
Post No. 8215
Date uploaded in London – – –21 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
12-6-2020 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
இறைவன் இருக்கிறான்! – அறிவியல் தரும் ஆதாரங்கள்!
ச.நாகராஜன்

நியூட்டன் தந்த பதில்!
பிரபல விஞ்ஞானி சர் ஐஸக் நியூட்டன் இயற்பியலில் மிக முக்கியமான விதிகளைக் கண்டுபிடித்தவர். மிக எளிமையானவர். பல்துறை வித்தகர்.
“உலகிற்கு நான் என்னவாகத் தோற்றமளிக்கிறேனோ, அது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு நான் கடற்கரையில் விளையாடும் ஒரு பையன் போலவே தோற்றமளிக்கிறேன். பிரம்மாண்டமான உண்மை என்னும் கடல் எனக்கு முன்னே கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் போது சாதாரண கிளிஞ்சல்கலை விட இன்னும் வழுவழுப்பான கூழாங்கற்களை சிற்சில சமயம் நான் கண்டுபிடிக்கிறேன்” என்ற அவரது கூற்றே அவரது எளிமையைப் புலப்படுத்தும்.
ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்ட அவருக்கு தீவிர நாத்திகவாதியான ஒரு நண்பர் உண்டு. இறைவன் இல்லை என்பதை அடிக்கடி கூறித் திருப்திப்படுபவர் அவர்.
ஒருநாள் நியூட்டன் தீவிர ஆராய்ச்சியில் மூழ்கி இருந்த போது அவர் வீட்டினுள்ளே நுழைந்தார்.
முன்னறையில் அபூர்வமான இயந்திர அமைப்பு ஒன்று முடிந்த தருவாயில் இருந்தது.
அது சூரிய மண்டலத்தை அப்படியே சிறிய அளவில் காட்டும் ஒரு ஸ்கேல் மாடல். சூரியன் நடுவிலே ஜொலிக்க சூரியனைச் சுற்றி அனைத்து கிரகங்களும் அது அதன் சுழற்சிப்பாதையில், குறிப்பிட்ட தூரத்தில் இருந்தன. அத்துடன் மட்டுமின்றி கிரக அளவுகளும் மிகச் சரியாக அமைக்கப்பட்டிருந்தன.
அதைப் பார்த்த நண்பர் பிரமித்தார். அந்த அமைப்பில் இருந்த கைப்பிடியைச் சுழற்றினார். என்ன ஆச்சரியம், கிரகங்கள் அததற்குரிய சுழற்சியுடன் சுற்றியதோடு ஓடு பாதையில் அததற்குரிய வேகத்தில் செல்ல ஆரம்பித்தன.

வியந்து போன நண்பர், “நியூட்டன், இதை யார் செய்தது?” என்று கேட்டார்.
தன் வேலையில் மூழ்கி இருந்த நியூட்டன் சாவதானமாக,”யாரும் இல்லை” என்று பதிலளித்தார்.
தனது கேள்வியை நியூட்டன் சரியாகக் கேட்கவில்லை என்று எண்ணிய நண்பர், “நான் என்ன கேட்டேன் என்றால், இதை யார் செய்தது என்று கேட்டேன்” என்று உரத்த குரலில் கேட்டார்.
“யாரும் செய்யவில்லை” என்று பதில் வந்தது.
நண்பர் சிறிது ஆத்திரத்துடன் நியூட்டன் அருகில் சென்று திரும்பவும் தன் கேள்வியைக் கேட்டார்.
நியூட்டன் அவர் அருகில் வந்து மெதுவாகக் கூறினார் : “இது ஒன்றும் ஆச்சரியமான பதில் இல்லை. சூரிய மண்டல அமைப்பை விளக்கும் ஒரு பொம்மை மெஷின் இது! இதை யாரும் செய்யவில்லை என்றால் நம்ப மறுக்கிறீர்கள்! ஆனால் வானத்தில் உண்மையாகவே பிரம்மாண்டமாகச் சுழலும் சூரியனையும் இதர கிரகங்களையும் காண்பித்தால் அதை யாரும் படைக்கவில்லை என்கிறீர்களே! இதில் எது ஆச்சரியம்?”
நண்பர் பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நின்றார். பதில் பேசாமல் வெளியேறிய அவர் அன்றிலிருந்து நாத்திகத்தை விட்டு ஆத்திகரானார்.
தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியில் கடவுள் ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியவர் நியூட்டன்.
இதே போல பல நாத்திகவாதிகள் இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் உள்ளனவா என்று அமெரிக்க விஞ்ஞானக் கழகத்தின் தலைவர் க்ரெசிமாரிசனைக் கேட்டனர்.
அவர்.”இறைவன் இருக்கிறான்” என்று கூறியதோடு ஏழு அறிவியல் ஆதாரங்களை மக்கள் முன் வைத்தார்.
அந்த ஏழு காரணங்கள் இவை தாம் : –

