
COMPILED BY LONDON SWAMINATHAN
Post No. 9039-B
Date uploaded in London – –15 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
டிசம்பர் 14- ம் தேதி — திங்கட் கிழமை ,2020
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX
இந்த ஆண்டு நல்ல புனிதமான பண்டிகைகளுடன் நிறைவடையப் போகிறது ; டிசம்பர் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும் டிசம்பர் 30- ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்
முதலில் அவ்விரு விழாச் செய்திகளைக் காண்போம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி முதல் ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கி தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆன்லைனில் ரூ.300 கட்டணத்தில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட் வீதம் மொத்தம் 2 லட்சம் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வருகிற 24-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அதன்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 10 நாட்களுக்கு 1 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
Xxxxx
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா விதிமுறைகள் காரணமாக, 12 – 65 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணியர் திருமலைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில், இவர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கக் கோரி, தேவஸ்தான நிர்வாகத்துக்கு, பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.
இது குறித்து ஆலோசனை நடத்திய அதிகாரிகள், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணி உள்ளிட்டோருக்கும் தரிசன அனுமதி வழங்கிஉள்ளது.
Xxxx

திருப்பதி: ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை உலகம் முழுதும், ‘டோர் டெலிவரி’ செய்வதாக, சமூக வலை தளங்களில் விளம்பரம் வெளியிட்ட
போலி இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
இந்த லட்டு பிரசாதத்தை உலகத்தின் உள்ள மூலை முடுக்குகளுக்கும் டோர் டெலிவரி செய்வதாக, ஒரு போலி இணையதளம் விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனால், அந்த இணையதளத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
Xxxx
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவை பாசுரத்துடன் ஏழுமலையானை துதி எழுப்பும் நிகழ்ச்சி நடைபெறும்.
வைணவ திருத்தலங்களில் மார்கழி 1-ந்தேதி முதல் அம்மாதம் முழுவதும் சுப்ரபாத சேவை ரத்து செய்து ஆண்டாள் திருப்பாவை பாசுரம் பாடியபடி சாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில் வருகின்ற 16-ந்தேதி காலை 6.4 மணியளவில் மார்கழி மாதம் தொடங்குவதால் திருப்பதி கோவிலில் வருகிற 17-ந்தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்து 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சாமியை துயில் எழுப்பப்பட உள்ளது.
Xxxx
ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பூலோக வைகுண்டம்என போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், நாளை துவங்கி ஜனவரி, 4ம் தேதி வரை நடக்க உள்ளது.வரும், 25ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் என்ற, பரமபத வாசல் திறப்பு நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக, 24ம் தேதி மாலை, 6:00 முதல், 25ம் தேதி காலை, 8:00 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Xxxx
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வரரை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு நடக்கிறது. அன்று சனீஸ்வரர், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனிப்பெயர்ச்சியன்று கோவில் சார்பில் 3 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Xxxx
உத்திரமேரூரில் கோயிலில் எடுக்கப்பட்ட தங்க புதையலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊர்மக்கள் முடிவு
தமிழ் நாட்டில் உத்திரமேரூரில் உள்ள கோவில் ஒன்றில் தங்கப் புதையல் கிடைத்துள்ளது. தங்கம் இருப்பதை அறிந்த சிலர் அனுமதியின்றி கோவிலுக்குள் பூமியைத் தோண்டினர் . புதையல் செய்தி காட்டுத் தீ போல பரவவே மக்கள் கூ
ட்டம் வந்து கைகளில் கிடைத்ததை எல்லாம் எடுத்துச் சென்றது. இந்த செய்தியை அறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து வந்து மக்களை எச்சரித்தனர்
கோயிலில் கிடைத்த நகைகள் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோயிலில் கிடைத்த நகைகளை கொடுக்க பொதுமக்கள் மறுத்ததால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து
கோயிலில் எடுக்கப்பட்ட தங்க புதையலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊர்மக்கள் முடிவெடுத்தனர்.
xxxx
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வலிய படுக்கை என்ற மகா பூஜை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்.
மாசி திருவிழாவின் 6-ம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை மட்டுமே நடைபெறும்.
அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பஞ்சாபிஷேகம், ,உஷத் கால பூஜை, உச்சிக் கால பூஜை, வில்லிசை, அத்தாழ பூஜை, ஆகியன நடந்தன .
இதனை தொடர்ந்து வலிய படுக்கை என்னும் மகா பூஜை நடைபெற்றது.
Xxxxx

அச்சன்கோவில் ஆபரண பெட்டி தென்காசி வருகை ரத்து
அய்யப்பனின் ஐந்துபடை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி முதல் தேதி முதல் 10-ந் தேதி வரை 10 நாட்கள் மண்டல மகோற்சவ திருவிழா நடைபெறும்.
இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்கள் அடங்கிய திரு ஆபரண பெட்டி கார்த்திகை மாதம் கடைசி நாள் அன்று புனலூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசு பாதுகாப்பு பெட்டக அரங்கில் இருந்து அதற்கென பிரத்யேகமாக அலங்கரிக்கபட்ட வாகனத்தில் தேவசம்போர்டு அதிகாரிகள் தலைமையில் கேரள போலீஸ் பாதுகாப்புடன் புறப்படும்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆபரண பெட்டி ஊர்வலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆபரண பெட்டி புனலூரில் இருந்து புறப்பட்டு நேரடியாக அச்சன் கோவிலுக்கு சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
XXXXX
குடியரசு தின விழாவில் ராமர் கோவில் மாடல்
குடியரசு தின விழா, ஒவ்வொரு ஆண்டும், ஜன., 26ல், டில்லியில் விமரிசையாக கொண்டாடப்படும். ஒவ்வொரு மாநில அலங்கார ஊர்திகள், அந்த மாநிலத்தின் புகழை பறைசாற்றி, டில்லியில் ராஜபாதையில் வலம் வரும்.’இந்தாண்டு விழாவில், உத்தர பிரதேச மாநில ஊர்தியில், அயோத்தி ராமர் கோவிலின் மாடல் இடம் பெற வேண்டும்’ என, முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்புகிறார்.
தீபாவளியன்று, அயோத்தி ராமர் கோவிலில் ஆறு லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன; இது, தங்கள் மாநில அலங்கார ஊர்தியில் பிரதிபலிக்க வேண்டும் என்பது யோகியின் ஆசை.
Xxx
அழகர்கோவில் உற்சவம்
வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, ராப்பத்து என்று விமரிசையாக நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடைபெறும்.
மேற்கண்ட நாட்களில் காலை வேளையில் சுவாமி கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி எதிர்புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதனைத் தொடர்ந்து 25-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும்.
Xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
tags–141220, உலக, இந்து சமய செய்தி ,மடல், வைஷ்ணவி ஆனந்த்
Bala Subramaniam
/ December 22, 2020Very good information. I like very much
. I want to continue