

Post No. 9818
Date uploaded in London –5 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரிட்டனில் பிறந்த புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியர்களில் ஒருவர் சாமர்செட் மாம் (WILLIAM SOMERSET MAUGHAM). அவர் எழுதிய சிறந்த நாவல்களில் ஒன்றில் ரமண மகரிஷியை குருவாக வரும் ஒரு கதாபாத்திரமாக படைத்தார். அந்தப் புத்தகத்துக்கு கத்தி முனை (THE RAZOR’S EDGE )என்று பெயர் வைத்தார். அது கடோபநிஷத்தில் வரும் வாசகம் ஆகும்

சாமர்செட் மாம் ஒரு சிறுகதை எழுத்தாளர்; புதினங்கள் படைத்தவர். நாடகங்களை இயற்றியவர்.
பிறந்த தேதி – ஜனவரி 25, 1874
இறந்த தேதி – டிசம்பர் 16, 1965
வாழ்ந்த ஆண்டுகள் – 91
வில்லியம் சாமர்செட் மாம் நகைச்சுவை, நக்கல், கிண்டல், கேலியுடன் எழுதும் பாணி உடையவர். சில கதைகளில் உண்மைக் கதைகளையே நாவலாகப் படைத்திருக்கிறார்.எளிமையான நடை; ஆயினும் கதை சொல்லுவதில் குறை இல்லாத போக்கு.
பத்து வயதில் தாய் தந்தையை இழந்ததால் உறவினர்கள் அவரை எடுத்து வளர்த்தனர். டாக்டர் படிப்பு படித்து பட்டம்பெற்ற போதும் அதைத் தொழி லாக ஏற்காமல் முழுவேக எழுத்தாளர் ஆனார். 23 வயதில் அவருடைய நாவல் அச்சிடப்பட்டது. அதில் குழந்தை பெறும் பெண்மணியின் பிரசவ அறையில் இருந்த அனுபவம் வருகிறது .
கதைகளை விட நாடகங்கள்தான் இவருக்கு அதிகம் புகழ் ஈட்டித் தந்தன.அவருக்கு 34 வயதானபோதே சாமர்செட் மாமின் 4 நாடகங்கள் லண்டன் தியேட்டர்களில் வெற்றி நடைபோட்டன.
முதல் உலகப் போர் நடந்த ஆண்டுகளில் அரசின் உளவாளியாகப் பணிபுரிந்தார்.. பின்னர் ஒரு நண்பருடன் சேர்ந்து கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் தீவுகள், மெக்சிகோ ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்த்தார். இறுதிக் காலத்தை பிரான்ஸின் தென் பகுதியில் கழித்தார்.
சுயவாழ்வில் ஒருவர் பின் ஒருவராகப் பலரைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்தார் .
சாமர்செட் மாம் எழுதிய ‘ரேஸர் எட்ஜ்’ THE RAZOR’S EDGE என்ற நாவலில் கணேசா என்ற பெயரில் ரமண மகரிஷியை அறிமுகம் செய்கிறார். இந்த நாவல் வெளியாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் திருவண்ணாமலைக்குச் சென்று ஸ்ரீ ரமண மகரிஷியைச் சந்தித்தார். கத்தி முனை அல்லது வாள் முனை என்பது முக்கிய உபநிஷத் நூலாகக் கருதப்படும் கடோபநிஷத்தில் வரும் வாசகம் ஆகும். அந்த வாசகத்தையே புத்தகத்தின் பொன்மொழியாக அவர் கொடுத்துள்ளார் . ஒரு வாள் முனை கடப்பதற்கு அரிதாக எவ்வளவு கூரானதாக இருக்கிறதோ அவ்வளவுக்குக் கடினமானது முக்தி பெரும் வழியும் என்ற வாசகம் கடோபநிஷதத்தில் வருகிறது. இந்தக் கதை இகலோக வாழ்வை வெறுத்த ஒரு அமெரிக்க போர் விமானியின் கதை ஆகும். அவர் வாழ்க்கையின் மெய்ப் பொருளை அறிவதற்காக இந்தியாவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டதே கதையின் கருப்பொருள் ஆகும்.
கதையின் போக்கில் முனிவர்கள் சந்திப்பு ,அத்வைத சித்தாந்தம், சமாதி ஆகியனவும் இடம்பெறுகின்றன .
இவர் எழுதிய ஏனைய நூல்களின் கருப்பொருள்களைக் காண்போம்.
அமெரிக்காவில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் பற்றி OUR BETTERS ‘அவர் பெட்டர்ஸ்’ நாவலில் வருகிறது .
வேறு ஒரு பெண்ணுடன் தொடர்புவைத்துக்கொண்ட கணவனைப் பழிவாங்கும் மனைவியை ‘CONSTANT WIFE’ கான்ஸ்டன்ட் வைஃ ப் கதையில் காணலாம்.
OF HUMAN BONDAGE ‘ஆப் ஹ்யூமன் பாண்டேஜ்’ என்ற கதை மிகச் சிறந்த கதை. அதில் மாம் தன்னுடைய சுய சரிதத்தைக் கதையாக சித்தரித்துள்ளார்.
பிரபல ஓவியர் பால் கோகெய்ன் PAUL GAUGUIN வாழ்க்கையை அடிப்படையாக வைத்து மாம் எழுதிய கதை மூன் அன்ட் சிக்ஸ் பென்ஸ் MOON AND SIX PENCE என்பதாகும்.
தாமஸ் ஹார்டி என்ற பிரபல நாவல் ஆசிரியரின் சொந்த வாழ்வை அடிப்படையாக அமைத்து மாம் எழுதிய கதை CAKES AND ALE கேக்ஸ் அண்ட் ஏல் என்னும் கதை ஆகும். இதில் ஒரு பிரபல நாவல் ஆசிரியரின் மனைவி எப்படி இருப்பாள் என்பதை மாம் படம்பிடித்துக் காட்டுகிறார்.


Publications
1897 – LIZA OF LAMBETH
1915- OF HUMAN BONDAGE
1917 – OUR BETTERS
1919 – THE MOON AND SIX PENCE
1921 – THE CIRCLE
1921 – THE TREMBLING OF A LEAF (INCLUDING RAIN)
1926 – THE CONSTANT WIFE
1930- CAKES AND ALE
1944 – THE RAZOR’S EDGE.
தி ரேஸர்ஸ் எட்ஜ் முதலிய பல கதைகள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன.
-SUBHAM-





TAGS- ரமண மகரிஷி , நாவல் , சாமர்செட் மாம்,