

Post No. 9472
Date uploaded in London – – –9 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருக்குறுங்குடி பற்றிய வல்லோசை மிகுந்த இரு பாடல்கள்!
ச.நாகராஜன்

திருக்குறுங்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு திவ்ய ஸ்தலம். 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் இதுவும் ஒன்று. திருநெல்வேலியிலிருந்து இது 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மூலவர் : வைஷ்ணவ நம்பி தாயார்: குறுங்குடிவல்லி நாச்சியார்.
ஒரு முறை சோழ மன்னன் ஒட்டக்கூத்தர், புகழேந்தி புடை சூழ திருக்குறுங்குடிக்கு விஜயம் செய்தான்.
ஒட்டக்கூத்தரை நோக்கி, “இங்கு எழுந்தருளி அருள் பாலிக்கும் திருமால் குறித்து ஒரு பாடலைப் பாடுவீராக. அது வல்லோசை மிகுந்த கட்டளைக் கலித்துறையாக அமைய வேண்டும்” என்றான்.
உடனே ஒட்டக் கூத்தர் பாடினார்:
“திக்குளெட் டுக்கயந் துக்கமுற் றுத்திடுக் கிட்டலற
மைகடற் குட்சரந் தைக்கவிட் டோர்க்கிட மாமாதுர
இக்குமுற் றிக்கணுச் சற்றுவிட் டுத்தெறித் திட்டமுத்தைக்
கொக்குமொக் கிக்கக்கி விக்குமச் சோலைக் குறுங்குடியே”
பாடலில் வல்லெழுத்துக்கள் வந்து ஒரு கலக்கு கலக்கி விட்டதைப் பார்க்கலாம்.


இந்தப் பாடலின் பொருள் என்ன?
திக்குள் எட்டுக் கயம் – அஷ்டதிக் யானைகளும்
துக்கம் உற்று – வருத்தம் அடைந்து
திடுக்கிட்டு அலற – திகைப்படைந்து அலறும் படி
மை கடற்குள் – கருங்கடலின் மீது
தைக்க – பதியும் படியாக
சரம் விட்டோர்க்கு இடம் – பாணம் ஏவிய இராமபிரானுக்கு இடமாவது
மாமதுரம் இக்கு முற்றி – மிகவும் இனிமை உடைய கரும்புகள் முதிர்ந்து
கணு சற்று விட்டு – கணுக்கள் சற்றே வெடித்து
தெறித்திட்ட முத்தை – தெறித்த முத்துக்களை
கொக்கு மொக்கி – கொக்கானது விழுங்கி
கக்குவிக்கும் – கக்குவிக்கும் இடமாகிய
அச்சோலை – அந்த சோலைகள் சூழ்ந்த
குறுங்குடியே – திருக்குறுங்குடி தான்!
பாடலைக் கேட்டு மகிழ்ந்த சோழ மன்னன் புகழேந்தியாரைப் புன்னகையுடன் பார்த்தான்.
அவர் சும்மாவா இருப்பார். பாடினார்:-
“எட்டெழுத் தைக்கருத் திற்குறித் திட்டுநித் தம் பரவும்
சிட்டர்கட் குத்திருப் பொற்பதத் தைச் சிறக் கத் தருமவ்
வட்ட நெட் டைப்பணி மெத்தையத் திற்கிடம் வாரிசிசப்போ
ருட்டினத் துக்குலந் தத்திமுத் தீனுங் குறுங்குடியே”
பாடலைக் கேட்ட மன்னன் அருமை, அருமை என்றான்.


இதன் பொருள்:-
எட்டெழுத்தை – திரு அஷ்டாக்ஷரத்தை
கருத்தில் குறித்திட்டும் – தன் மனத்தே தியானித்து
நித்தம் பரவும் சிட்டர் – தினமும் துதிக்கின்ற சீடர்களுக்கு
திருப் பொற்பதத்தை – தமது அழகிய திரு பாதகமங்களை
சிறக்கத் தரும் – சிறப்பாகத் தருகின்ற
அவட்டம் நெட்டை பணி மெத்தை – அந்த வட்ட வடிவாகச் சுற்றி இருக்கின்ற ஆதி சேஷனாகிய மெத்தை உடைய
அத்தற்கு இடம் – எம்பெருமானுக்கு இடமாக ஆவது
வாரிசிசப் பொருட்டில் – தாமரை மலரின் கர்ணிகையில்
நத்துக் குலம் தத்தி – சங்குக் கூட்டங்கள் தாவியிருந்து
முத்து ஈனும் – முத்துக்களைப் பெறுகின்ற
குறுங்குடியே – திருக் குறுங்குடியே தான்!
இரு பாடல்களைப் பெற்ற பெருமாளுக்கும் மகிழ்ச்சி; மன்னனுக்கும் மகிழ்ச்சி;
மக்களுக்கும் மகிழ்ச்சி!
ஏன் ,காலம் கடந்து நிற்கும் இரு பாடல்களை இன்று பாடி ரசிக்கும் நமக்கும் மகிழ்ச்சி தானே!
***
tags- திருக்குறுங்குடி , வல்லோசை , பாடல்கள்