதேவியோடு கலவியில் – புணர்ச்சியில் – ஈடுபட்டிருந்ததை அறிந்தார். தாமச குணத்தால்  காமமுற்று என்னை காக்க வைத்த அக்கடவுட்கட்கு இரு குறியும் விழக் கடவது என்று சபித்தார். அந்த நேரத்தில் சிவபிரான் நந்தியால் நடந்தது அனைத்தையும் அறிய, பிருகுவை அழைத்தார். அவரைத் தழுவும் எண்ணத்துடன் அவரை நெருங்கிய போது, ‘வாலாமை (அசுசி)யான நீ என்னத் தொடாதே என்று தடுக்க சிவபிரான் சினம் கொண்டார். தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து நெருப்பு  கிளம்ப பிருகு முனிவரோ அஞ்சாது தன் பாதத்தின் பெருவிரலிலுள்ள நெருப்புக் கண்ணை விழித்து அதிலிருந்து எழுந்த நெருப்பால் சிவபிரானின் நெருப்பை அடக்கி விட்டு, ‘நீ பிராமணிய தெய்வம் ஆகாது போகக் கடவது’ என்று இன்னொரு சாபத்தையும் கொடுத்தார்.

பிறகு நேராக சத்திய லோகம் சென்று பிரம்மாவைப் பார்த்து வணங்கினார். பிரம்மா தந்தையைத் தனயன் வணங்குவது தக்க முறைப்படியானதே என்று பிருகுவிற்கு பதில் வணக்கம் செய்யாதிருந்தார். இராஜஸ குணம் மிகுந்தவராக பிரம்மா இருப்பதைக் கண்ட பிருகு, “இன்று முதல் உமக்கு ஆலய பிரதிஷ்டை இல்லாது போகக் கடவது’ என்று தந்தை என்றும் பாராமல் சாபம் கொடுத்தார்.

பின்னர் நேராக வைகுந்தம் சென்றார். அங்கு வாயில் காவலர் அஞ்சி நிற்க நேராக அனந்தாழ்வான் மீது திருமகளும் நிலமகளும் திருவடி வருடிக் கொண்டிருக்க பள்ளி கொண்டிருந்த திருமாலின் மார்பில் ஒரு உதை உதைத்தார்.

அவ்வளவில் திருமால் மக்கள் மேல் விழுந்த தாய் சந்தோஷப்படுவது போல் மகிழ்ச்சியுற்றார். ‘உமது திருவடி பட்டதால் என் மார்வம் திருநிலை பெற்றது; நுமது வரவை அறியாது நான் படுத்திருந்ததைப் பொறுப்பீர்” என்று பலவாறு முகமன் கூற மகிழ்ச்சி அடைந்த பிருகு பரமனது காலில் விழுந்து வணங்கினார்.

‘சுத்த சத்வ குணத்தைக் கொண்ட பரதத்துவத்தை அறிய நான் செய்த இப் பெரும் பிழையைப் பொறுத்தருள்க’ என்று பலவாறு வேண்டினார்.

பின்னர் மேருவை அடைந்து ஸ்ரீமன் நாராயணனே பரத்துவம் என்று சித்தாந்தம் செய்தார்.

கம்பன் இந்த வரலாற்றை இந்திரன் துதியில் வைக்கிறார்.

வான்மீகி முனிவர் இராமனைப் பார்க்காமல் இந்திரன் சென்றதாகக் குறிப்பிடுகிறார். கம்பன் இங்கு மாறுபட்டு இந்திரன் இராமனைத் துதி செய்ததாக அமைக்கிறார்; அதுவும் எண் சீர் விருத்தப் பாடல்கள் ஆறை இந்த ஒரே ஒரு இடத்தில் மட்டும் அமைத்து இராமனின் பரதத்துவத்தைத் தேர்ந்தெடுத்த சொற்களால் இந்திரன் வாயிலாகப் புகழ்கிறார்.

