பண்டிதராஜ ஜகந்நாதரின் ரஸ கங்கா! (Post No.8374)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8374

Date uploaded in London – – –21 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சம்ஸ்கிருதச் செல்வம்!

பண்டிதராஜ ஜகந்நாதரின் ரஸ கங்கா!

ச.நாகராஜன்

பெரும் கவிஞரான பண்டிதராஜ ஜகந்நாதர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

அக்பர் காலத்தவர்.

இவர் வாழ்க்கையே அதிசயமான ஒன்று. தெலுங்கு பிராமணரான இவர் காந்த்ரிகா (உபத்ரஸ்தா) குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரும் கவிஞர். சம்ஸ்கிருத அறிஞர். இசை வல்லுநரும் கூட. ஆந்திர பிரதேசத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள முன்கண்டாவைச் (பழைய கால பெயர் முனிகண்ட அக்ரஹாரம்) சேர்ந்தவர். பின்னால் வாரணாசியில் வாழ்ந்து வந்தார்.

பண்டிதராஜர் என்ற பட்டத்தை ஷாஜஹான் இவருக்குச் சூட்டினார்.

ஜிஹாங்கீர் மற்றும் ஷாஜஹானின் அரசவையில் இவர் அங்கம் வகித்தார்.

இவரைப் பற்றிய அதிசய வரலாறு ஒன்று உண்டு.

இவர் இயற்றிய கங்கா லஹரி 52  ஸம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்டது.

ஷாஜஹானின் மகளான லவங்கிகாவும் இளவரசன் தாரா சுகோஹும் இவருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர்; இவரிடமிருந்து நிறைய சம்ஸ்கிருத நூல்களைக் கற்றனர்; ஹிந்து பண்பாடு பற்றி அறிந்து கொண்டனர்.

இந்த நெருங்கிய தொடர்பு டெல்லி மக்களிடையே இவர் லவங்கிகாவுடன் முறையற்ற தொடர்பு கொண்டிருப்பதாக தவறான வதந்தியைப் பரப்பியது.

ஷாஜஹான் ஜகந்நாத பண்டிதரை இஸ்லாமுக்கு மாறி தன் மகளை மணம் செய்து கொள்ளுமாறு கூறினான். ஆனால் அவர் அதற்கு இசையவில்லை; மறுத்து விட்டார்.

கங்கை நதிக் கரையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த ஜகந்நாதர் கங்காநதியைத் தாயெனக் கருதி தினமும் ஒரு ஸ்லோகத்தைப் புனைந்து பாட ஆரம்பித்தார். ஒவ்வொரு ஸ்லோகம் முடிந்தவுடனும் கங்கா நதியின் ஜலம் சிறிது உயரும். படிப்படியாக இப்படி 52 நாட்கள் ஜலம் உயர்வது நிகழ்ந்தது. கங்கா தசரா என்பது ஜேஷ்ட சுத்தா எனப்படும் ஒன்று முதல் பத்து நாட்களைக் கொண்டது. இதன் முடிவில் ஜகந்நாதர் தன்னை கங்கா தேவிக்கு அர்ப்பணித்துக் கொண்டார். நதியில் இறங்கிய அவர் தன் உயிரை கங்கா மாதாவுக்கு அர்ப்பணித்தார். கங்கா நதியுடன் ஐக்கியமானார்!

அருமையான செய்யுள்களைக் கொண்ட கங்கா லஹரி இப்போதும் படிக்கக் கிடைக்கிறது.

இவர் இயற்றிய நூல்களில் பாமினி (பாமினி என்றால் பேரழகி என்று பொருள்) விலாஸம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

பர்த்ருஹரி நீதி சதகம்,ச்ருங்கார சதகம், வைராக்ய சதகம், என்று நூறு நூறு பாடல்களைக் கொண்ட மூன்று (த்ரயி) சதகங்களை இயற்றியது போல் இவர்  பாமினி விலாஸத்தை நான்கு விலாஸங்களாக – நான்கு பகுதிகளாகப் – பிரித்துள்ளார்.

முதல் விலாஸமான அன்யோக்தி விலாஸா நீதிகளைக் கூறும் ஒன்று. இதில் 100 முதல் 130 ஸ்லோகங்கள் உள்ளன.

இரண்டாவது விலாஸமான ச்ருங்கார விலாஸாவில் 101 முதல் 184 ஸ்லோகங்கள் உள்ளன.

