
Post No. 8522
Date uploaded in London – – –17 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
அன்னா கரீனா – 3
ச.நாகராஜன்
1
அன்னா கரீனா நாவலுக்கு முகவுரை வழங்கியவர் அறிஞர் ஸ்ரீ ரா.ஸ்ரீ. தேசிகன் அவர்கள். மேலை நாட்டு இலக்கியத்தைக் கரைத்துக் குடித்துத் திறனாய்வு செய்து ஏராளமான கட்டுரைகளை எழுதியவர் அவர். அவர் அன்னா கரீனாவின் கதைச் சுருக்கத்தை அழகுறச் சொல்கிறார். அன்னாவின் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் அதற்கான சமாதானங்களையும் கூறுகிறார். அன்னா கரீனா நாவல் பிறந்த விதத்தையும் தேசிகன் அவர்கள் விளக்குகிறார். 1875ஆம் ஆண்டிலிருந்து நாவல் சிறிது சிறிதாக வெளி வர ஆரம்பித்ததையும் 1877இல் தான் நாவல் முழுவதும் வெளியானது என்பதைப் பற்றியும் குறிப்பிடுகிறார். நாவலைப் பற்றிய தனது மதிப்பீட்டையும் நாவலின் நயங்களைப் பற்றியும் ஆராய்ந்து விவரமாக அவர் தந்துள்ள முகவுரையை அப்படியே இங்கே காணலாம்.
2
முகவுரை
நாவலாசிரியரும் விமர்சனப் புலவருமான இ.எம். பாஸ்டர் (E.M.Forster) “நாவலின் அம்சங்கள்” என்ற தம் புத்தகத்தில் உலகத்திலேயே மிகச் சிறந்த மூன்று நாவலாசிரியர்களை வாயாரப் புகழ்கின்றார் : “தேசாபிமானம் பாராது தாம் கண்ட உண்மையை உள்ளபடி உரைக்கின்றார், டால்ஸ்டாயைப் போல (Tolstoy) அத்தனை சிறந்த நாவலாசிரியரை ஆங்கிலேயர்களுக்குள்ளே பார்க்க முடியாது. மனிதனின் தினசரி வாழ்க்கையையுஞ்சரி, அல்லது வீர வாழ்க்கையையுஞ்சரி டால்ஸ்டாயைப் போல ஓர் உயிர் ஓவியமாகப் படைக்க வல்ல கலைஞன் இல்லையென்றே சொல்லி விடலாம். டாஸ்டாவ்ஸ்கியைப் போல (Dostoevsky) அகமன கடலைத் துருவி ஆராய்ந்தவர்களில்லை. தற்கால மனிதனின் அகமன ஓட்டத்தை (Modern Consciousness) பிரஞ்சு ஆசிரியர் மார்சல் பூரூஸ்ட்டைப் (Morl Froust) போல செஞ்சொற்களில் சிறை செய்யவில்லை.” இது நிற்க.
