
Post No. 8439
Date uploaded in London – – –2 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சம்சாரம் ஒரு மரம்; பாவ புண்யம் இரு விதைகள்! – இறைவன் தானே கூறும் பல இரகசியங்கள்!
ச.நாகராஜன்
ஒரு ஆடையில் எப்படி நூல்கள் குறுக்கும் நெடுக்குமாகக் கோர்க்கப்பட்டிருக்கிறதோ அதே போல சம்சாரம் என்னும் மரமானது பெரும் பிரவாஹம் போல அனாதியாக இருப்பதாகும்.
இது சம்சாரத்தில் உள்ள ப்ரவிருத்தியையே இயற்கையாகக் கொண்டது.
சம்சாரம் என்ற இந்த மரத்தில் புண்ய, பாவ கர்மங்கள் மலர்களாகும்.
சுகமும் துக்கமும் பலன்களாகும்.
புண்யம், பாவம் ஆகிய இரண்டு கர்மங்களே (செயல்களே) இரண்டு விதைகள்.
ராகம், த்வேஷம் உள்ளிட்ட பல வேர்கள் இந்த சம்சார மரத்திற்கு உண்டு.
இந்த மரத்தின் நாளங்கள் மூன்று: சத்வம், ரஜஸ், தமஸ் என்பன.
பூமி, நீர், அக்னி, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து ஸ்கந்தங்கள் உடையது இந்த மரம்.
இது சப்தாதி விஷயங்கள் என்னும் ஐந்து ரஸங்களுக்கு விளைநிலமாய் இருக்கும்.

இந்த மரத்திற்குக் கிளைகள் பதினொன்று. பதினோரு இந்திரியங்கள் தாம் இந்தப் பதினொன்று கிளைகள்.
ஆத்மா, பரமாத்மா என்னும் இரண்டு பறவைகள் இந்த மரத்தில் சேர்ந்து வசிக்கின்றன.
இவை வாசம் செய்யும் இடம் இதயகமலம் என்னும் கூண்டு.
இதற்கு மூன்று பட்டைகள் உண்டு. வாத, பித்த, சிலேஷ்மம் என்பவையே அந்த மூன்று பட்டைகள்.
இதன் பலன்கள் இரண்டு. போகம் (உலக சுகம்) மற்றும் முக்தி.
தாபத்ரயம் என்னும் மூன்று பாத்தியில் இது நிலை நின்று கொண்டிருக்கிறது. ஆத்யாத்மிகம் உள்ளிட்டவையே இந்த மூன்று பாத்திகளாகும்.
கிராமத்தில் திரியும் கழுகுகள் இந்த மரத்தில் வசிக்கின்றன. புலன் இன்பங்களை நுகரும் சாமான்ய மனிதர்களே இந்தக் கழுகுகள். இவர்கள் சுக துக்கத்திற்கான செயல்களைச் செய்து பலனை அடைகின்றனர். இந்த சுக துக்கம் தான் இவர்களின் உணவு.
முக்தி என்ற மற்றொரு பலனை காடுகளில் வசிக்கும் முனிவர்களாகிய ஹம்ஸ பட்சிகள் புசிக்கின்றன.
இயற்கையின் பரிணாமம், தேவத் தன்மை, மனிதத் தன்மை முதலிய உருவங்களைக் கொண்டது இந்த சம்சார மரம்!
இதை உள்ளது உள்ளபடி குருமார்கள் மூலமாக அறிய முடியும்.
இப்படி உணர்ந்தவன் வேதங்களை அறிந்தவனாவான்.
நிலைத்த தன்மை கொண்ட பக்தியுடன் கூடிய குரு பாவனையால் ஞானம் என்னும் கூர்மையான கோடாலியைப் பெற்று தைரியத்துடன் இந்த சம்சார மரத்தை அடியோடு அறுக்க வேண்டும்.
மன ஊக்கத்துடன் தவறுதல் இன்றிப் பரமாத்மாவைப் பெற வேண்டும். பின்னர் ஞானமாகிய் கோடாலியைத் துறந்து விடலாம்.
இப்படி பகவான் உபதேசிக்கிறார் : என்னைப் பெற்றவுடன் ஞானமாகிய கோடாலியை துறக்கலாம்; அது வரை அந்த ஆயுதத்தை விடாதே என்பது பகவானின் அருளுரை.
ஸ்ரீமத் பாகவதத்தில் பதினொன்றாவது ஸ்கந்தத்தில் பன்னிரெண்டாம் அத்தியாயம் மேற்கூறிய சம்சார விருக்ஷம் பற்றி இப்படி விளக்கம் அளிக்கிறது.
அடுத்த அத்தியாயத்தில் இறைவனை அடைய ஒரு மனிதனுக்கு வேண்டிய சத்வ குணத்தை எப்படி அடைவது என்ற விளக்கத்தைப் பெறுகிறோம்.
சத்வ குணத்தை வளர்க்க பத்து வழிகள் உண்டு.
இதை வளர்க்க சாத்விகமான உணவு வகைகள் மட்டுமே போதும் என்பதில்லை.
அதை வளர்ப்பதற்கான பத்து வழிகள்:
- வேதங்கள், பாஞ்சராத்ரம், இறைவனின் மகிமையை விளக்கும் புராணங்கள், ராமாயண, மகாபாரத இதிகாசங்கள், ஆகமங்கள் ஆகியவற்றைப் படித்து கேட்டு உணர்தல்
- சாது ஜனங்களுடனான தொடர்பு
- கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களுக்குச் செல்லுதல்
- ஏகாந்தமாய் (தனிமையில்) வாசம் செய்வது
- பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரத்தில் எழுந்திருப்பது
- பலனை எதிர்பார்க்காமல் செய்யும் கர்மம்
- சௌக்லம், ஸாவித்ரம் யாஜ்ஞிகம் என்னும் மூவகைப்பட்ட ஜன்மத்தை அதாவது ஞான ஜன்மத்தைப் பெறுதல்
- இறைவனை தியானித்தல்
- பகவானின் மந்திரத்தைச் சொல்லுதல்
- தாபம், புண்ட்ரம் உள்ளிட்ட ஐந்து ஸம்ஸ்காரங்களைச் செய்தல்
மேலே கூறிய பத்து வழிகள் மூலம் சத்வ குணத்தை ஒருவன் வளர்த்துக் கொண்டு பயன் பெறலாம்.
பகவான் உத்தவருக்குச் சொல்லும் உபதேசமாக இது அமைகிறது.
பாகவதம் பல ரகசியங்களைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் தங்கச் சுரங்கம்.
அதைப் படித்து வாழும் வழியை அறியலாம்; உயரலாம்!
tags- சம்சாரம் , மரம்; பாவ புண்யம் ,விதைகள்.