மூன்றாவது விலாஸம் கருணா விலாஸம். இதில் மறைந்து போன பேரழகிக்கான இரங்கல் கீதங்களை 18 மற்றும் 19ஆம் பாடல்களில் காணலாம்.

வைராக்யத்தை விவரிக்கும் நான்காவது விலாஸமான சாந்த விலாஸத்தில் கிருஷ்ணரைத் துதி செய்யும் (31 முதல் 46 வரை) ஸ்லோகங்கள் உள்ளன.

ஒவ்வொரு கைப்பிரதியிலும் ஒவ்வொரு எண்ணிக்கையில் ஸ்லோகங்கள் உள்ளன. இவற்றில் நான்கில் ஒரு பகுதி இடைச்செருகல் எனலாம். எவற்றை ஜகந்நாதர் இயற்றினார் எவற்றை மற்ற கவிஞர்கள் ‘சொருகினார்கள்’ என்பதைச் சொல்ல இயலவில்லை. பாமினி விலாஸத்தில் முதல் மற்றும் நான்காம் விலாஸங்கள் மட்டுமே பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இவர் அவசிஸ்டான்யோக்தி, ரஸ கங்காதரம் உள்ளிட்ட நூல்களையும் இயற்றியவர்.

யமுனையைப் போற்றும் 10 ஸ்லோகங்களைக் கொண்டுள்ள அம்ருத லஹரி,

சூர்யனைத் துதிக்கும் 30 ஸ்லோகங்களைக் கொண்டுள்ள சுதா லஹரி, கங்கையைத் துதிக்கும் 53 ஸ்லோகங்களைக் கொண்டுள்ள கங்கா லஹரி,

கிருஷ்ணரைத் துதிக்கும் 60 ஸ்லோகங்களைக் கொண்டுள்ள கருணா லஹரி,

லக்ஷ்மியைத் துதிக்கும் 40 ஸ்லோகங்களைக் கொண்டுள்ள லக்ஷ்மி லஹரி,

ஆகிய ஐந்து ஸ்தோத்திரங்களையும் இவர் இயற்றியுள்ளார்.

ஏராளமான சுவையான இவரது பாடல்களில்,

‘ரஸகங்கா’வில் வரும் ஒரு ஸ்லோகத்தை இங்கே காணலாம்:

கிம் தீர்த்தம் ஹரிபாதபத்யமஜனம் கிம் ரத்னமச்சா மதி:

    கிம் சாஸ்த்ரம் ஸ்ரவணேன யஸ்ய கலதி த்வைதாந்தகாரோதய: |

கிம் மித்ரம் சததோபகாரரஸிகம் தத்வாவதோக: சகே

    க: சதுர்வித கேததானகுஷலோ துர்வாஸனானாம் ச ய: ||

எது தீர்த்தம்? (எது யாத்திரை?) – ஹரியின் பாதத்தில் பக்தியைச் செலுத்துவதே!

எது ரத்னம்? கூரிய புத்தியாகும்.

எது சாஸ்த்ரம்? எதைக் கேட்பதால் த்வைதம் என்ற இருள் போகிறதோ அதுவே சாஸ்த்ரம்.

யார் நண்பன், எப்போதும் உதவத் தயாராக இருப்பவன்?

 மெய்ப்பொருளைத் தரும் அறிவு.

யார் எதிரி, துன்பம் தருவதில் நிபுணன்? துர்வாஸனைகளின் (தீய நோக்கங்களின்) மொத்த தொகுதியே!

ஆங்கில ஆக்கம் :

What is the (real) place of pilgrimage? Devotion to the lotus-feet of Hari.

What is the jewel? Keen intellect.

What is the philosophy? That through the listening of which the darkness of dualism  is dispelled.

Who is the friend, ever intent to help?  Knowledge of Reality.

Friend, who is the enemy, expert in giving pain? The  multitude of evil inclinations.

                                               (Translation by K.V. Sarma)

மாதிரிக்கு ஒரு கவிதையைப் பார்த்தோம்.

நூற்றுக் கணக்கில் உள்ள பண்டிதராஜ ஜகந்நாதரின் கவிதைகளை ரஸிக்க முடிவது பெரும் பாக்கியமே!

tags – பண்டிதராஜ ஜகந்நாத,  ரஸ கங்கா

***

Leave a comment

Leave a comment