
Post No. 9598
Date uploaded in London – – –13 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 8 கட்டுரை எண் 9594 வெளியான தேதி 12-5-2021
PART TWO- புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 9
ச.நாகராஜன்
25. 28 நரகங்களில் யார் யாருக்கு எந்த எந்த நரகம்?!
(15 முதல் 28 முடிய உள்ள நரகங்கள்)
15. பூயோதம் : ஆசாரத்தையும் வெட்கத்தையும் விட்டு, தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை எவன் ஒருவன் பாலியல் உறவு கொள்கிறானோ அவனும், ஆசாரத்தை விட்டு பசு, பறவைகள் போல எவன் ஒருவன் வாழ்க்கை நடத்துகிறானோ அவனும், மலம், மூத்திரம், சிலேஷ்மம், ரத்தம் இவை நிறைந்துள்ள நரகில் தள்ளப்பட்டவராய் அவற்றையே மாறி மாறி உண்டு கொண்டிருப்பர்.
16. பிராணரோதம் : எந்த பிராம்மணன் நாய், கழுதை முதலிய மிருகங்களுக்குத் தலைவனாக இருந்து நாள் தோறும் வேட்டை ஆடுகின்றானோ, எவர்கள் மிருகங்களைக் கொல்கின்றார்களோ அவர்களை யமபடர்கள் பாணங்களால் அடித்து வருந்தும்படி செய்வர்.
17. விசஸனம் : எவர்கள் டம்பத்திற்காக பசுக்களைக் கொன்று யாகங்களைச் செய்கின்றார்களோ, அந்த அதர்மர்களை விசஸன நரகத்தில் யமதூதர்கள் தள்ளி, குரூரமான சாட்டையினால் வீசி அடிப்பர்.
18. லாலாபக்ஷம் : எவன் காமத்துடன் தனது வீரியத்தைத் தனது மனைவியைக் குடிக்கச் செய்கின்றானோ அவனை இந்திரிய குண்டத்தில் தள்ளி அதில் ஆழ்த்தி அதனையே ஆகாரமாக உண்ணச் செய்வர்.
19.சாரமேயாதனம் : எந்தக் கள்வர்கள் வீடு முதலானவற்றில் நெருப்பை வைக்கின்றார்களோ, எவர்கள் விஷத்தை உண்ணும்படி செய்கின்றார்களோ, எவர்கள் கூட்டம் கூட்டமாய் மக்களைக் கொல்கின்றார்களோ, எந்த ராஜாக்கள் ராஜாங்கத்தைப் பாழாக்குகின்றார்களோ அவர்களை நாயுணவைத் தின்னும்படிச் செய்வதோடு, மகா குரூரமான இருபதுக்கு மேற்பட்ட நாய்களால் கடித்துத் தின்னச் செய்வர். எழுநூறு நாய்களால் கடிக்கப்படும் நரகத்துக்குச் சாராமேயாதனம் என்று பெயர்.
20. அவீசி : எந்த ஒரு மனிதன் ஒரு பொருளை ஒருவனுக்குத் தானம் செய்யும் போதும் பிரியமாகக் கொடுக்கும் போதும், சாக்ஷி சொல்லும் போதும் தன் பெயரைச் சொல்லுகின்றானோ அந்த பாவபுத்தி உடைய மனிதனை அவீசி என்னும் கொடிய நரகத்தில் எமபடர்கள் நூறு யோஜனை உயரமுடைய மலையின் உச்சியிலிருந்து கீழே தள்ளுவர். அப்படி வீழும் போது அந்த நரகிடமெல்லாம் நீரலை போல் கண்ணுக்குத் தோன்றும். அந்த அலை தோற்ற மாத்திரமாகையால் உடல் பொடிப்பொடியாகிப் போகும். போனாலும் உயிர் போகாது. பொடியாய்க் கிடக்கும் அவர்களை யம தூதர்கள் எடுத்துக் கட்டி மீண்டும் அந்த நரகத்தில் தள்ளுவர்.
21. பரிபாதனம் : பிரம்ம, க்ஷத்திரிய, வைசியர், இவர்களில் யாரானாலும் வேறு எந்த சாதியினரானாலும் சோம பான, சுரா பானங்களைச் செய்வாராயின் அவர்களைப் பரிபாதன நரகில் தள்ளி நெருப்பில் காய்ச்சி உருக்கி இருக்கும் எழுகிரும்பை எமபடர்கள் குடிக்கச் செய்வர்
22. க்ஷாரகர்த்தமம் : எந்த அதமன் தன்னையே புகழ்ந்து சொல்லிக் கொண்டு பிறப்பிலும் தவத்திலும் வருணத்திலும் ஆசிரமத்திலும் ஆசாரத்திலும் உயர்ந்திருக்கின்றவர்களை மதிக்காமல் அவமதிப்பானோ அவ்னை க்ஷாரகர்த்தம நரகில் எமபடர்கள் தலைகீழாகக் கிடத்திப் பல துன்பத்தை அனுபவிக்கச் செய்வர்.
