
WRITTEN BY S NAGARAJAN
Post No.7801
Date uploaded in London – – 9 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 1 – பஜகோவிந்தம் – கட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020; ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி – கட்டுரை எண் 7611 – வெளியான தேதி 24-2-2020; ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 3 – சௌந்தர்ய லஹரி – கட்டுரை எண் 7656 – வெளியான தேதி 6-3-2020; சங்கரர் அருளிய நூல்கள் – 4 தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் வெளியான தேதி 17-3-2020 கட்டுரை எண் 7704
ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 5 –ப்ரச்நோத்தர ரத்நமாலிகா
ச.நாகராஜன்
5. ப்ரச்நோத்தர ரத்நமாலிகா

ஆதி சங்கரர் இயற்றியுள்ள ப்ரகரண கிரந்தங்களில் ஒன்று ப்ரச்நோத்தர ரத்நமாலிகா. மனிதன் மனதில் மிக மிக நுட்பமான விஷயங்கள் பற்றித் தோன்றும் கேள்விகளும் (ப்ரஸ்நம்) அதற்கான சரியான பதில்களையும் (உத்தரம்) கொண்டுள்ள நூல் இது.
இது பற்றி காஞ்சி பெரியவாள் (சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி மஹா ஸ்வாமிகள்) அருளியுள்ள உரையில் ஒரு சிறிய பகுதி இது:
“ப்ரச்நோத்தர ரத்னமாலையில் 67 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அறுபத்தைந்து ஸ்லோகங்கள் தாம் நம் ஆசார்யர்கள் செய்ததாக நான் நினைக்கிறேன்.ஓம் என்று 66ஆம் ஸ்லோகத்தில் சொல்லி இருப்பதுடன் அவர்கள் முடித்து விட்டார்கள். முதல் ஸ்லோகமும் கடைசி ஸ்லோகமும் பக்தர்களால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். நம் ஆசார்யர்கள் இயற்றிய கிரங்களிலெல்லாம் இது இலகுவானது. இது ஸம்ஸ்கிருதம் படிக்கும் குழந்தைகளுக்கும் உபயோகப்படக்கூடியது.”
இவ்வாறு மயிலை உரை ஒன்றில் ஆசார்யாள் உபதேசித்தருளினார்.
இந்த நூலை இணையதளத்தில் டவுன்லோட் – தரவிறக்கம் – செய்து கொள்ளலாம்.
அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும் நூல் என்பதால் எளிதில் வாங்கிப் படித்து பயனடையலாம்.
சில கேள்விகளும் பதில்களும் இதோ:-
பகவான், கிம் உபாதேயம்?
பகவானே, எதை எடுத்துக் கொள்ள வேண்டும்?
குரு வசனம்
குரு வசனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
க: பத்யதர:?
எது பலனளிக்கக் கூடியது
தர்ம:
தர்மம்
கிம் விஷம்?
எது விஷம்?
அவதீரணா குருஷு
குருவின் ஆக்ஞையை மீறுவது.

கிம் துக்கம்?
எது துக்கம்?
அசந்தோஷ:
சந்தோஷமின்மை.
கிம் அஹர்நிஷம் அனுசிந்த்யம்?
எது எப்போதும் இரவு பகலாக நினைக்கபடவேண்டியது?
பகவச்சரணம் ந சம்ஸார:
இறைவனின் திருப்பாதம், உலகியல் வாழ்க்கை (சம்சாரம்) அல்ல!
கிம் சம்பாத்யம் மனுஜை: ?
எது மக்களால் சம்பாதிக்கப்பட வேண்டியது?
வித்யா, சித்தம், பலம், யஷ: புண்யம்.
வித்யா, செல்வம், பலம், புகழ், புண்யம்.
இப்படி சிக்கலான கேள்விகள் பலவற்றிற்கு டாண் டாண் என்று ஆணி அடித்தாற் போல அருளுரைகள் பதில்களாகப் பரிணமிக்கின்றன.
ஸ்லோகம் எளிமையான சம்ஸ்கிருத பதங்களால் அமைக்கப்பட்டிருப்பதால் சம்ஸ்கிருத ஞானமும் கூடும்.
சில ஸ்லோகங்களை எடுத்துக்காட்டாக இங்கே காணலாம்:
கஸ்ய க்ரியா ஹி ஸபலா? ய: புநராசாரவாந் சிஷ்ட: |
க: சிஷ்டோ? யோ வேதப்ரமாணவாந், கோ ஹத:? க்ரியாப்ரஷ்ட: ||
(ஸ்லோக எண் 50)

