

Post No. 8360
Date uploaded in London – – –18 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
கொரானா காலத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் சேவையை நாடெங்கும் மக்கள் போற்றுவது பாராட்டுக்குரியது! மோடிஜியின் முன்னுதாரணம் சென்ற ஆண்டு நிகழ்ந்தது – கொரானா இல்லாத போதே!!
கும்பமேளா அதிசயம்!
கர்மயோகி மோடிஜி கர்மயோகிகளுக்குச் செய்த மரியாதை!
ச.நாகராஜன்
பாரதத்தில் நடக்கும் கும்பமேளா உலகின் மாபெரும் அதிசயம்!
இத்துடன் ஒப்பிட இன்னொரு தெய்வீகத் திருவிழா உலகில் எங்குமே எப்போதுமே கிடையாது.
கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த பிரயாக்ராஜ் கும்பமேளா உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது.
ஜனவரி 14ஆம் தேதி ஆரம்பித்து 2019 மார்ச் 4ஆம் தேதியன்று முடிவடைந்த கும்பமேளா கின்னஸ் ரிகார்டில் பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்தது.
22 கோடி பேர்களுக்கும் மேலான யாத்ரீகர்கள் பயபக்தியுடன் கலந்து கொண்ட இந்த கும்பமேளா உலகின் அதிகப்பேரை நிர்வகிப்பதில் (Largest Crowd Management) சாதனை படைத்து விட்டதாக கின்னஸ் கூறுகிறது.
கும்பமேளாவின் உள்ளம் உருக்கும் நிகழ்ச்சி நம்மைப் புளகாங்கிதப் படுத்தியது.
அன்று ஞாயிற்றுக்கிழமை.
துப்புரவுத் தொழிலாளர்கள் ப்யாரே லால், நரேஷ் குமார், சௌபி (அனைவரும் பந்தாவைச் சேர்ந்தவர்கள்) சம்பலைச் சேர்ந்த ஹரிலால் சட்டீஸ்கரில் உள்ள கொர்பாவைச் சேர்ந்த ஜோதி ஆகியோரிடம், “நீங்கள் உங்களது சேவைக்காக கௌரவிக்கப்படப் போகிறீர்கள்’ என்று சொன்ன போது அவர்கள் அதை அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் அவர்கள் பெரிய மேடையில் நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டனர்.அவர்களை நோக்கி பிரதம மந்திரி மோடிஜி வந்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். எதற்காக அவர் இங்கு மேடையில் தங்களை நோக்கி வருகிறார்?
மோடிஜி நேரடியாக அந்த ஐந்து பேரின் பாதங்களையும் நீரால் கழுவினார். அவர்களின் மூவர் ஆண்கள், இருவர் பெண்கள்!
பின்னர் அவர்களை கர்மயோகிகள் எனப் போற்றினார்.
பின்னர் அவர்களை ஈரம் போகத் துடைத்து விட்டார். கும்பமேளாவில் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் நன்கு பராமரித்துப் பாதுகாத்த அவர்களுக்கு தனது நன்றியை அவர்களிடம் தெரிவித்தார். அதாவது நாட்டின் நன்றியை நாட்டு மக்களின் சார்பாக அவர் தெரிவித்தார்.
சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பாதுகாக்க தன்னார்வத்துடன் வந்த ஸ்வச்சகிராஹிகளையும் அவர் பாராட்டினார்.
உலகின் மிகப்பெரும் மத திருவிழாவை மிகுந்த சுத்தத்துடன் நடத்திக் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்த துப்புரவுத் தொழிலாளர்களை கர்மயோகிகள் என்று கூறி அவர் கௌரவித்த விதம் அவரே ஒரு கர்மயோகி தான் என்பதை எடுத்துக்காட்டியது!
பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல “பொறாமை பிடித்த” பத்திரிகைகளும் டி.வி.சேனல்களும் கண்டு கொள்ளவே இல்லை!
போகட்டும், மனதிற்கும் மனதிற்குமான பேச்சில் (மன் கீ பாத்) இந்த மட்டரகமான ஊடகங்களுக்கு என்ன வேலை!
அடுத்த இன்னுமொரு கட்டுரையில் இந்த கும்பமேளாவின் சிறப்புகளைக் காண்போம்!


tags — கும்பமேளா ,அதிசயம்!,கர்மயோகி, மோடி