இலக்கிய உலகத்தில் அமானுஷ்யமான செயல்களை ஆற்றிய டால்ஸ்டாயின் அன்னா கரீனாவின் நயங்களைச் சற்று ஆராய்வோம். நாவலின் முதல் வரியிலேயே கதையின் சோக ஒலியைக் கேட்டு விடுகிறோம். ஸ்டீபன் ஆர்க்காடிவிச் (ஸ்டீவ்) வீட்டு வேலைக்காரியோடு காதல் கொண்டு விடுகிறான். இச் செய்தி அவன் மனைவி டாலிக்குத் (Dolly) தெரிந்து விடுகிறது. தன் கணவனோடு ஒரு கூரையின் கீழ்ச் சேர்ந்துறைய மனமில்லை; வாழ்விலே அத்தனை கசப்பு ஏற்பட்டு விடுகிறது. இவர்களைச் சமாதானஞ் செய்ய ஸ்டீவின் உடன் பிறந்தவளான அன்னா கரீனா வருகின்றாள். அவள் பீட்டர்ஸ்பர்க்கில் (St.Petersburg) ஓர் உயர்ந்த உத்தியோகஸ்தரின் மனைவி. கல்யாணமாகி ஒன்பது வருஷங்கள் ஆகின்றன. அவளுக்கு செர்ஜ் (Serge) என்ற ஒரு குழந்தை யிருக்கிறது. ஆனால் இக் கல்யாணம் அவளுக்கு இன்பத்தை அளிக்கவில்லை. உள்ளத்தில் ஒரு திருப்தி இல்லை. ஆனால் தன் மகனிடத்தில் அன்புள்ளவளா யிருக்கிறாள். கதையின் தொடக்கத்திலேயே அவளுடைய வனப்பு ஒரு மந்திர வலையை வீசுகின்றது. விரான்ஸ்கியின் தாயோடு அன்னா கரீனா சேர்ந்து பிரயாணஞ் செய்கின்றாள். தன் தாயை மாஸ்கோ ஸ்டேஷனில் பார்க்க வந்த விரான்ஸ்கியை அன்னா சந்திக்கிறாள்; அவநுடைய முக அழகில் ஈடுபடுகிறாள். கண்கள் கண்களோடு பேசுகின்றன. உள்ளத்தில் காதல் மடை சற்றே திறக்கின்றது. ஒரு நடனத்தில் அன்னா மறுபடியும் அவனைச் சந்திக்கிறாள். டாலியின் சகோதரி கிட்டி (Kitty) அவனிடத்தில் மோகங் கொண்டிருக்கிறாள் என்றதை அறிந்த அன்னா அவளுக்குக் காதல் துறையில் உதவி செய்ய விரைகிறாள் – அன்னாவின் அந்தமில் அழகில் ஆழ்ந்த விரான்ஸ்கி கிட்டியை மறந்து விடுகிறான். கிட்டியின் மீது பேய்க் காதல் கொண்ட லெவின் (Levin) அவளை மணக்கின்றான். விரான்ஸ்கி மீது தான் வைத்த காதல் ஆழ்ந்த காதலன்று என்பதைக் கிட்டி அறிந்து விடுகிறாள். கிட்டி லெவின் வாழ்க்கைத் துணைவியாகி விடுகிறாள்.
அன்னா பீட்டர்ஸ்பர்க்குக்குத் திரும்பி விடுகிறாள். அவளை விரான்ஸ்கி அடிக்கடி சந்திக்கிறான். கரை கடந்த காதல் வெள்ளம் பொங்கிடவே, “நான் உனக்கு மனைவியல்லள்; விரான்ஸ்கிக்கே உரியவள்” என்கின்றாள் அன்னா தன் கணவனிடம்.
