
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9505
Date uploaded in London – – 18 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 18-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!
கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோவில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்விலர் ஆகில் சார்வது சதிரே
நம்மாழ்வார் திருவடி சரணம்!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 வைஷ்ணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழும் திருமாலிருஞ்சோலை ஆகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள இது மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இன்று அழகர் கோவில் என்று அழைக்கப்படும் இந்த தலத்திற்கு சோலை மலை, மாலிருங்குன்றம் என்ற பெயர்களும் உண்டு.
பெருமாளின் திரு நாமம் : ஸ்ரீ பரம ஸ்வாமி –
உற்சவமூர்த்தி : அழகர் அல்லது சுந்தரராஜப் பெருமாள்.
தாயார் நாமம்: கல்யாண சுந்தரவல்லி.
விமானம் : வட்ட வடிவமாக அமைந்துள்ள சோமசந்த விமானம்
இந்தத் தலத்தில் அற்புதமான சிலம்பாறு ஓடுகிறது. மலையில் சிறிது தூரம் நடந்து சென்று அதைக் காணலாம்.
இதைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. சுதப முனிவர் என்னும் மாமுனிவர் இந்தத்தலத்தில் உள்ள நூபுர கங்கை எனப்படும் சிலம்பாற்றில் நீராட வந்தார். அப்போது துர்வாச முனிவர் அவர் எதிரில் வந்தார். சுதபர் அவரைக் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை, மண்டூகமாக அதாவது தவளையாக மாற சாபம் இட்டார். சுதபர், சாப நிவர்த்தி வேண்டிக் கேட்க, ‘வைகை ஆற்றில் நீண்ட காலம் தவம் இயற்றுக’, என்றார் துர்வாசர். அதன்படி சுதபர் தவம் இயற்ற, திருமால் அருளால் அவர் சாபம் நீங்கப் பெற்றார். முனிவர் திருமாலைக் கண்டு வணங்கிய உருவமே சுந்தரபாஹு என்று அழைக்கப்படும் அழகர் ஆவார்.
இங்கு கலைநுணுக்கம் கொண்ட பல சிற்பங்கள் உள்ளன. ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இந்த இசைத்தூணின் உச்சியில் உள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஒரு உருண்டை உள்ளது, அதே சமயம் அது எடுக்க முடியாதபடியும் அமைந்துள்ளது. இது ஒரு சிற்ப அற்புதமாகும்.
கோவிலின் காவல் தெய்வமாக உள்ள பதினெட்டாம் படி ஸ்ரீகருப்பணசாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால் அனைத்து பக்தர்களும் முதலில் அவரை வணங்குதல் மரபாகும்.
கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணர் உள்ளிட்ட ஏராளமான சிற்பங்கள் உள்ளன. வசந்த மண்டபத்தில் இராமாயண, மஹாபாரத காட்சிகளைச் சித்திரங்களாகக் காணலாம்.

ஐதிகத்தின் படி கள்ளழகர் மீனாக்ஷி தேவியின் சகோதரர். ஆகவே சித்திரை மாதம் நடக்கும் மீனாட்சி கல்யாணத்திற்கு தனது ஆயுதங்கள் பூண்ட நிலையில் அவர் சித்திரா பௌர்ணமி அன்று மதுரை நோக்கி வருகிறார். எதிர் சேவை என்று அழைக்கப்படும் இந்த விழாவிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் மாபெரும் விழாவிலும் பல லட்சம் பேர் இங்கு கூடித் திரண்டு அழகரைத் தொழுது ஆனந்தம் அடைவர். அழகர் திருமாலிருஞ்சோலையிலிருந்து மதுரை வரை பல மண்டகப் படிகளில் எழுந்தருளி, கல்யாணம் முடிந்து விட்டதை அறிந்து, வண்டியூர் வரை சென்று மீள்வார். இப்படி ஒரு அமைப்பு திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு மீனாக்ஷி கல்யாணமும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ஒன்று சேர்ந்து இருக்கும்படி ஆரம்பிக்கப்பட்டது.
பழம்பெரும் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் இந்தத் தலம் குறிப்பிடப்படுவதால் இதன் பழமையை அறியலாம்.இந்தத் தலத்தில் பெரியாழ்வார் 34, ஆண்டாள் 11, பேயாழ்வார் 1, திருமங்கை ஆழ்வார் 33, பூதத்தாழ்வார் 3 நம்மாழ்வார் 46 ஆக இப்படி ஆறு ஆழ்வார்கள் 128 பாசுரங்களை அருளியுள்ளனர்.
இந்தத் தலத்தைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு. சுந்தர ராஜப் பெருமாளை வணங்கி வழிபட்ட ஆண்டாள்,
“நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு
நான், நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார் வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ”
என்று இப்படி நூறு தடா எனப்படும் நூறு அண்டா அக்காரவடிசில் மற்றும் நூறு தடா வெண்ணெய் சமர்ப்பிக்க வேண்டுதல் செய்து அதைப் பாடலிலும் பதிவு செய்தார்.
பின்னால் வந்த ஸ்ரீ இராமானுஜர், ஆண்டாள் தனது வேண்டுதலை நிறைவேற்றினாரா இல்லையா என்பதில் சந்தேகம் கொண்டு அண்ணனாக இருந்து, தானே நூறு அண்டா அக்காரவடிசிலையும் நூறு அண்டா வெண்ணெயையும் சமர்ப்பித்து ஆண்டாளின் வேண்டுதலைப் பூர்த்தி செய்தார்.
இந்தத் தலத்தில், கோவிலில், பிரசாதமாக வழங்கப்படும் அடை தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்று. விசேஷமாகத் தயாரிக்கப்படும் இதன் சுவை சொல்லுக்கு அப்பாற்பட்டது.
இன்றும் அழகு குறையாமல் அப்படியே இருக்கும் அழகர்கோவில் அனைத்து பக்தர்களும் செல்ல விரும்பும் ஒரு அற்புதத் தலம் என்பதில் ஐயமில்லை.
காலம் காலமாக ஆயிரமாயிரம் பக்தர்கள் வழிபட்டு வரும் கள்ளழகர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
திருமங்கை ஆழ்வார் அருள் வாக்கு:
“வலம்புரி ஆழியனை வரையார் திரள் தோளன் தன்னை
புலம்புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை
சிலம்பியல் ஆறுடைய திருமாலிருஞ்சோலை நின்ற
நலம் திகழ் நாரணனை நணுகுங் கொல்? என் நன் நுதலே!”

நன்றி, வணக்கம்!
***
tags- திருமாலிருஞ்சோலை , அழகர் கோவில்
