ஒரு டம்ளர் பால்! (Post No.7882)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7882

Date uploaded in London – – 26 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரு டம்ளர் பால்!

ச.நாகராஜன்

ஒரு ஏழைச் சிறுவன். வீடு வீடாக தேவைப்பட்ட பொருள்களைப் பலருக்கும் விற்று சிறிது காசு சம்பாதிப்பான். கிடைக்கும் காசை வைத்து பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டுவான்; தனது புத்தகங்களையும் வாங்கிப் படிப்பான்.

ஒரு நாள் அவன் கையில் ஒரே ஒரு பைசா (டைம் Dime) தான் இருந்தது. ஒரே பசி.

தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த ஒரு டைமைக் கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று அவன் முடிவு செய்தான்.

ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டிய போது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை. ஆனால் பசியோ பசி!

ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.

அந்த இளம் பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாள். ஆகவே தண்ணீருக்குப் பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன், “நான் இந்தப் பாலுக்காக எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.

“எனக்கு ஒன்றும் தர வேண்டாம். அன்பிற்கு விலை பேசக் கூடாது என்று என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்” என்றாள் அவள்.

“அப்படியானால் என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான் அந்தச் சிறுவன்.

அந்தச் சிறுவனின் பெயர் ஹோவர்ட் கெல்லி (Howard Kelly).

அந்த வீட்டை விட்டு வெளியேறும் போது ஒரு புத்துணர்ச்சியைப் பெற்றான் அவன். கடவுள் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை கூடியது; நல்ல உணர்ச்சிகள் கூடியது!

ஒரு தக்க தருணத்தில் இப்படி ஒரு அன்பைக் காட்டிய பெண்மணி அவனுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தாள்.

வருடங்கள் ஓடின.

அவன் ஒரு பெரிய டாக்டராக ஆனான்; பெயரும் புகழும் பெற்றான்.

ஒரு நாள் எந்த இளம் பெண் அவனுக்குப் பாலை வழங்கினாளோ அவளுக்கு கடுமையான நோய் ஒன்று வந்தது.

அவள் வசித்து வந்த ஊரில் உள்ள டாக்டர்கள் திகைத்தனர்; அதைக் குணப்படுத்த அவர்களால் முடியவில்லை.

அவர்கள் நகருக்குச் சென்று ஹோவர்ட் கெல்லியைப் பார்க்குமாறு ஆலோசனை கூறினர்.

அந்தப் பெண்ணும் ஸ்பெஷலிஸ்டான ஹோவர்ட் கெல்லியைப் பார்க்கச் சென்றாள்.

அந்தப் பெண் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்பதைக் கேட்டவுடன் கெல்லியின் கண்கள் பளபளத்தன. நேராக நோயாளி இருந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

ஆம், அதே பெண் தான்! அவர் நன்றாக அடையாளம் கண்டு கொண்டார்.

உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினார். எப்பாடு பட்டேனும் அவளைக் காப்பாற்றுவது என்று உறுதி பூண்டார்.

பெரும்பாடு பட்டு கடைசி கடைசியாக அவர் வென்றார். அந்தப் பெண் பூரண குணமடைந்தாள்.

கெல்லி அக்கவுண்ட்ஸ் பிரிவின் அதிகாரிக்கு அந்தப் பெண்மணிக்கு ஆன செலவுக்கான பில்லைத் தனக்கு அனுப்பச் சொன்னார். அக்கவுண்ட்ஸ் பிரிவும் அவரது அங்கீகாரத்திற்காக அந்த பில்லை அவரிடம் அனுப்பியது.

அந்தப் பில்லைப் பார்த்தார் அவர்! பெருந்தொகை தான்!!

அந்த பில்லின் கீழே கோடியில் சில வார்த்தைகளை அவர் எழுதி விட்டு, அந்த பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பச் சொன்னார்.

அந்தப் பெண்மணி நடுநடுங்கிக் கொண்டிருந்தாள், பில்லை நினைத்து – இந்த ஜென்மத்தில் அந்த பில் தொகையைத் தன்னால் கட்ட முடியுமா என்பதே அவள் பயம்!

அந்த பில்லை வாங்கிப் பார்த்தாள்! அடேயப்பா!

ஆனால் பில்லின் அடியில் ஓரத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் அவள் கவனத்தை ஈர்க்கவே அவள் அதைப் படித்தாள் :

“Paid in full with one glass of milk”

Signed Howard Kelly

ஒரு டம்ளர் பாலால் பில் முழுவதும் கட்டப்பட்டது.

ஹோவர்ட் கெல்லி.

அந்தப் பெண்மணியின் கண்களில் நீர் துளித்தது.

அவள் ஹோவர்ட் கெல்லி யார் என்பதை இப்போது தெரிந்து கொண்டாள்.

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!

***

உண்மையாக நடந்த இந்த சம்பவத்தை இணையதளத்தில் அவ்வப்பொழுது பல அன்பர்களும் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

tags – ஒரு டம்ளர் பால், ஹோவர்ட் கெல்லி,Howard Kelly

Leave a comment

Leave a comment