அன்னாவுக்கு உடம்பு அசௌகரியமென்று அன்னாவின் புருஷன் கரினின் கேள்விப்படுகின்றான். உள்ளத்தில் நல்ல தன்மை உள்ளவனானபடியால் தன் மனைவியைப் பார்க்க வருகின்றான். விரான்ஸ்கியும் அங்கே வருகின்றான்; இலக்கிய உலகத்தில் அழியாத ஒரு சமாதானக் காட்சி நிகழ்கின்றது. விரான்ஸ்கி துயர்ப்பாரம் தாங்காது தன்னைச் சுட்டுக் கொள்ளுகின்றான். அன்னா பிழைத்து விடுகிறாள்; விரான்ஸ்கியும் பிழைத்து விடுகிறான். மறுபடியும் பண்டைக் காதல் தழைக்கின்றது; அவிந்து கொண்டிருந்த தணல் சுடர் விடுகிறது. இரண்டு பேர்களும் இத்தாலிக்குப் போகின்றனர். சில நாட்கள் தங்கி ருஷ்யாவுக்கு வருகின்றனர். ஆனால் அன்னாவின் மனத்தில் அமைதி தேய்ந்து கொண்டே வருகின்றது. இன்பமும் மறைந்து கொண்டே வருகின்றது. இந்திரிய சுகம் சஞ்சலத்தைத் தவிர மன அமைதியை அளிக்குமோ? அவள் மனத்தில் ஐயம் குடி கொள்ள ஆரம்பிக்கிறது; நம்பிக்கை இறந்து கொண்டே வருகின்றது. விரான்ஸ்கியையும் சந்தேகிக்கிறாள்; தன்னையும் நொந்து கொள்ளுகிறாள். விரான்ஸ்கியையும் வாட்டுகின்றாள். ஆனால் அவள் உள்ளன்பு எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளுகிறது; ஒரு சிறிய விஷயத்தில் மனத்தாபம் நிகழ்கின்றது. கிராமத்திலுள்ள தன் தாயைப் பார்க்கச் செல்லுகிறான் விரான்ஸ்கி. அவனைத் தொடர்கிறாள் அன்னா. ஸ்டேஷனில் தன் காதலன் இனித் திரும்ப மாட்டான் என்ற செய்தியை உணர்கிறாள். தாங்க முடியாத துயரினால் கூட்ஸ் வண்டி சக்கரங்களுக்கடியே இரக்கமின்றித் தன்னை எறிந்து விடுகின்றாள். அவளுடைய அழகிய வதனத்தைத் தவிர மற்ற அங்கங்கள் உருத் தெரியாமல் நசுங்கி விடுகின்றன. இந்நிலை வந்து விடுகிறது அன்னாவுக்கு. அந்தோ! அழகெல்லாம் மண்ணோடு மண்ணாய் மறைந்து விடுகின்றது.
இது தான் கதையின் சுருக்கம். இத்தகைய நிகழ்ச்சி நம் வாழ்க்கையில் நடக்கக் காண்கின்றோம். ஆனால் நம் தமிழ் நாட்டில் ஒரு டால்ஸ்டாய் எழவில்லை. பிழை செய்த பெண் கசப்பு நிரம்பிய வாழ்வின் பாரம் தாங்காது தற்கொலை செய்து கொள்ளுகிறாள். இச் சம்பவத்தை அருவருப்பின்றிச் சோகம் ததும்பும் ஒரு நாவலாகக் கற்பனைத் தறியில் நூற்பது சாதாரணக் காரியமன்று.
ஒத்தெல்லோவில் (Othello) என்ன விஷயமிருக்கிறது? தன் மனைவி பிழை செய்தாள் எனச் சந்தேகித்துத் தொண்டையைப் பிடித்து அமுக்கிக் கொன்று விடுகிறான் கணவன். போலீஸ்க்கோர்ட்டு வரக்கூடிய ஒரு சம்பவம் ஷேக்ஸ்பியர் (Shakespeare) கையில் ஒரு பெருஞ் சோக நாடகமாய் அமைந்து விடுகின்றது. இங்கோ அன்னா கரீனாவில் பிழை புரிந்த ஒரு பெண் தன்னை மாய்த்துக் கொண்டு விட்டாள். அன்னாவைச் சுற்றியும் தூய வாழ்வு நடத்துகிற லெவின், கிட்டி – இவர்களைச் சுற்றியும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அன்னா கரீனாவில் இரண்டு நாவல்கள் அடங்கியிருக்கின்றன.
நிறையெனும் அங்குசத்தை மீறிப் போகின்ற உன்மத்த இந்திரிய வசத்தினால் எழுகின்ற தீமை ஒரு பக்கம்; ஏழைகளின் துயர் கண்டு நெஞ்சுருகி அதைத் துடைக்கத் தொண்டு செய்து ஆண்டவன் அருள் ஒளியைக் காணக் காத்திருக்கும் ஒரு தூய்மையான் உள்ளத்தவரின் மெய்ந்நெறி ஒரு பக்கம் – இவ்விரு சித்திரங்களை வாழ்க்கையில் பார்க்கின்றோமல்லவா? ஒன்றைப் பார்த்து மற்றொன்று நகுகின்ற நிலையை நாம் உணர்கின்றோம்.