- கணித முறையில் பிரபஞ்ச இயக்கம் :
கணித முறைப்படி பார்த்தால் இந்தப் பிரபஞ்சம் அமைந்ததும், இயங்குவதும் ஒரு பேரறிவுடைய பரம்பொருளின் அறிவால் என்பதை நிரூபிக்கலாம்.
ஒரு பையில் ஒன்று, இரண்டு என்று எண் குறிக்கப்பட்ட பத்துப் பொருள்களைப் போட்டுக் குலுக்குங்கள். முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பொருள்களை வரிசையாக வருமாறு எடுக்க முயன்று பாருங்கள். கணித நூல் வல்லவர்கள், இப்படிப் பொருள்களை வரிசையாக எடுக்க பத்தில் ஒரு வாய்ப்புத்தான் கிட்டும் என்று கூறுகின்றனர். ஒன்று, இரண்டு என்று குறிக்கப்பட்டவற்றை அடுத்தடுத்து எடுக்கும் வாய்ப்பு நூறில் ஒன்று தான். இது போலவே ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாகத் தொடர்ந்து எடுக்கும் வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்று தான். இப்படியே ஒன்றிலிருந்து பத்து வரை குறிக்கப்பட்ட பொருள்களை அவற்றின் எண் வரிசைப்படி அடுத்தடுத்து எடுக்கும் வாய்ப்பு ஆயிரம் கோடியில் ஒன்று தான்!
இந்த தர்க்க முறையைப் பார்க்கும் போது இவ்வுலக வாழ்விற்கு வேண்டிய பல்வேறு நிபந்தனைகள் சீராக அமைந்து நிலைத்திருப்பது என்பது தற்செயலான நிகழ்ச்சி என்று கூற முடியுமா? பூமி தனது அச்சைச் சுற்றி மணிக்கு நூறு மைல் வேகம் குறைவாகச் சுழன்றால் என்ன ஆகும்? நமது பகலும், இரவும் இப்போது இருப்பதை விடப் பத்து மடங்கு அதிக நீளமுள்ளவையாகும்! நீண்ட பகலில், சூரியனின் வெப்பத்தில் பயிர்கள் வாடிப் பொசுங்கும். நீண்ட இரவில் மிஞ்சியிருக்கும் செடி கொடிகளும் விறைத்துப் போய் அழிந்து விடும்!
உயிர்களுக்கெல்லாம் ஆதாரமான சூரியனின் மேற்பரப்பில் 12000 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உள்ளது. நமது உடல் வெப்பநிலை சுமார் 98 டிகிரி. நமது பூமி சூரியனிடமிருந்து நம் உயிருக்குத் தேவையான அளவு வெப்பத்தைப் பெறுகின்ற தூரத்தில் உள்ளது. இந்தச் சூரியன் கொடுக்கும் வெப்பம் இன்னும் ஒரு மடங்கு அதிகரித்தால் நாம் வறுபடுவோம்! அரை மடங்கு குறைந்தால் நாம் குளிரில் விறைத்து உறைந்து போய் விடுவோம்!
இப்படியே நிலவுக்கும் நமக்கும் இடையே உள்ள தூரம், பூமியின் மேல் பரப்பு, கடலின் ஆழம், காற்று மண்டலத்தின் பருமன் ஆகியவை எதைக் காட்டுகின்றன? இவையெல்லாம் கேவலம், தற்செயலாக நடக்கும் நிகழ்ச்சிகளாக இருக்க முடியாது என்பதையே உறுதிப்படுத்துகின்றன, அல்லவா?!
- உயிர்களின் சமாளிக்கும் ஆற்றல் :
உயிர்கள் தங்கள் நிலைமைகளைச் சமாளிக்கும் ஆற்றலானது எங்கும் நிறைந்து விளங்கும் ஒரு பேரறிவின் துவக்கமே. இன்னும் உயிர் என்பது என்ன என்பதை மனிதனால் காண முடியவில்லை! உயிருக்கு எடையில்லை! ஆனால் அதற்கு ஆற்றல் இருக்கிறது. வளரும் வேர் பாறையைப் பிளக்கிறது. மண், நீர், காற்று ஆகியவற்றுடன் போராடி உயிர் வெற்றி பெறுகிறது. பல மூலகங்களைப் பிரித்தும் புது முறைகளில் கூட்டியும் தன் ஆட்சித் திறனைக் காட்டுகின்றது.
உயிரானது, சிற்பியைப் போல பல்வேறு உருவங்களைப் படைக்கின்றது. பூக்களிலும், இலைகளிலும் அந்தக் கலைஞன் தோற்றுகின்ற உருவக் கோலங்களும், வண்ண ஜாலங்களும், தான் எத்தனை, எத்தனை! பறவைகளில் நாம் கேட்கும் ஓசைகளில் தான் எத்தனை இசை விநோதங்கள்!! மலர்களுக்கு மணம் தரும், பழங்களில் சுவை காட்டும், நீரையும் கரியமில வாயுவையும் இனிய சர்க்கரையாய் மாற்றும்!!! மீண்டும் பிராணவாயுவை உயிர்கள் சுவாசிக்கும்! உயிர்களின் இரசாயனத்திறன் தான் எத்தனை விந்தையானது!
புரோடாபிளாசம் என்னும் உயிர்ப்பொருளில் அடங்கியுள்ள வல்லமை தான் எத்தகைய ஆற்றல் படைத்தது! ஓர் உயிரணுவில் அடங்கிக் கோடிக் கணக்கான உயிரணுக்களைத் தோற்றுவிக்கும் அதன் வல்லமை தான் என்னே! இயற்கைக் கூறுகள் மட்டும் உயிரை உண்டாக்கவில்லை. ஆதியில் இருந்திருக்கக் கூடிய வெடித்த பாறைகளும் உவர்ப்பில்லாக் கடலும் உயிரைத் தோற்றுவிக்கக் கூடிய தன்மையைப் பெற்றிருக்க முடியாது. பின் யாரால் உயிர் தோன்றியது?!

