
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9757
Date uploaded in London – – 21 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 20-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!
காளமேகம் நிறக் காலனொடு, அந்தகன் கருடனும்
நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன, நினைவு உறின்,
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்,
கோளும் நாளும் தீயவேனும், நன்கு ஆம், குறிக்கொண்மினே
திருஞானசம்பந்தர் திரு நாமம் போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது நவகிரக ஸ்தலங்களுள் ராகு ஸ்தலமாக அமையும் திருநாகேச்சரம் தலமாகும். இது கும்பகோணத்திற்குக் கிழக்கே 6 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
இங்குள்ள நாகநாத ஸ்வாமி திருக் கோவிலில் ராகு பகவான் தன் இரு தேவியருடன் தனிக் கோயில் கொண்டு தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.ராகு பகவானுக்கு ராகு கால வேளைகளில் இங்கு அபிஷேகம் செய்வது சிறப்பான ஒரு நிகழ்ச்சியாகும். தினமும் பத்து முதல் 500 அபிஷேகம் வரை நடைபெறுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் திரளாக வருகை புரிகின்றனர்.
ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும் போது அவர் திருமேனியில் வழிந்தோடும் வெண்மை நிறப் பால் நீல நிறமாக மாறுகிறது. பாதத்தை அடையும் போது பால் மீண்டும் தூய வெண்மை நிறமாக மாறித் தரையில் ஓடுவது அதிசயமான காணக் கண் கொள்ளாக் காட்சியாகும். இங்கு நாகராஜனான ராகு பகவான் சிவபிரானை பூஜை செய்து வழிபட்டதால் இந்தத் தலம் திரு நாகேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றது. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பகவானைத் தரிசிக்கலாம். யோகத்திற்கு அதிபதியான யோககாரகனான ராகு பகவான் சிறந்த சிவபக்தர். சனி, செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்களில் ஒன்றை விட ஒன்று பலம் மிக்கது. இந்த கிரகங்கள் அனைத்தையும் விட ராகுவும் கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் கூற்றாகும். ஆகவே ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து காலம் காலமாக வழி படுகின்றனர்.
ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும் போது காப்பரிசி எனப்படும் வெல்லமும் அரிசியும் கலந்து நிவேதனம் செய்து விட்டு அதை சந்நிதியில் வைத்துப் பூட்டி விட்டுச் செல்வது வழக்கம். மறுநாள் வந்து பார்க்கும் போது அந்த அரிசி இருக்காது. அதை நாகம் வந்து தின்று விடும் என்பார்கள். 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடந்த ஒரு அதிசய நிகழ்ச்சி இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அமைந்தது. அன்று அர்ச்சகர் பூஜை செய்ய காலை 6 மணிக்கு வந்த போது விக்ரஹத்தின் திருமேனியில் ஐந்தரை அடி நீளமுள்ள பாம்புச் சட்டை ஒன்று மாலை போலத் தொங்கிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தி பரவி, பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ராகு பகவானை தரிசித்தனர். பாம்புச் சட்டையின் வால் பகுதி ராகு பகவானின் இடப்புறமும் தலைப்பகுதி வலப்பக்கம் உள்ள அம்மனின் மேலும் இருந்தது. நாகம் அணிவித்த இந்த மாலையானது பக்தர்கள் தரிசனம் செய்யும் வண்ணம் ஒரு கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க ராகுவானவர் ஒரு சிவராத்திரியில் நான்கு காலங்களில் முதல் காலத்தில் வில்வ வனமான குடந்தை கீழ்க்கோட்டத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரரையும் இரண்டாம் காலத்தில் சண்பக வனமான திரு நாகேஸ்வரத்தில் ஸ்ரீ நாகநாதரையும் மூன்றாம் காலத்தில் வன்னி வனமான திருப்பாம்புரத்திலும் நான்காம் காலத்தில் புன்னை வனமான நாகை காரோணத்திலும் வழிபட்டு மறு நாள் உஷத் காலத்தில் திருநாகேஸ்வரம் அடைந்து சாபவிமோசனம் அடைந்தார் என்பது ஐதீகம். ராகு பகவான் தன்னை இந்தத் திருத்தலத்திலேயே இருக்கச் செய்ய வேண்டுமென்று ஸ்ரீ நாகநாதரை வேண்ட, அதற்கு அவர் அருளி, ‘இங்கு உனது விஷம் யாரையும் தீண்டக் கூடாது’ என்று சொல்ல அப்படியே செய்வதாக ராகு வாக்களித்தார். ஆகவே இந்தத் தலத்தில் யாரையும் நாகம் தீண்டுவதில்லை.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தத் திருக்கோவில் நான்கு கோபுரங்களும் மூன்று பிரகாரங்களும், மட விளாகமும், தேரோடும் நான்கு வீதிகளும் கொண்டுள்ளது. கோயில் கிழக்கு மேற்காக 800 அடி நீளமும் தெற்கு வடக்காக 680 அடி நீளமும் கொண்டுள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் எதிரே விநாயகர், நந்தி தேவர் உள்ளனர். இடப்பக்கம் சூரிய புஷ்கரணியும் வலப்பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் புஷ்கரணி அருகே விநாயகர் சன்னிதியும் உள்ளன. அலங்கார மண்டபத்தில் நவக்கிரக சன்னிதியும், மூலவர் கருவறையை அடுத்துள்ள முதல் பிரகாரத்தின் மேல் புறம் விநாயகர், சந்திர சேகரர், முருகன், பஞ்ச லிங்கம், லக்ஷ்மி, பள்ளியறை முதலிய சன்னிதிகளும் உள்ளன. வடபுறம் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சன்னிதியும், நடராஜர் சன்னிதியும் உள்ளன. சேக்கிழார் பெருமான் இங்கு தங்கி சிவனடி பெற்றுள்ளார். அவரது திருவுருவமும், அவரது தாயார் திருவுருவமும் அவரது சகோதரர் பாலறாவாயர் திருவுருவமும் இங்கு உள்ளன. சேக்கிழார் சன்னதிக்கு வலப்பக்கம் அமைந்துள்ள அதிகார நந்தி விக்ரஹம் காண வேண்டிய அரிய விக்ரஹமாகும். இந்தக் கோவில் சோமஸ்கந்தர் அமைப்பைக் கொண்டது.
இந்தத் தலத்தில் அமைந்துள்ள கிரி குஜாம்பிகை சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அம்மன் தவக் கோலத்தில் காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். இரு பக்கங்களிலும் கலை மகளும் திருமகளும் காட்சி அளிக்கின்றனர். தேவி சாமரத்துடன் கூடிய லக்ஷ்மியாலும் சரஸ்வதியாலும் இடப்புறத்திலும் வலப்புறத்திலும் பணிவிடை செய்யப்படுகிறாள். இந்தத் தலத்திற்கு உரிய ஸ்தல விருக்ஷம் செண்பக மரம். இங்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், யம தீர்த்தம், பிரம தீர்த்தம், அக்கினி தீர்த்தம், துர்க்கா தீர்த்தம், கௌதம தீர்த்தம், பராசர தீர்த்தம், இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கண்வ தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம் ஆகிய 12 தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தலத்தில் வந்து வழிபட்டுள்ள திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும், சுந்தரர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நாகநாதரும் கிரி குஜாம்பிகையும், ராகு பகவானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நாவுக்கரசரின் நல் வாக்கு இது :
வட்ட மா மதில் மூன்றுடன் வல் அரண்
சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் போல் திரு நாகேச்சரவரே!

tag- ஆலயம் அறிவோம், திருநாகேச்சரம்