
Post No. 8354
Date uploaded in London – – –17 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சனியான தமிழை விட்டு வேறொன்றும் அறிந்தோமில்லை!
ச.நாகராஜன்
பொற்களந்தை படிக்காசுத் தம்பிரானைப் பற்றிப் பல கட்டுரைகளில் பார்த்து விட்டோம்.
புலவர் தமிழ் வித்தகர். தமிழன்றி வேறொன்றும் அறியாதவர்.
தமிழின் சிறப்பை அறிந்தோர் அவரைத் தலை மேல் வைத்துக் கூத்தாடினர்.
ஆனால் அவர் பணம் பறிக்கத் தான் தமிழை வைத்திருக்கிறார் என்று நினைத்த புல்லர்கள் அவரை ஏளனம் செய்தனர்.
இப்படி தமிழைப் போற்ற வேண்டிய தமிழ் மக்கள் தம்மைத் தமிழை வைத்து பிச்சை எடுத்து வாழ்பவர் – இரந்துண்டு வாழ்பவன் – என எண்ணலாமா என அவர் எண்ணி ஏங்கினார்.
வேறொரு தொழிலும் தெரியவில்லையே, சனியான தமிழ் மட்டும் அல்லவா தன்னுடன் இருக்கிறது, என்ன ஜென்மமடா இது, என்று சொல்லும் அளவு சலிப்பு வர, பாடினார் ஒரு பாடல்:
அட கெடுவாய் பலதொழிலு மிருக்கக் கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில் லாமல்
திடமுளமோ கனமாட கழைக் கூத் தாடச்
செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோ மில்லைத்
தடமுலைவே சையராகப் பிறந்தோ மில்லைச்
சனியான தமிழைவிட்டுத் தையலார் தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை
என்னசென்ம மெடுத்துலகி லிரக்கின் றோமே
பாடலின் பொருள் :
அட கெடுவாய் மனமே – அடச்சீ, தொலைந்து போவாய் மனமே!
உலகில் – இந்த உலகத்தில்
பல தொழிலும் இருக்க – ஏராளமான தொழில்கள் இருக்க
அறிவில்லாமல் -அவற்றைக் கற்க வேண்டும் என்ற அறிவில்லாமல்
கல்வி அதிகமென்றே கற்றுவிட்டொம் – கல்வியே எல்லாவற்றையும் சிறந்தது என்று கற்று விட்டோம்
திடமு(ள்)ள மோகனம் ஆட – உறுதியுள்ள மோகன வித்தைகள் செய்யவும்
கழைக்கூத்து ஆட – கழைக் கூத்து ஆடவும்
செப்பிடு வித்தைகள் ஆட – செப்பிடு வித்தைகள் செய்யவும்
தெரிந்தோம் இல்லை – தெரிந்து கொள்ளவில்லையே!
தட முலை வேசையராகப் பிறந்தோம் இல்லை – மலை போலும் மார்பகங்களை உடைய வேசையராகப் பிறக்கவில்லையே!
சனி ஆன தமிழை விட்டு – இந்த சனியன் போன்ற தமிழை விட்டு
தையலார் தம் இடம் இருந்து – அந்தப் பெண்களிடமிருந்து கொண்டு
தூது சென்று பிழைத்தோம் இல்லை – தூது போய் பிழைத்தோம் இல்லை
என்ன சென்மம் எடுத்து – என்ன ஜென்மம் எடுத்து
இரக்கின்றோம் – இப்படிப் பிச்சை எடுக்கின்றோம்! (யாசிக்கின்றோம்!)
என்ன பரிதாபம்! தமிழ்ப் புலவர் ஒருவர் வாழ்வதற்கு உரிய அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வருந்துகின்ற நிலை இருந்ததே என்று எண்ணும் போது மனம் கனக்கிறது!
**

இன்னொரு புலவர்- அந்தகக் கவி வீரராகவ முதலியார்! இவரது பல பாடல்களையும் நமது பல கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம்.
பொய் சொல்லிப் பிழைப்பவர்களைப் புலவர் பார்க்கிறார்; பல்வேறு ரகங்கள்!
