
WRITTEN BY S NAGARAJAN
Post No.7789
Date uploaded in London – – 6 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்
ஏழாவது உரை
(7-3-2020 அன்று ஒலிபரப்பானது)
சின்னச் சின்ன செயல்கள்; பெரிய லாபம்!
சுற்றுப்புறத்தை மாசின்றி காக்க அரசாங்கம் அல்லவா பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்னால் என்ன செய்ய முடியும் என்று பலரும் தவறாக எண்ணுகின்றனர்.
ஒவ்வொருவரும் சிறுசிறு செயல்களால் கூட சுற்றுப்புறச் சூழலை மாசு கெடாமல் பாதுகாக்க முடியும்; அரிய நீர் வளம். மின் ஆற்றல் உள்ளிட்டவற்றைச் சேமிக்க முடியும்.
எடுத்துக் காட்டாக பெரிய டம்ளரில் நீர் எடுத்துக் கொடுப்பதை விட்டு விட்டு சிறிய டம்ளரில் நீர் தந்து, தேவையெனில் மேலும் கொடுக்கும் பழக்கம் ஏராளமான அளவில் குடிநீரைச் சேமிக்கும். உத்தரபிரதேச சட்டசபை கூட இந்தச் சின்னச் செயலைச் செய்ய ஊக்குவித்துப் பயனடைந்து வருகிறது.

சைக்கிளில் செல்லக் கூடிய தூரத்தில் உள்ள இடங்களுக்கு அதில் செல்வதன் மூலம் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். இதனால் கார்பன் நச்சுப்புகை வளிமண்டலத்தில் சேரும் அபாயம் தவிர்க்கப்படும்.
ஒரே இடத்திற்குச் செல்லும் அடுக்குமாடிக் குடியிருப்பு அண்டை அயலார் முன்னமேயே பேசி வைத்து ஒரே வாகனத்தில் செல்வதன் மூலம் ஏராளமான எரிபொருளைச் சேமிப்பதோடு காற்று மாசையும் தடுக்கலாம்.
வீட்டில் உள்ள ஏர் கண்டிஷன் சாதனம் மற்றும் வாட்டர் ஃபில்டரிலிருந்து வெளியேறும் நீரை ஒரு பக்கெட்டில் பிடித்து அதை செடிகளுக்கு ஊற்றலாம்.
கைகளால் சுத்தம் செய்யக் கூடிய துணிகளை வாஷிங் மெஷினில் போடாமல் தவிர்த்து மின்னாற்றல், நீர் வளம் ஆகியவற்றைக் கூடியமட்டில் சேமிக்கலாம்.
துணிப்பைகளைக் கட்டாயமாக கடைகளுக்குக் கொண்டு சென்று, கடைகளில் தரும் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் பைகளைத் தவிர்க்கலாம்.

கணினியில் மின்னஞ்சலை அதிகம் சேர்க்காமல் அவ்வப்பொழுது அதை நீக்கி விடலாம். சின்னச் செயல் தானே இது என்று அலட்சியம் செய்யாமல் விளைவு என்ன என்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். 1 GB அளவுள்ள email எனப்படும் மின்னஞ்சல் ஒரு வருடத்திற்கு 32.1 Kilowatt hour ஐ எடுத்துக் கொள்கிறது. பிரான்ஸில் இது பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸில் உள்ள ஒவ்வொருவரும் 50 மின்னஞ்சல்களை நீக்கினால் அதனால் சேமிக்கப்படும் ஆற்றலை வைத்து ஈபில் டவரை 42 ஆண்டுகளுக்கு ஒளிபெறச் செய்யலாம் என்று ஆய்வு கூறிய போது அனைவருக்கும் ஆச்சரியமூட்டும் செய்தியாக அது அமைந்தது.
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல ஒவ்வொரு சிறு செயலும் பல்லாயிரக்கணக்கானோர் செய்யும் போது அது பெரும் சேமிப்பைத் தருகிறது.
அவரவர் வசதிக்கும் இடத்திற்கும் மனப்பான்மைக்கும் தக, தங்கள் செயலை அமைத்துக் கொண்டு அனைவருக்கும் உத்வேகமூட்டும் நபராக ஒவ்வொருவரும் தம்மை மாற்றிக் கொண்டால் விளையும் பயன் பெரிதாகும்!

***