
Post No.7940
Date uploaded in London – 8 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தப் பிரபஞ்சம் 118 செங்கற்களால் (118 elements) கட்டப்பட்டுள்ளது அவைகளை நாம் மூலகம் அல்லது தனிமம் என்று அழைக்கிறோம். இதில் ப்ரோமீன் (Bromine) மூலகம் பற்றிய சுவையான செய்தியை முதலில் சொல்கிறேன்
இதுவரை 23 மூலகம் பற்றி எழுதிவிட்டேன். இது 24-வது கட்டுரை.
எகிப்துக்கும் ரோமானிய சாம்ராஜ்யத்துக்கும் நாம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுமதி செய்த சாயப்பொருளுக்கும் ப்ரோமீன் மூலகத்துக்கும் தொடர்பு உண்டு. ஊதா (Purple) வர்ண துணிகளை அணிவது பெரும் அந்தஸ்தைக் குறிக்கும். முதலில் ரோமானியர்கள் மாஜிஸ்திரேட் உடுப்பில் எவ்வளவு ஊதா பார்டர் (Purple Border) இருக்கலாம், அதிகாரி உடுப்பில் எவ்வளவு ஊதா பார்டர் இருக்கலாம் என்றெல்லாம் விதிகள் இயற்றினர். பிற்காலத்தில் ரோம சாம்ராஜ்ய (Emperors) மன்னர்கள் மட்டுமே ஊதா நிற உடைகளை அணியலாம் என்று கட்டளையிட்டுவிட்டனர். ரோமானிய ஆட்சியாளர் பற்றிய ஆங்கில திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இந்த ஊதா ஆடைகள் மனக்கண் முன்னே நிழலாடும். இதற்கெல்லாம் காரணம் ப்ரோமின் மூலகம்.


இந்திய- ரோமானியர் (இத்தாலியர்) வணிகம் பற்றி ஈ எச் வார்மிங்டன் (E H Warmington) 1928ல் ஒரு நூல் வெளியிட்டார். அதில் இண்டிகோ (Indigo) , அவுரி , நீலி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சாயத்தையும் இந்தியா ஏற்றுமதி செய்ததாக எழுதியுள்ளார்.
நம்மவர்கள் எகிப்திலுள்ள அலெக்ஸ்சாண்ட்ரியா அல்லது மத்தியக் கிழக்கிலுள்ள சிரியா , அரேபிய நாடுகளில் இதை விற்றுவிடுவார்கள். அராபியர்களும் , சோமாலியர்களும் அதை மற்றவர்களுக்கு விற்று விடுவர். எப்படி இந்துக்கள் கண்டுபிடித்த 1, 2, 3, 4, ………. என்ற எண்களை அராபிக் நியூமெரல் (Arabic Numerals) என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனரோ அப்படி இவைகளை அராபியர் சப்ளை செய்ததாக சிலர் எழுதுவர். இந்த சிவப்பும் நீலமும் கலந்த ஊதா சாயம் அவுரி என்ற செடியின் பூக்களிலிருந்தும் கடல்வாழ் (Molluscs) நத்தைகளிலிருந்தும் கிடைக்கிறது. சங்குகளில் வாழும் சில இன நத்தைகள் இந்த சாயத்தை உருவாக்குகின்றன.
இதில் மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால் மற்ற வண்ணங்கள் நாளாக, ஆக மங்கிப்போகும். இதனால்தான் நாம் ‘சாயம் வெளுத்துப் போச்சு’ என்ற மரபுத் தொடரையும் (Idioms and Phrases) ஒருவரைக் கிண்டல் செய்யும்போது பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த அவுரி/ இண்டிகோ சாயம் மட்டும் நாளாக, ஆக மெருகு ஏறி வண்ணம் பொலிவடையும்; பிரகாசிக்கும். இதனால் வெள்ளியின் எடைக்குச் சமமாக இது விற்கப்பட்டது இத்தனைக்கும் நாம் நண்றிக கடன்பட்டிருப்பது ப்ரோமின் மூலகத்துக்கே.
பைபிளில் எசக்கியேல் (Ezekiel) அத்தியாயத்தில் எலிசா தீவிலிருந்து வந்த மர்மக் கப்பலில் ஊதா நிறம் இருந்ததாக வருவது, அவுரி வியாபாரம் என்றும் சிரியாவிலிருந்து மரகதம், மாணிக்கம், பவளம், லினன் துணி, ஊதா சாயம் ஆகியன இறக்குமதி செய்யப்பட்டதை சொல்வதாகவும் அறிஞர்கள் எண்ணுவர்.
1865ல் பதினெட்டே வயது நிரம்பிய ஆங்கில கெமிஸ்ட் வில்லியம் பெர்கின் வயலெட் சாயப்பொருளைக் கண்டுபிடிக்கும் வரை இதன் புகழ் நீடித்தது. நிற்க.
****
ப்ரோமோஸ் (Bromos) என்றால் ‘வெறுக்கத்தக்க நாற்றம்’ என்று கிரேக்க மொழியில் அர்த்தம். இதனால்தான் இதற்கு அந்த அவப்பெயர் சூட்டப்பட்டது இதை ஒரு தனிமம் என்று அறிவித்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பலார்ட் (A J Balard) ஆவார். இந்த உப்பு கலந்த நீர் இயற்கை ஊற்றுகளில் காணப்பட்டதால் ஒரு மாணவர் அதைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார் . அவருக்கு அதிர்ஷ்டம் அடிப்பதற்கு முன்னர் பலார்ட் இதை அறிவித்து புகழ் மொண்டு கொண்டு போனார்.
நாம் உண்ணும் உணவில் நாள்தோறும் ப்ரோமின் 1 மில்லிகிராம் முதல் 20 மில்லிகிராம் வரை உடலில் செல்கிறது இதை விட கூடுதலாகப் போனால் நல்லதல்ல. இது மனதின் செயல்பாட்டை, குறிப்பாக செக்ஸ் ஈடுபாட்டைக் (Sexual desire) குறைத்துவிடுகிறது
***

