
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8015
Date uploaded in London – 21 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
மரத்திலிருந்து விதை வந்ததா? விதையிலிருந்து மரம் வந்ததா?
முதலில் தோன்றியது ஆணா ? பெண்ணா?
கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?


இப்படி ஏராளமான கேள்விகளில் நேரத்தைச் செலவிடும் ஆராய்ச்சிக் குழுக்களை அறிந்திருப்பீர்கள்.
இதே போல இலக்கியத்தில் ஒரு விவாதம்:-
தொல்காப்பியன் என்பவர் பெயரிலிருந்து அந்த நூலுக்கு தொல்காப்பியம் என்ற பெயர் வந்ததா?
அல்லது தொல்காப்பியத்தை எழுதியதால் அவருக்கு தொல்காப்பியன் என்று பெயர் வந்ததா? என்பது அறிஞர்கள் இடையே நடைபெறும் பட்டி மன்றம் ஆகும்.
அவரோ காப்பிய/ காவ்ய கோத்திரத்தில் பிறந்த பிராஹ்மணர் என்பர் சிலர். அவர் பெயர் த்ருண தூமாக்னீ முனிவர் என்பார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் வாழ்ந்த உரை ஆசிரியர் ‘உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கு இனியர்’
பட்டிமன்ற முடிவு
சம்ஸ்க்ருதத்தில் பாணினி எழுதியதை பாணினீயம் என்பர்;
காக்கை பாடினி எழுதியதை காக்கைபாடினீயம் என்றே தமிழர்கள் எழுதிவைத்துள்ளனர்.
இது போலத்தான் அகத்தியர் எழுதியது அகத்தியம்,
இந்திரன் எழுதியது அல்லது சொன்னது ஐந்திரம்,
அவிநயன் எழுதியது அவிநயம்; நற்றத்தன் எழுதியது நற்றத்தம் என்று பழந்தமிழ் நூல்கள் எழுதிவைத்துள்ளன .
ஆகவே தொல்காப்பியர் என்ற ஒருவர் எழுதியதால் அந்த நூலுக்கு தொல்காப்பியம் என்ற பெயர் வந்தது.
****

தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து இல்லாதது ஏன் ?
தொல்காப்பியம் கடவுள் வாழ்த்து பற்றிப் பேசுகிறது. (சூத்திரம் 1034)
ஆனால் தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து இல்லை. துவக்கமே
“எழுத்தெனப்படுவ
அகர முதல் னகர இறுவாய்
முப்ப ஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே “
என்று துவங்குகிறது . அதே காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரம், 133 அதிகாரம் உடைய திருக்குறள், மூன்று அதிகாரம் உடைய தொல்காப்பியம் ஆகியன “அதிகாரம்” என்ற சம்ஸ்கிருத சொல்லின் மூலம் கி.பி.4, 5ம் நூற்றாண்டு என்பதைக் காட்டிவிடுகின்றன. சிலப்பதிகாரத்தில் சூர்ய , சந்திர வாழ்த்துள்ளது. திருக்குறளில் முதல் அதிகாரத்தின் பெயரே கடவுள் வாழ்த்து ஆனால் கடவுள் வாழ்த்து பற்றிப் பேசிய தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து இல்லாதது ஏன் ?

பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ 14 மஹேஸ்வர சூத்திரங்களுடன் துவங்குவதால் மகேஸ்வரன் பெயர் வந்துவிடுகிறது. மேலும் சம்ஸ்கிருத, தமிழ் நூல்கள் சில மங்கல எழுத்துக்களுடன் துவங்கலாம் என்றும் சொல்லுகின்றன. அவ்வகையில் சிவ சூத்திரத்தின் முதல் எழுத்து, ரிக் வேதத்தின் முதல் எழுத்து, திருக்குறளின் முதல் எழுத்து எல்லாம் “அ” என்ற முதல் எழுத்தே. இறைவனும் பகவத் கீதையில் எழுத்துக்களில் நான் “அ” என்கிறார். தொல்காப்பியத்தில் இதுவும் இல்லை!
மற்ற நூல்கள் கடவுள் வாழ்த்து இல்லாவிடினும் மங்கலச் சொற்களுடன் துவங்கும்.
Xxxxxx
ஆதிசிவன் பெற்றுவிட்டான்