- பிராணிகளின் பகுத்தறிவு!
பிராணிகளின் பகுத்தறிவின் சிறப்பைக் கண்டால் அந்த பிராணிகளுக்குள் இயல்பூக்கங்களை எல்லாம் அறிந்த நல்ல ஒரு படைப்பாளன் ஒருவனே கொடுத்திருக்க வேண்டும் என்று உணராமல் இருக்க முடியவில்லை.
குளவி, வெட்டுக்கிளியை அதன் உடலில் சரியாய்க் குறிப்பிட்ட இடத்தில் கொட்டுகின்றது. அது சாவதில்லை. உணர்விழந்து, உயிரிழக்காது காப்பில் வைத்த இறைச்சியாய் அதைப் பயன்படுத்திக் கொள்கின்றது! தரையில் ஒரு சிறுகுழி பறித்து அதற்குள் இதை வைத்துத் தனது முட்டையை அருகில் இட்டு வைக்கின்றது. முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் எளிதில் கடித்துத் தின்னவே உணவு இப்படி வைக்கப்படுகின்றது!
தாய்க்குளவி பறந்து சென்று இறந்து விடுகின்றது. தன் குஞ்சுகளை அது பார்ப்பதே இல்லை. ஒவ்வொரு குளவியும் ஒவ்வொரு முறையும் இப்படியே செய்கின்றது! இது கற்றுப் பழகிய செயலா? இயல்பாக அமைந்த இந்தப் பழக்கத்தை அதனிடம் அமைத்தது யார்?!
- காரண, காரியத் தொடர்பறியும் திறன்! வேறு உயிர்களிடத்தில் காண முடியாத நமது ஆறாவது அறிவு – காரண காரியத் தொடர்பறியும் திறன் குறிப்பிடத் தகுந்த ஒன்று.
எந்தப் பிராணிக்காவது ஒன்று தொடங்கி பத்து வரை எண்ணத் தெரியுமா? பிராணிகளின் திறன்கள் குறுகிய எல்லைக்குள் திறம்படச் செயல்படுகின்றன. ஆனால் மனித மூளையின் திறன் எவ்வளவு சிக்கலானது! அதன் அகலம், ஆழம், பல்வேறு இயக்கக் கோளங்கள் ஆகியவை சொல்லில் அடங்கா. அத்துணை சிறப்பு வாய்ந்த மூளையைப் பெற்றதனால் தான் நாம் இறைவனின் ஓர் அம்சமே என்று கூட எண்ண வேண்டியுள்ளது!

