
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9530
Date uploaded in London – – 25 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 25-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!
மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு, சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு, தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே
ஞானசம்பந்தர் திருவடி போற்றி! ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 51 சக்தி பீடங்களில் மந்த்ரிணி பீடமாகத் திகழும் மதுரை ஆகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள இது சென்னையிலிருந்து 454 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. மலயத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை ஆகியோரின் தவத்திற்கிணங்க அவர்களுக்கு மீனாட்சி மகளாகப் பிறந்தாள். மூன்று மார்பகங்களுடன் பிறந்த தேவி தன்னை மணம் முடிப்பவரைப் பார்க்கும் போது நடுவில் உள்ள மூன்றாவது மார்பகம் மறையும் என்ற நிலையில் சுந்தரேஸ்வரராகத் தோன்றிய சிவபிரானைப் பார்த்தவுடன் மூன்றாவது மார்பகம் மறையவே அவரையே மணமுடித்தாள் என இப்படி புராண வரலாறு கூறுகிறது.
இறைவன் திரு நாமம் : ஸ்ரீ சுந்தரேஸ்வரர் – சொக்கநாதர், சோமசுந்தரர் என்ற பெயர்களும் உண்டு. அம்மன் திரு நாமம்: மீனாக்ஷி
மீனாக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரர் சந்நிதிகளின் மேல் உள்ள விமானங்கள் தங்கத்தினால் வேயப்பட்டவை. தல விருக்ஷம் : கடம்ப மரம் தீர்த்தம் – இந்திரனால் அமைக்கப்பட்ட பொற்றாமரைக் குளம்
மீனாக்ஷி அம்மனின் சிலை மரகதத்தால் ஆனது. மரகதவல்லி, அங்கயற்கண்ணி, தடாதகை, பாண்டியராஜகுமாரி என்ற பல சிறப்புப் பெயர்களும் மீனாக்ஷி அம்மனுக்கு உண்டு. மீன் எப்படி தன் கண் பார்வையினாலேயே தனது முட்டைகளைத் தன்மயமாக்குகிறதோ அதே போல தனது பக்தர்களை தன் கண்களின் பார்வை மூலம் மீனாக்ஷி காப்பாற்றுவதாக மேலோர் தெரிவிக்கின்றனர். மீனாக்ஷி அம்மனின் கருவறை 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல் யானைகளும் தாங்கி நிற்கும் படி தேவேந்திரனால் அமைக்கப்பட்டதாகும்.
ஸ்வாமி சந்நிதியில் உள்ள லிங்கம் மேருமலை, வாரணாசி உள்ளிட்ட தலங்களை விட மிகப் பழமையானது என்பதால் இது மூல லிங்கம் என்று கூறப்படுகிறது.
சிவபிரான் தாண்டவமாடிய பஞ்ச ஸ்தலங்களில் இது ரஜத சபை எனப்படும் வெள்ளியம்பலம் ஆகும். இங்கு இறைவன் கால் மாறி வலது காலைத் தூக்கி நடனமாடிய கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சியைக் கண்டு மகிழலாம்.


வைகை நதிக் கரையில் அமைந்துள்ள இந்தத் தலம் தொன்று தொட்டு புகழ் பெற்ற தலமாக இருந்து வந்திருப்பதை ஏராளமான புராணங்களும், பழம்பெரும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஆலவாய் என்றும் நான்மாடக் கூடல் என்றும் தூங்கா நகரம் என்றும் பல்வேறு சிறப்புப் பெயர்களைக் கொண்ட இது சங்கத் தமிழ் வளர்த்த தமிழ் நகரமாகும். இறைவனே 49 புலவர் உள்ள சங்கப் புலவர் சபையில் தலைவராக இருந்திருப்பதோடு கோவிலின் உள்ளே உள்ள மண்டபத்தில் இன்றும் அருள் பாலித்து வருகிறார்.
மீனாக்ஷி சந்நிதிக்கு வெளியில் அமைந்துள்ள பொற்றாமரைக் குளம் தகுதி வாய்ந்த நூல்களை மட்டும் ஏந்தும் சங்கப் பலகை கொண்ட அதிசயக் குளம் என்பது உள்ளிட்ட ஏராளமான வரலாறுகளைக் கொண்டது. திருக்குறள் அரங்கேற்றப்பட்ட இடமும் இதுவே! கோவிலின் உள்ளே சுந்தரேஸ்வரர் பிரகாரத்தில் அமைந்துள்ள முக்குறுணி விநாயகர் மிக பெரிய அளவில் இருப்பதோடு விழாக் காலங்களில் உரிய முறைப்படியான பெரும் அப்பங்கள், கொழக்கட்டைகள் உள்ளிட்ட நிவேதனத்தால் வழிபடப் பெறுகிறார். இங்குள்ள முருகன், துர்க்கை சிலைகளுக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு.