சிவ பெருமான் கொடுத்த இரண்டு மொழிகள் தமிழும் ஸம்ஸ்கிருதமும் . பாரதியாரும் ஆதி சிவன் கொடுத்த மொழி என்கிறார்.
சேனாவரையர் தொல்காப்பியத்தின் சொல் அதிகாரத்துக்கு எழுதிய உரையின் கடவுள் வாழ்த்திலும்,
“ஆதியில் தமிழ் நூல் அகத்தியர்க்கு ணர்த்திய
மாதொருபாகனை வழுத்துதும்
போத மெய்ஞான நலம் பெறற்பொருட்டே”
என்பதன் மூலம், இருவர் பெயரை, ஆதிசிவன், அகத்தியன் பெயரை,க் குறிப்பிடுகிறார்.
பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர் முதலியோரும் சிவ பெருமான் – அகத்தியர் தொடர்பு பற்றிப் பாடியிருந்தும் பாரதியார் பாடுவது அப்படியே சேனாவரையரை எதிரொலிக்கிறது —
“ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்”
****

பன்னிரு படலம் என்னும் நூலின் பாயிரம் இன்னும் தெளிவாகச் சொல்லும் –
“வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழுக்கு விளக்காகென
வானோரேத்தும் வாய் மொழிப் பல்புகழ்
ஆனாப் பெருமை அகத்தியன் என்னும்
அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்
பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோன்
நல்லிசை நிறுத்த தொல்காப்பியனும்”
–பன்னிரு படலம் – பாயிரம்
இதில் தொல்காப்பியரின் ‘குரு’ வான அகத்தியர் எழுதிய நூலை குற்றமறக் கற்று , தன்னுடைய புது நூலை யாத்துப் புகழ் பெற்றவர் தொல்காப்பியர் என்று தெளிவாக உளது
12 பெயர்கள் பற்றிய குறிப்பு எங்கே வருகிறது?
தொல்காப்பியருடன் மேலும் 11 பேர் அகத்தியரிடம் பாடம் கற்றனர் . அவர்களுடைய பெயர்கள் –
அதங்கோட்டாசான், துராலிங்கன், செம் பூட் சேய் , வையாபிகன் வாய்ப்பியன், பனம்பாரன் , கழா ரம்பன் , அவிநயன், பெருங் காக்கைபாடினி , நற்றத்தன் , வாமனன் என்பர்.
இதில் சில வியப்பான விஷயங்கள் உள . பல பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்கள்!! வாமனன் , துரா லிங்கன் வையாபிகன் , அவிநயன் , அதங்கோட்டாசான் முதலியன சம்ஸ்கிருதப் பெயர்கள்.
மேலும், காக்கை பாடினி என்பது பெண்பாற் புலவர் என்பது சரியானால் , அப்போதே பெண்களும் ஆண்களும் சேர்ந்து கற்ற கோ எஜூ கேஷன் CO EDUCATION பள்ளிகள் இருந்தன என்பது புலனாகிறது. இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வடக்கில் பீஹார் மாநிலத்தில் நடந்த அகில இந்திய தத்துவ வித்தகர்கள் மஹா நாட்டில் கார்க்கி வாசக்னவி கலந்து கொண்டு கேள்வி கேட்டதும் நம் நினைவுக்கு வரும்
“மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பாற்ற ண்டமிழ்த் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும்”
தொல் – பொருள்- சூத்திர மேற்கோள் – புறப்பொருள் வெண்பா மாலை, பாடலினால் அறிகிறோம்
tags — அகத்தியர், 12 சீடர்கள், தொல்காப்பியர், கடவுள் வாழ்த்து
xxxxSUBHAM xxxxx