- ஜீன்ஸ் மர்மம்!
வாழ்வில் எல்லா வகைக்கும் அமைந்திருக்கும் ஏற்பாடுகளை இன்று நாம் அறிந்திருக்கின்ற அளவுக்கு டார்வின் அறிந்திருக்கவில்லை.
உயிரணுக்குள் இருக்கும் உயிர்க் கருவின் உள்ளம்சமான ‘ஜீன்ஸ்; பற்றி வெளிவரும் செய்திகள் பிரமிப்பூட்டுகின்றன. உலகில் வாழும் மக்கள் அனைவரையும் வாழ்விக்கும் இந்த ஜீன்ஸ்களைத் திரட்டினால் அது ஒரு ஈச்சங்கொட்டை அளவுக்குத் தான் இருக்கும்! அவ்வளவு சிறியவை ஜீன்ஸ்! பூதக் கண்ணாடி கொண்டும் காண முடியாத ஜீன்ஸும் அவற்றின் தோழரான க்ரோமோசோம்களும், உயிர்க்கருக்கள் எல்லாவற்றிலும் இருந்து கொண்டு மனிதர், விலங்கு, தாவர இயல்புகள் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரங்களாக விளங்குகின்றன!
இவ்வளவு நுண்ணிய இடத்தில், எப்படித் தலைமுறை தலைமுறையாய் வருகின்ற உடற்கூறுகளையும், பண்புகளையும் இவை சேமித்து வைக்கின்றன என்பது எவ்வளவு மர்மமானது! இந்த ஜீன் சில லட்சம் அணுக்களால் ஆகியதாம்! நுண்ணிதிலும் நுண்ணியதான இது உலகில் இயங்கும் உயிர்களின் அனைத்துத் தன்மைகளையும் நிர்ணயிப்பது எப்படி? இது அளவிறந்த சிருஷ்டி சக்தி காட்டும் கலைத்திறனோ அல்லது முன்னேற்பாடோ என்று தானே வியக்கத் தோன்றுகிறது? வேறு என்ன விளக்கம் தர முடியும்?!

- இயற்கையில் உள்ள சிக்கன அமைப்பு!
இயற்கையில் காணப்படும் சிக்கன அமைப்புகளைக் கண்டால் எல்லையற்ற, பரந்த ஒரு பேரறிவினால் அன்றி இவ்வளவு முன் யோசனையும் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளும் அமைப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் ஓரிடத்தில் சப்பாத்திக் கள்ளி வெகு விரைவில் பரவி பயிர்களுக்கும் மக்களுக்கும் துன்பம் தந்தது. விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் தேடி சப்பாத்திக் கள்ளியை மட்டும் தின்று உயிர் வாழும் ஒரு வகைப் பூச்சி இனத்தைப் பிடித்து வந்து ஆஸ்திரேலியாவில் விட்டார்கள். அவை அந்த விரும்பத்தகாத செடியை அழித்தன; சிக்கலும் தீர்ந்தது!
இது போன்ற தாவர விலங்குக் கூட்டங்களிடையே இயற்கைக் கட்டுப்பாடுகளும் தடைகளும் அமைந்துள்ளன. வேகமாய்ப் பெருக்கமடையும் பூச்சிகள், பிராணிகள் ஆகியவற்றின் உடலிலேயே அவற்றின் உருவையோ அல்லது வலிமையையோ கட்டுப்படுத்தும் அமைப்புகள் இருப்பதால் தான் மனிதன் இன்று உயிர் வாழ முடிகிறத்!
- மனிதனின் கற்பனா சக்தி! வேறு எந்த உயிரிடத்திலும் காணப்படாது மனிதனுக்கே தனிச் சிறப்பாய் அமைந்திருக்கும் கற்பனா சக்தியின் துணை கொண்டு மனிதன் ஒருவனே அருவப் பொருளுக்குச் சான்று தேட வல்லவனாக இருக்கிறான்! இந்தக் கற்பனை ஆற்றலின் திறன் எல்லையற்றது! அது சீரிய நிலையில் ஆன்ம உண்மைக்குப் பிறப்பிடமாக அமைகின்றது!
இப்படி உலகின் உன்னதமான அறிவியல் கழகத்தின் தலைவர் அடுக்கடுக்காகத் தெளிவாகக் கூறும் காரணங்கள் பிரமிப்பைத் தருவதோடு ஏற்கக்கூடியவையாகவும் இருக்கிறதல்லவா!.
இறைவனைப் பற்றிய இன்னும் சில கருத்துக்களை அடுத்துக் காண்போம்!

இறைவன் , அறிவியல் , ஆதாரங்கள்