அகத்தியர் சிவலிங்க பூஜை செய்த இடம்!(Post No.8449)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8449

Date uploaded in London – – –4 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அகத்தியர் சிவலிங்க பூஜை செய்த இடம்!

ச.நாகராஜன்

அகத்திய முனிவரின் வரலாறு மிக நீண்டது; சுவையான சம்பவங்கள் ஏராளம் அடங்கியது.

அகத்தியருக்கும் தென்னாட்டிற்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்த ஒன்று. தமிழுக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்.

அவர் இறைவனின் ஆணைப்படி தென் திசை நோக்கி வரும் காலத்தில் வாதாபி, வில்வலன் ஆகிய இருவரும் அகத்தியரை வரவேற்று அமுது உண்ணும்படி வேண்டினர். வாதாபி ஒரு செம்மறிக் கடாவாக ஆனான். வில்வலன் அந்தக் கடாவைச் சேதித்துப் பக்குவம் செய்து அகத்தியருக்குப் படைத்தான்.

முனிவர் உண்டார். வில்வலன், “அடா! வாதாபி, வா” என உரக்கக் கூவினான்.

வயிற்றில் சுழற்றல் நேரிடும் போதே இது இரு அரக்கர்களின் மாய வித்தை என்பதை உணர்ந்த அகத்தியர் மந்திரத்தை ஜெபித்துத் தன் வயிற்றைத் தடவினார். வாதாபி ஜீரணமாகி விட்டான்.திடுக்கிட்ட வில்வலன் அகத்தியரைக் கொல்லக் கருதி அவரை நெருங்கினான். அகத்தியரோ ஒரு தர்ப்பையை ஏவி விட்டு அவனை மாய்த்தார்.

உடனே குடகு நாட்டை விட்டு நீங்கி நேராக கொங்கு நாட்டை நோக்கி அவர் வந்தார்.அங்கு சிவலிங்கத்தை வணங்கி தன் பிரம்மஹத்தியையும் போக்கிக் கொண்டார்.

அவர் துடியனூரில் பூஜை செய்ததாக துடிசைப் புராணம் கூறுகிறது.

பாடல் இதோ:

தவநெறி யிடைவிடார் சரத மாமுனி

பவமறு துடிசையம் பதிபுக் காங்கமர்

சிவபெரு மானையுந் தேவி தன்னையும்

உவகையி னொடுதொழு தொருங்குற் றானரோ

  • துடிசைப் புராணம்

இதையே ஸ்காந்தம் – காவிரி நீங்கு படலம் இப்படிக் கூறுகிறது:

ஆசில் கொங்கினுக் கணித்தி னோரிடை

வாச மீதென மகிழ்ந்து வீற்றிரீது

ஈச னார்தமை யிலிங்க மேனியி

னேச நெஞ்சினா னினைந்து தாபித்தான்

மங்கை பாகனை மற்றும் பிற்பகல்

சிங்க லின்றியே சிறந்த பூசைசெய்

தங்கண் மேவினா னவன்க ணாகிய

துங்க வெம்பவந் தொலைந்து போயதே

                 -(காந்தம், காவிரி நீங்கு படலம்)

இப்படிப்பட்ட மாமுனிவர் அகத்தியர் வழிபட்டது கொங்கு மண்டலமே என இந்தச் சம்பவத்தைச் சிறப்பித்து கொங்கு மண்டல சதகம் இருபதாம் பாடலில் குறிப்பிடுகிறது.

பாடல் :

வாதாபி வில்வல னான துணைவர் மடியவிசை

தீதாற வேகும்ப சம்பவ னன்று சிவக்குறிகண்

டேதாளி லர்ச்சனை செய்து தொடர்பவ மேகமகிழ்

மாதா மதர்நிறை சூழ்தான முங்கொங்கு  மண்டலமே

பொருள் :

வாதாபி மற்றும் வில்வலன் என்னும் இரண்டு அசுரர்களும் மடியும் படி செய்து அந்தப் பாவம் நீங்கும் பொருட்டு அகத்திய முனிவர் சிவலிங்க பூஜை செய்ததும் கொங்கு மண்டலமே ஆகும்.

அகத்திய முனிவரின் சிவ வழிபாடு நடந்தி இடம் துடியனூர் என்பது குறிப்பிடத் தகுந்தது!

tags —   அகத்தியர், சிவலிங்கம், 

***

Leave a comment

Leave a comment