மாயை என்றால் என்ன? காண்பிக்க முடியுமா? (Post No.9794)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9794

Date uploaded in London – 30 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாயை என்றால் என்ன? காண்பிக்க முடியுமா?

ச.நாகராஜன்

ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்றார் ஆதி சங்கரர். இது பற்றிய ஒரு சுலோகமும் உண்டு.

ஸ்லோக அர்த்தேன ப்ரவக்ஷயாமி யத் உக்தம் க்ரந்த கோடிபி: |

ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நபர: ||

கோடி கிரந்தங்கள் சொல்வதை அரை சுலோகத்தில் சொல்கிறேன். ப்ரஹ்மம் சத்யம். ஜகம் பொய். ஜீவனே ப்ரஹ்மம். அதுவன்றி வேறல்ல.

ஆதி சங்கரரின் இந்த சுலோகத்தின் பொருளை ஜீரணிப்பது அவ்வளவு சுலபம் இல்ல. உலகம் பொய்யா? இதோ நான் காண்கிறேனே இந்த வீடு, இந்த மனிதர்கள், பறவைகள், மரங்கள் எல்லாம் பொய்யா?

ஏன், பாரதியாரே ஒரு பாடல் பாடி விட்டார் இப்படி:-

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?


காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

இப்படிப்பட்ட கவி வாக்கை விட வேறு எப்படி நமது உணர்வுகளைக் கூற முடியும்? காட்சிப் பிழையோ? சொப்பனமா? தோற்ற மயக்கமா? காண்பது தான் சத்தியம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.

அப்படியானால் ஆதி சங்கரர் வாக்கு பொய்யா? ஒரு பெரிய அவதாரம் எதைச் சொன்னாலும் அந்த வார்த்தைகளில் பொருள் போய் ஒட்டிக் கொள்ளுமாமே! இதை சாஸ்திரம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.

இதென்னடா, பெரிய சிக்கலாக இருக்கிறது. இது பொய்யா, அது பொய்யா, இல்லை இல்லை, இது மெய்யா, அல்லது அது மெய்யா?

இதே சந்தேகம் விவேகானந்தரின் அத்யந்த பக்தரான மன்மத் நாத் கங்கூலிக்கு ஒரு முறை வந்து விட்டது.

எல்லாம் மாயை தானா? என்று அவர் விவேகானந்தரைக் கேட்டார். அத்வைத சிங்கமான ஸ்வாமி விவேகானந்தர் உடனே ஆமாம், ஆமாம் அதில் என்ன சந்தேகம் என்று பதில் கூறினார்.

இல்லை, இதோ பார்க்கிறேனே, இவற்றை எல்லாம் எப்படி மாயை என்று கூற முடியும், விளங்கிக்கொள்ளவே முடியவில்லையே என்றார் சீடர்.

“உனக்கு என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?”

“ஆமாம், மாயை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.”

“அதை விட வேறு எதையாவது கேளேன்”

“ஊஹூம், வேறு எதுவும் தேவை இல்லை. மாயை பற்றித் தான் அறிய வேண்டும்”

‘அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஆமாம், ஆமாம், தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

உடனே விவேகானந்தர் அவரை உற்றுப் பார்த்தார்.

“இதோ, பார், என்னைப் பார், நன்றாகப் பார்” என்றார் ஸ்வாமிஜி.

சீடர் அவரை உற்றுப் பார்த்தார். மாயைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார்.

திடீரென்று எதிரில் இருந்த அனைத்தும் உருகிப் பொடிப் பொடியாக ஆரம்பித்தது. துகள் துகளாக.. இன்னும் சிறிய துகளாக, அதிர்வுகள், ஆனந்த நடனங்கள்.

வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.

ஒன்றுமே தெரியவில்லை.

மன்மத நாதரால் தாங்க முடியவில்லை இந்தக் காட்சியை.

சில கணங்களில் அவரை விடுவித்தார் ஸ்வாமிஜி.

தன் இயல்பான நிலைக்குத் திரும்பிய சீடர் விக்கித்துத் திகைத்திருந்தார்.

பேச முடியவில்லை. ஒன்றும் புரியவில்லை.

“இப்போது தெரிகிறதா, மாயை என்றால் என்ன என்று உனக்கு?”

தலையை ஆட்டினார் அவர். மன்மத் நாத் கங்கூலி தனது இந்த அனுபவத்தை அப்படியே  எழுதி வைத்துள்ளார்.

அவரது அனுபவங்கள் வேதாந்த கேஸரி பத்திரிகையில் 1960ஆம் ஆண்டு

ஜனவரி மற்றும் ஏப்ரல் இதழ்களில் வெளியாகியுள்ளன.

உலகம் மாயை என்பதை நல்ல விசாரத்தின் மூலம் மட்டுமே தான் அறிந்து  கொள்ள முடியும். நான் யார், உலகம் என்ன? இப்படி நித்யா நித்ய விவேக விசாரம் செய்தால் நமது நிலை உயரும்.

அப்போது ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்ற அபூர்வமான பெறுதற்கு அரிய ஒரு நிலை பற்றி உணர முடியும்.

விவேகானந்தர் போன்ற மகான்களால் மட்டுமே இப்படி விளக்க முடியும். அதுவும் அந்த சீடர் அதிர்ஷ்டசாலியாக இருந்ததால் அவருக்க்கு இப்படி ஒரு அதிசய அனுபவம் கிடைத்தது!

சாஸ்திரமும் பொய்யில்லை; சங்கரர் வாக்கும் பொய்யில்லை.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

****

Index

ஆதி சங்கரர் ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா

பாரதியார் பாடல் – நிற்பதுவே, நடப்பதுவே

மன்மத் நாத் கங்கூலி, விவேகானந்தரின் சீடர், மாயை பற்றி கேள்வி

ஸ்வாமி விவேகானந்தர் மாயை பற்றி விளக்கம்

விவேக விசாரம்

tags- – விவேகானந்தர், மாயை, 

Leave a comment

Leave a comment