23. ரக்ஷோகணம் : எவர்கள் மனிதனைப் பசுவைப் போல் கட்டி நரமேத யாகம் செய்கின்றார்களோ அவர்களையும், பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி நரபசுவைப் புசிப்பார்கள் ஆயின் அவர்களையும், யம லோகத்தில் நரபசுவாகிய அவர்களே முன்னின்று எங்களைக் கொன்றவர்கள் நீங்கள் அல்லவா என்று சொல்லிக் கத்தியினால் அறுத்து அவர்கள் ரத்தத்தைக் குடித்துக் கூத்தாடுவார்கள். இவர்களைப் போலவே மாமிசத்தை உணவாகக் கொள்பவர்களும், புருஷனைக் கொன்று பக்ஷிக்கின்றவர்களும் அந்தந்த மாமிசத்துக்குரிய மிருகாதிகளாலும் புருஷர்களாலும் கொல்லப்பட்டுத் தின்னப்படுவார்கள்.
24.சூலப்ரோதம் : எவர்கள் காட்டிலாவது கிராமத்திலாவது யாதொரு தீங்கும் செய்யாதவர்களைக் கொலை செய்கின்றார்களோ, எவர்கள் பிறருக்குத் தங்களிடம் நம்பிக்கை உண்டாக்கிப் பின் கொலை செய்கின்றார்களோ எவர்கள் சூலத்தினாலாவது, யந்திரக் கயிற்றினாலாவது தங்களைக் கொலை செய்கின்றார்களோ இவர்களெல்லாம் சூலப்புரோத நரகத்தில் தள்ளப்பட்டு, சூலம் முதலானவற்றில் கோர்க்கப்பட்டு கூர்மையான மூக்குள்ள கழுகு, கொக்கு முதலானவைகளால் அங்குமிங்கும் ஓடித் திரிந்து அலைபவர்களாய், அப்பொழுது நேரிடும் பிராணிகளையும் இம்சைப் படுத்துகின்ற சுபாவம் உள்ளவர்களாய் தாங்கள் முன் செய்த தீய கர்மங்களை நினைத்து வருந்துகின்றவர்களாய் சகல துன்பங்களையும் அனுபவிப்பர்.
25. தந்தசூகம் : பாம்பு முதலான துஷ்ட ஜந்துக்களும், தேள் முதலான விஷப் பூச்சிகளும், ஐந்து முகம், ஏழு முகம் உள்ள குரூர ஜந்துக்களும் சூழ்ந்திருந்து அதில் வீழ்பவரைப் புசித்துக் கொண்டிருக்கும்.
26. வடாரோதம் : குரூர புத்தியுடைய எந்த மனிதர்கள் மலைமுழைகளிலும் பள்ளங்களிலும் கூண்டு முதலியவைகளிலும் வளைகளிலும் இருக்கின்ற ஜந்துக்களை உபத்திரவாப்படுத்துகின்றார்களோ அவர்களை மலைமுழை முதலானவற்றைப் போலிருக்கின்ற நரகங்களில் தள்ளி விஷத்தினாலும் நெருப்பினாலும் புகையினாலும் வருத்துவர்.
27. பர்யாவர்த்தனகம் : எவன் உண்ணும் சமயம் வந்திருக்கும் விருந்தினரைப் பார்த்துப் பொறாதவனாய் அவர்களைக் கொளுத்த வேண்டுமென்று லோபத்தினால் எண்ணுகின்றானோ அவனுடைய கண்களைச் காக்கை கழுகு முதலான குரூர ஜந்துக்களால் பிடுங்கிக் கொத்திப் உபாதைப்படுத்தும்படிச் செய்வர். அவைகள் தாமே கூட வந்து துன்பப்படுத்தும்.
28. சூசீமுகம் : எவர்கள் நாம் செல்வத்தை அடைந்திருக்கின்ற பணக்காரர்களாய் இருக்கின்றோம் என்று கர்வம் கொண்டிருக்கின்றார்களோ, எவர்கள் பிறரை நோக்கி பணத்திற்குச் செலவு வருகின்றதென்று எண்ணி மனத்தில் வெறுப்பையும் முகத்தில் சுளிப்பையும் காட்டிச் சந்தோஷத்தை அடையாமல் இருக்கின்றார்களோ, எவர்கள் பூதம் போல் பணத்தைக் காக்கின்றார்களோ, இவர்களையெல்லாம் யமதூதர்கள் சூசீமுகம் என்னும் நரகில் தள்ளி எண்ணமுடியாத துன்பத்தைச் செய்வர். எவர்கள் பணத்தைக் கொடுப்பதாக வாங்கி விட்டுப் பின்னர் அதைக் கொடுக்காமல் மோசம் செய்கின்றார்களோ அவர்களைக் கயிற்றினால் கட்டி நெருக்கி எல்லா அங்கங்களிலும் அடித்துத் துன்புறுத்துவர்.
இப்போது என்னால் சொல்லப்பட்டனவும் சொல்லப்படாதனமுவான அநேக விதமான பாப பேதங்களுக்குத் தக்கபடி நரக பேதங்களும் அவைகளில் அனுபவிக்கப்படும் துன்ப பேதங்களும் உள்ளன. இவ்வாறு நாராயணர் நாரதருக்கு உரைத்தார்.
- ஸ்ரீ தேவி பாகவதத்தில் எட்டாம் ஸ்கந்தத்தில் 22,23ஆம் அத்தியாயங்கள்

***
tags- நரகம்-2