டால்ஸ்டாயின் முன் வாழ்க்கைச் சித்திரந்தான் விரிகின்றது. வேறு நாவலாசிரியாரிருந்தால் படுக்கையாய்ப் படுத்திருந்த அன்னா இறந்து விட்டாள்; விரான்ஸ்கியும் தற்கொலை செய்து கொண்டு விட்டான் என்று கதையை முடித்திருப்பான். டால்ஸ்டாய் அப்படிச் செய்யவில்லை. அன்னாவுக்கு வியாதி அகன்று விடுகிறது; விரான்ஸ்கியும் குணமடைந்து விடுகிறான். மறுபடியும் காதல் நாடகம் நடக்கின்றது. இது தான் வாழ்க்கையில் நடக்கக் கூடியது. ‘டால்ஸ்டாயின் சித்திரம் வெறும் ஒரு கலைச் சித்திரமன்று. அது ஒரு வாழ்க்கைச் சித்திரம்’ என்று மாத்யூ ஆர்நல்டு (Matthew Arnold) கூறியது மிகப் பொருத்தமே.
“அன்னாவுக்குத் திடீரென்று அறமிலாக் காதல் எழுந்து விட்டதே, இது பொருத்தமா? இது நிகழ்வதற்கு முன் சில சந்தர்ப்பங்களை ஆசிரியர் குறித்திருக்க வேண்டாமா? இந் நிலையை உணர வாசகர்களைத் தயார் செய்ய வேண்டாமா?” என்ற கேள்விகளை யெல்லாம் விமர்சனக்காரர்கள் கேட்கின்றனர்.
அவர்களுக்குச் சமாதானம் இது தான் : நம் அகமனத்தில் எத்தனையோ உணர்ச்சிகள் துயின்று கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு சம்பவம் அவைகளைத் தூண்டி விடும். முன்பின் எதிர்பாராத உணர்ச்சி வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு வெளியோட ஆரம்பித்து விடும். இத்தகைய நிலைமை தான் அன்னாவிலும் காண்கிறோம். அக்காரணம் பற்றியே ஒரு வாழ்க்கைச் சித்திரமாய் அமைந்துள்ள அன்னா கரீனாவின் மீது குறை கூற வேண்டியதில்லை.
வாழ்வின் இன்ப வெள்ளத்தில் திளைத்த அன்னாவுக்கு இத்தகைய கோரமான மரணம் பொருத்தமன்று என்று கால்ஸ்வொர்த்தி (Galsworthy) மொழிகின்றார். முதலில் அன்னாவுக்கு வாழ்வில் அளவு கடந்த இன்பமிருந்த போதிலும், அது தேய்ந்து கொண்டே வருகின்றது. மணந்த புருஷனிடத்தில் சுகத்தைக் கண்டாளில்லை. தனக்கு ஆறுதலாயிருந்த பிள்ளையும் பக்கத்திலில்லை. விரான்ஸ்கியிடம் அவள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டாள். வாழ்வோ அர்த்தமற்றி பூசல் நிறைந்த கதையாகி விட்டது. இந்நிலையில் வாழ்வு ஒரு பெரும் பாரமாகத்தான் தோன்றும். இருள் செறிந்த மரணத்தின் நீண்ட பாதையில் செல்லுவதை விட வேறு அன்னாவுக்கு வழியில்லை. அதனால் செய்த காரியம் பொருத்தமே. சில விமர்சனக்காரர்கள் காண்கின்ற குற்றங்களெல்லாம் உற்று நோக்கினால் குணங்களாக மாறி விடும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய அன்னா வந்த விதத்தை ஆராய்வோம்.
***
– தொடரும்
tags- அன்னா கரீனா – 3