பயன்கள்
இதன் விஷத் தன்மை காரணமாக இவைகளை மருந்தில் பயன்படுத்துவதில்லை. ஆயினும் மருந்துகளை உற்பத்தி செய்கையில் இடைநிலைப் பொருளாகப் பயன்படுகிறது. நாம் எப்படி நறுமணத்துக்கு கருவேப்பிலையைப் பயன்படுத்திவிட்டு, வாய்க்குள் உணவு செல்லும்போது அதை வெளியே தூக்கிப் போடுகிறோமோ அப்படி கருவேப்பிலையாகப் பயன்படுகிறது மருத்துவத் தொழிலில்.
டை ப்ரோமோ மீதேன் (Di bromo methane) என்னும் உப்பை பெட்ரோலுடன் கலந்து அதன் (leaded petrol) திறனை அதிகரித்தனர். . இதே போல செடி கொடிகள் பல மரங்களைத் தாக்கும் புழுப்பூச்சிகளைக் கொள்ளுவதற்கு மெத்தைல் புரோமைட் (Methyl Bromide) உப்பைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை புறக் சூழலை மாசு படுத்துகின்றன என்ற கூக்குரல் வலுத்து வருவதால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உப்புக்களை ஜாதிப்ரஷ்டம் செய்து வருகின்றனர் — விலக்கி வைக்கின்றனர்
தீயணைப்புக் கருவிகளிலும் இதன் வாயு பயன்படுத்தப்பட்டது . அங்கும் இதே கதைதான். புறச்சூழல் ஆர்வலர்கள் கொடி தூக்கத் துவங்கிவிட்டனர் .
***

இஸ்ரேல் நாட்டில் அதிக உப்புக்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea) இருப்பதால் அங்கும் மற்றும் அமெரிக்கா , பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் அதிக ப்ரோமின் உற்பத்தியாகிறது; கடலில் இது நிறைய கரைந்திருப்பதால் இதற்குப் பஞ்சமே இல்லை.
பிரிட்டனில் வேல்ஸ் மாகாணத்தில் ஆங்கிள்சி (Anglesey in Wales, UK) என்னுமிடத்தில் கடல் நீரிலிருந்து ப்ரோமின் எடுக்கப்படுகிறது.
***
திரவமா , வாயுவா ?
ரசாயனப் பகுப்பில் இது குளோரின், அயோடின் ஆகிய மூலகம் உள்ள ஹாலஜன் (Halogen அணியைச் சேர்ந்தது இது. சொல்லப்போனால் அவற்றிற்கு நடுவில் நிற்கிறது ப்ரோமின்.
இது சிவப்பும் பழுப்பும் கலந்த திரவமாக காட்சி தரும் ஆயினும் சாதாரண அறையிலுள்ள வெப்பத்திலேயே கொதித்து ஆவியாக மாறும். ஒருவித மணத்தையும் வீசும் .
இதற்கு கதிரியக்கம் இல்லாத இரண்டு ஐசடோப்புகள் உண்டு.
***
ரசாயன விவரங்கள்
குறியீடு Br
அணு எண் – 35
உருகு நிலை — மைனஸ் 7 டிகிரி சி
கொத்தி நிலை – 59 டிகிரி சி
tags — ப்ரோமீன் ,Bromine, மூலகம்
–SUBHAM–