கூரத்தாழ்வானின் பண்பு நலம்!(Post No.9663)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9663

Date uploaded in London – –  –30 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வைணவ அமுதத் துளிகள்

கூரத்தாழ்வானின் பண்பு நலம்!

ச.நாகராஜன்

வைணவ ஆசார்யர்களில் உயர்ந்த இடத்தைப் பெறுபவர் கூரத்தாழ்வான். அவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் அவரது உயர்ந்த பண்பைப் பறை சாற்றும்.

இறைவனிடமிருந்து விலகி நிற்கும் மனிதர்கள் மீது கூட பெரும் மகான்களுக்கு எல்லையற்ற கருணை உண்டு. ஒரு நாள் கூரத்தாழ்வான் தன் வழியில் சென்று கொண்டிருந்த போது ஒரு பாம்பு தவளை ஒன்றைப் பிடித்து விழுங்குவதைப் பார்த்தார். தவளை ஓலக் குரலில் கத்திக் கொண்டிருந்தது.

இந்தத் தவளையானது யாருக்குத் தனது ஓலக் குரலை அனுப்பிக் கொண்டிருக்கிறது? யார் வந்து இதன் மரண ஓலத்தைக் கேட்டு காப்பாற்றப் போகிறார்? இவ்வாறு எண்ணிப் பெருமூச்சு விட்ட அவர் மயங்கி விழுந்தார்.

 நம்மாழ்வார் திருவாய்மொழியில் நான்காம் பத்தில் ஒன்பதாம் பகுதியில் முதல் பாசுரத்தில் நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க எண்ணாரத்ன துயர் விளைக்கும் இவையென்ன உலகியற்கை என்று கூறுகிறார்.

இந்தப் பத்துப் பாடல்களில் நம்மாழ்வார் உலக இயற்கையில் வெறுப்புற்று திருவடி சேர்க்குமாறு எம்பெருமானை வேண்டுகிறார்.

இதை விளக்கும் பகுதியில் கூரத்தாழ்வானைப் பற்றிய இந்த சம்பவம் குறிப்பிடப்படுகிறது.

பகவத் விஷயம் தொகுதி 4 பக்கம் 1960-61இல் இதைக் காணலாம்.

அடுத்து இன்னொரு சம்பவம். கருணையே உருக் கொண்டவர் கூரத்தாழ்வான் என்பதை எடுத்துக் காட்டுகிறது இது.

ஸ்ரீரங்கத்தில் காவேரி ஆற்றில் ஒரு பெண்மணி தனது பானைகளில் நீரை நிரப்பிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்தப் பானைகளை அவள் தலையில் தூக்கி வைத்து உதவி செய்ய அங்கு யாரும் இல்லை. இதைப் பார்த்த கூரத்தாழ்வான் உடனே அந்தப் பானைகளைத் தூக்கி அந்தப் பெண்மணியின் தலையில் வைத்தார். தான் உயர்ந்த ஜாதி, அந்தப் பெண்மணி தன்னை விட கீழ் ஜாதி என்றெல்லாம் அவர் பாகுபாடு பார்க்கவில்லை. உதவி செய்வதே தன் கடமை என கருணையின் உருவமாக அவர் வாழ்ந்து வந்ததை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

இதுவும் ‘நண்ணாதார்’ எனத் தொடங்கும் பாசுர விளக்கமாகவே அமைகிறது. (திருவாய்மொழி 4-9-1)

அவர் வாழ்வில் நடந்த இன்னொரு சம்பவம் இது.

கூரத்தாழ்வானுக்கு பராசர பட்டர், வேத வியாஸ பட்டர் என இரு மகன்கள் உண்டு. ஒரு நாள் அவரது மனைவி ஆண்டாள் மகன்களுக்கு திருமண வயது வந்தும் கூட அவர் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லையே என வருந்தி தன் வருத்தத்தை அவரிடம் கூறினார்.

“அப்படியா? நாளைக்கே நான் கோவிலுக்குச் செல்லும் போது பிள்ளைகளை அங்கு கூட்டிக் கொண்டு வா” என்றார் கூரத்தாழ்வான். மனைவி ஆண்டாள் அப்படியே செய்தார். அரங்கன் முன்னால் நின்ற கூரத்தாழ்வான், “ இதோ, பிள்ளைகள் கல்யாணம் ஆக வேண்டிய வயதுக்கு வந்து விட்டனர் என்கின்றனர்.” என்றார்.

உடனே பெருமாள், “ இந்த விஷ்யம் என்னுடைய சொந்த விஷயம். பையன்களுக்குச் சரியான துணை கிடைக்கும் படி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

மறுநாளே நல்லகுடியிலிருந்து பிறந்த ஒரு பெண்ணின் தந்தையார் வந்து மணம் பேசித் தன் பெண்ணை பட்டருக்குத் தாரை வார்த்துத் தந்தார்.

இந்த சம்பவத்தை பகவத் விஷயம் ஐந்தாம் தொகுதியில் நிறைந்தவன் என்ற பாசுர விளக்கத்தில் காணலாம். திருவாய்மொழி 5-5-7இல் ‘நிறைந்தவன் பழி நம் குடிக்கு இவன் என்று அன்னை காண கொடான்’ என்று வரும் பாடலைக் காண்க.

பகவத் விஷயம் அரிய விஷயங்களை எளிய நடையில் சுவைபடச் சொல்லும் ஒரு நூல்!

***

tag- கூரத்தாழ்வான்

Leave a comment

Leave a comment