கர்மானுஷ்டானங்கள் யாருக்குப் பலிக்கும்?
ஆசாரமுள்ளவனாகவும் சிஷ்டனாகவும் இருப்பவனுக்கு.
யார் சிஷ்டன்?
வேதத்தைப் பிரமாணமாக நம்பியவன்.
எவன் இருந்தும் செத்தவன்?
கர்மாக்களைச் செய்யாதவன்.
கிம் பாக்யம் தேஹவதாம்? ஆரோக்யம், க: பலீ? க்ருஷிக்ருத் |
கஸ்ய ந பாபம்? ஜபத: க: பூர்ணோ? ய: ப்ரஜாவாந் ஸ்யாத் ||
(ஸ்லோக எண் 52)
உடலெடுத்தவருக்கு பெரிய பாக்யம் எது?
ஆரோக்கியம்
பயன் எவனுக்குக் கிடைக்கும்?
முயற்சி செய்கிறவனுக்கு.
பாபம் யாருக்கு வராது?
எப்பொழுதும் ஜபம் செய்பவனுக்கு.
நிறைந்தவன் யார்?
நல்ல பிள்ளைகளை உடையவன்.
க: சூரோ? யோ பீதத்ராதா, த்ராதா ச க:? ஸ குரு: |
கோ ஹி ஜகத்குருருக்த:? சம்பு, ஞானம் குத:? சிவா தேவ ||
(ஸ்லோக எண் 55)
சூரன் யார்?
பயப்பட்டவனை ரட்சிக்கிறவன்.
ரட்சிக்கிறவன் யார்?
ஸத்குரு
ஜகத்குரு யார்?
சம்பு
ஞானம் எங்கிருந்து கிடைக்கும்?
சிவனிடமிருந்தே.
ப்ரத்யக்ஷ தேவதா கா? மாதா, பூஜ்யோ குருஸ்ச க: தாத: |
க: ஸர்வதேவதாத்மா? வித்யாக்ர்மாந்விதோ விப்ர: ||
(ஸ்லோக எண் 62)
பிரத்யக்ஷ தேவதை யார்?
தாயார்
பூஜிக்க வேண்டிய குரு யார்?
தந்தை
ஸகல தேவஸ்வரூபி யார்?
ஞான கர்மஸித்தியுடைய பிராம்மணன்
கஸ்ச குல க்ஷய ஹேது:? ஸந்தாப: ஸஜ்ஜநேஷு யோகாரி |
கேஷாம மோக வசனம்? யே ச புந: ஸத்ய மௌன ஸமசீலா: ||
(ஸ்லோக எண் 63)
குல நாசத்துக்குக் காரணம் எது?
ஸாது ஜனங்களுடைய உள்ளத்தில் தாபத்தை உண்டாக்கும் செய்கை
யாருடைய சொல் பலிக்கும்?
ஸத்திய விரதம், மௌன விரதம், க்ஷமை ஆகியவற்றை உடையவர் சொல்.
பலமபி பகவத்பக்தே கிம்? தல்லோகஸ்வரூப ஸாக்ஷாத்வம் |
மோக்ஷஸ்ச கோ? ஹ்யவித்யாஸ்தமய:, கள் ஸர்வ வேதபூ:? அதசோம் !!
(ஸ்லோக எண் 66)
ப்கவத் பக்திக்குப் பலன் எது?
அவனுடைய லோக ஸாக்ஷாத்காரம்.
மோக்ஷம் எது?
அவித்யை அழிதல்
ஸகல வேதங்களுக்கும் உற்பத்தி(யும் லயமும்) எது?
ஓம்!
இறுதி ஸ்லோகமான 67வது ஸ்லோகம் இந்த ப்ரஸ்நோத்தர மாலையை எவன் ஒருவன் கழுத்தில் அணிகிறானோ அவன் முக்தர்க்ளுக்குள் சிறந்தவன் போல நல்லோர் நிறைந்த சபையில் பிரகாசிப்பான் என்று உறுதி கூறுகிறது!
அனைவரும் படிக்க வேண்டிய ஒரு வினா-விடை நூல் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா!
tags- ஆதி சங்கரர், நூல்கள் – 5, ப்ரச்நோத்தர ரத்நமாலிகா
— subham —-