அவரால் தாங்க முடியவில்லை. யார் யாரிடம் பொய் சொன்னால் என்னென்ன ஆகும் என்பதை பிட்டுப் பிட்டு வைக்கிறார் இப்படி:-
பொய்யருக்குப் பொய் உரைத்தால் வெற்றியா மவருக்குப் பொய்யாகாத
மெய்யருக்குப் பொய்யுரைத்தால் தேய்பிறை போற்றவங் குறையு மிடியுண்டாகும்
துய்யதாய் தந்தையர்க்குப் பொய்யுரைத்தால் வறுமைபிணி தொலையாவென்றும்
உய்யவரு டேசிகர்க்குப் பொய்யுரைத்தா னரகமது உண்மை தானே!
பாடலின் பொருள் :
பொய்யருக்கு பொய் உரைத்தால் – பொய்யே பேசி வருவோரிடம் பொய் சொன்னால்
அவருக்கு – அந்தப் பொய் சொன்னவருக்கு
வெற்றியாம் – வெற்றியே கிடைக்கும்.
பொய் ஆகாத மெய்யருக்குப் பொய் உரைத்தால் – பொய்யே பேச விரும்பாத மெய்யரிடம் பொய் சொன்னால்
தேய்பிறை போல – தேய்கின்ற பிறை போல
தவம் குறையும் – பொய் சொன்னவரின் தவம் குறைந்து விடும்.
மிடி உண்டாகும் – தரித்திரமும் உண்டாகும்
துய்ய தாய் தந்தையர்க்குப் பொய் உரைத்தால் – பரிசுத்தராகிய தாய், தந்தையரிடம் பொய் சொன்னால்
வறுமை பிணி என்றும் தொலையா – தரித்திரமும் நோயும் என்றுமே தீராது.
உய்ய – கடைத்தேறும்படி
அருள் – அருள் செய்த
தேசிகர்க்கு – குருமூர்த்தியிடம்
பொய் உரைத்தால் – பொய் சொன்னால்
நரகம் உண்மை – நரகம் அடைவது சத்தியம்!
***

இது ஒருபுறமிருக்க காரிய வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒப்பிலாமணிப் புலவர் எடுத்துரைக்கிறார் ஒரு பாடலில் !
பாடல் இதோ:
மாதர்க் கிதங்கவி வாணர்க்குச் சால வணக்கங்குரு
நாதர்க்கு நீதியோ டாசார நண்பி னயந்தவர்க்குக்
கோதற்ற வாசகம் பொய்க்குப்பொய் கோளுக்குக் கோளறவி
லாதவர்க் கிரட்டிப் பறிவுடை யோர்செய்யு மாண்மைகளே#
பாடலின் பொருள் ;
அறிவுடையோர் செய்யும் ஆண்மைகள் – அறிவுடைய விவேகிகள் செய்கின்ற ஆண்மைகளாவன
மாதர்க்கு இதம் – பெண்களிடம் இனிய மொழி பேசுதல்
கவிவாணர்க்கு சால வணக்கம் – வித்வான்களிடம் பணிவான வணக்கம்
குருநாதர்க்கு நீதியோடு ஆசாரம் – குருநாதருக்கு நீதியுடன் ஆசாரமாக இருத்தல்
நண்பின் நயந்தவர்க்கு கோது அற்ற வாசகம் – நட்புடன் நம்மை விரும்புவோருக்கு குற்றமற்ற நல்ல வார்த்தைகள்
பொய்க்குப் பொய் – பொய்யருக்குப் பொய்
கோளுக்குக் கோள் – பொய்யாகப் புறம் பேசுவோருக்கு அதே போல கோள் சொல்லல்
அறிவில்லாதவர்க்கு இரட்டிப்பு – அறிவில்லாத முட்டாள்களுக்கு அவரை விட இரண்டு மடங்கு முட்டாளாக அவரிடம் நடந்து கொள்வது.
இவையே சரியான ஆண்மைகளாகும்! (இது தான் வெற்றி பெற வழியாகும்!)
வாழ்வதற்கான வழியைச் சரியாகத் தானே சொன்னார் புலவர்!
tags —அந்தகக் கவி, வீரராகவ முதலியார்,ஒப்பிலாமணிப் புலவர்,
பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான்,
***