பாடல்கள் இதோ:-

துவசம் ஆர் தொல் அமருள், துன்னாரைச் செற்றும், சுருதிப் பெருங் கடலின் சொல் பொருள் கற்பித்தும்,

திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும், திரு அளித்தும், வீடு அளித்தும், சிங்காமைத் தங்கள்

கவசம் ஆய், ஆர்உயிர் ஆய், கண் ஆய், மெய்த்தவம் ஆய், கடைஇலா ஞானம் ஆய், காப்பானைக் காணா,

அவசம் ஆய், சிந்தை அழிந்து, அயல் ஏகி நின்றான், அறியாதான் போல,அறிந்த எலாம் சொல்வான்:

தோய்ந்தும், பொருள் அனைத்தும் தோயாது நின்ற

   சுடரே! தொடக்கு’ அறுத்தோர் சுற்றமே! பற்றி

நீந்த அரிய நெடுங் கருணைக்கு எல்லாம்

   நிலயமே! வேத நெறி முறையின் நேடி

ஆய்ந்த உணர்வின் உணர்வே! வெம் பகையால்

     அலைப்புண்டு அடியேம் அடி போற்ற, அந் நாள்

ஈந்த வரம் உதவ எய்தினையே? எந்தாய்!

    இரு நிலத்தவோ, நின் இணை அடித் தாமரை தாம்?

‘மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை; வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை;

மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை; முதல் இடையோடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை;

தேவா! இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால், சிலை ஏந்தி வந்து, எம்மைச் சேவடிகள் நோவ,

காவாது ஒழியின், பழி பெரிதோ? அன்றே; கருங்கடலில் கண்வளர்ந்தோய்! கைம்மாறும் உண்டோ?

‘நாழி, நரை தீர் உலகு எலாம் ஆக, நளினத்து நீ தந்த நான்முகனார் தாமே

ஊழி பலபலவும் நின்று அளந்தால், என்றும் உலவாப் பெருங் குணத்து எம் உத்தமனே! மேல்நாள்,

தாழி தரை ஆக, தண் தயிர் நீர் ஆக, தட வரையே மத்து ஆக, தாமரைக் கை நோவ

ஆழிகடைந்து,அமுதம் எங்களுக்கே ஈந்தாய்;-அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ?

‘ஒன்று ஆகி, மூலத்து உருவம் பல ஆகி, உணர்வும் உயிரும் பிறிது ஆகி, ஊழி

சென்று ஆசறும் காலத்து அந் நிலையது ஆகி, திறத்து உலகம் தான் ஆகி, செஞ்செவே நின்ற

நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே! எங்கள் நவை தீர்க்கும் நாயகமே! நல் வினையே நோக்கி

நின்றாரைக் காத்தி; அயல் பேரைக் காய்தி; நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே?

‘வல்லை வரம்பு இல்லாத மாய வினைதன்னால் மயங்கினரோடு எய்தி, மதி மயங்கி, மேல்நாள்,

“அல்லை இறையவன் நீ ஆதி” என, பேதுற்று அலமருவேம்; முன்னை அறப் பயன் உண்டாக,

“எல்லை உலகங்கள் நின்னுழை” என்று, அந் நாள் எரியோனைத் தீண்டி, எழுவர் என நின்ற

தொல்லை முதல் முனிவர், சூளுற்ற போதே, தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ? -எந்தாய்!’

இந்தப் பாடல்கள் அனைத்தையும் மனதினில் நிறுத்திப் படித்தால் இராமனின் பெருமை நன்கு புரிகிறது அல்லவா!

தோய்ந்தும், பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே!

தொடக்கு அறுத்தோர் சுற்றமே!

பற்றி நீந்த அரிய நெடுங் கருணைக்கு எல்லாம் நிலயமே!

வேத நெறி முறையின் நேடி ஆய்ந்த உணர்வின் உணர்வே!

இப்படி, சொற்களின் வலிமையால் தான் எடுத்த காவியத்தின் தலைவனுக்குப் புகழாரம் சூட்டும் கம்பனின் திறனே திறன்; கவிதையே கவிதை; பக்தியே பக்தி!

image of Indra

பாடல்களை மெதுவாகப் படித்து ரசித்தால் கம்பனின் அருமை புரியும்!

கம்பனின் 10000 + பாடல்களில் அதிசயப்பாடல்கள் இந்து ஆறு மட்டுமே எண்சீர் விருத்தப் பாடல்கள்!

tags –இந்திரன், இராமன், துதி, கம்பன்

Indra in Indus Valley on Airavata Vahana, Indra’s name Cakra is above him

****

Leave a comment

Leave a comment