மீனாட்சி பட்டணம் என்று அன்புடன் அழைக்கப்படும் இந்தத் தலத்தின் அரசாட்சி உரிமையைப் பெற்றவர் மீனாட்சி அம்மனே. அவரை முதலில் வணங்குவதே இங்குள்ள மரபாகும். ஏராளமான உற்சவங்களைக் கொண்ட கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்களில் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
கோவிலில், மூன்று இடங்களிலிலிருந்து வருவது போன்ற குரங்கு சிலை, ஒரு புறம் பார்த்தால் பசு, மறு புறம் பார்த்தால் யானை என்று அமைக்கப்பட்ட சிற்பம், மஹாபாரத வீரர்கள் உள்ளிட்டோரின் சிலைகள் என நூற்றுக் கணக்கில் அதிசய சிற்பங்கள் உள்ளன. வடக்குக் கோபுர வாயில் வழியாக நுழைந்தால் இடப்பக்கம் நாம் காண்பது பல்வேறு ஸ்வரங்களை இசைக்கும் இசைத் தூண்களைத் தான்! திருக்கல்யாண மண்டபம், அஷ்ட சக்தி மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், 985 தூண்கள் கொண்ட, எங்கிருந்து பார்த்தாலும் மையம் தெரியும் படி அமைக்கப்பட்டுள்ள ஆயிரங்கால் மண்டபம், உள்ளிட்ட ஏராளமான மண்டபங்கள் பல்வேறு அரசர்களால் காலந்தோறும் கட்டப்பட்டு வந்துள்ளன. கோவிலின் எதிரில் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள திருமலை நாயக்கர் மன்னர் கட்டிய புது மண்டபம் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.
அறுபத்துநான்கு திருவிளையாடல்களைக் கொண்ட அற்புதத் தலம் இது. பிட்டுக்கு மண் சுமந்தது, நரியைப் பரி ஆக்கியது உள்ளிட்ட வரலாறுகளை அனைவரும் அறிவோம். அத்திருவிளையாடல்களின் சின்னங்களாக ஆனைமலை, பசுமலை, நாகமலை உள்ளிட்டவை இன்றும் மதுரை நகரிலும் மதுரையைச் சுற்றிலும் உள்ளன. சுவாமி சந்நிதி பிரகாரங்களில், இந்த 64 விளையாடல்களின் சித்திரங்களைக் காணலாம். கோவிலைச் சுற்றி சதுர வடிவில் ஆடி, ஆவணி, சித்திரை, மாசி வீதி என மாதங்களின் பெயர்களைக் கொண்ட வீதிகள் உள்ளன. மாசி வீதியில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் குறிப்பிடத் தகுந்த ஒரு நிகழ்ச்சியாகும். கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன. தெற்குக் கோபுரம் 170 அடி உயரம் கொண்டு வானளாவி இருக்கிறது.
பாண்டிய நாட்டில் முக்கியத் தலமாகத் திகழும் இதில் ஞானசம்பந்தர் 9 பதிகங்களையும் அப்பர் இரு பதிகங்களையும் அருளியுள்ளனர். அருணகிரிநாதர் 12 திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளார். நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசியார், மூர்த்தியார் ஆகிய நாயன்மார்கள், சுந்தரர், மாணிக்கவாசகர், அப்பய்ய தீக்ஷிதர்,நீலகண்ட தீக்ஷிதர் உள்ளிட்ட ஏராளமான சித்தர்கள், மகான்கள் வசித்த தலம் இது. பகவான் ரமணர் உயரிய ஞான அனுபவம் பெற்ற இல்லம் தெற்கு கோபுரத்திற்கு எதிரில் உள்ள தெருவில் சிறிது தூரத்தில் உள்ளது.
திருப்பல்லாண்டு பாடப்பட்ட வைணவ திருத்தலமும் மதுரையே. ஸ்ரீ கூடலழகர் அருள் பாலிக்கும் இது 108 வைஷ்ணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகவும் அமைகிறது. பாண்டியனுக்கு மெய் காட்டிய பொட்டல் இன்று பேச்சு வழக்கில் மேங்காட்டுப் பொட்டலாக மாறி உள்ளது. இது மீனாட்சிஅம்மன் தெற்குக் கோபுரத்திற்கு மிக அருகே உள்ளது. காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வரும் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
அப்பர் அருள் வாக்கு:-
“வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்று என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கி நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே”
நன்றி, வணக்கம்!
tags– மதுரை, மீனாக்ஷி ,சுந்தரேஸ்வரர், கோவில்,