
Post No. 9827
Date uploaded in London – 8 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொண்டை மண்டல சதகம் பாடல் 61
தரித்திரமே, இன்று மட்டும் என்னோடு சற்றே இரு, நாளை நீ போகப் போகிறாய் அல்லவா?
ச.நாகராஜன்
திருநின்றவூரில் காளத்தி நாத முதலியார் என்பவர் வாழ்ந்து வந்தார். தமிழின் பால் நல்ல பற்றுக் கொண்டவர். பரோபகாரி. குறிப்பாக புலவர்கள் ஏழ்மையுடன் இருப்பதைக் காண அவர் சகிக்க மாட்டார். அவருடைய புகழையும் மாண்பையும் அறிந்த ஒரு புலவர் தன் தரித்திரத்தைக் கண்டு சகிக்க மாட்டாமல் அவரிடம் வர முடிவு செய்தார். மறு நாள் அவரைச் சந்தித்தால் தன்னுடன் கூட இருக்கும் தரித்திரம் போய் விடுமல்லவா? ஆகவே அதற்கு விடைக் கொடுப்பது போல, “ஓ! தரித்திரமே! என்னோடு நீண்ட நாள் இருந்தாய். நாளை முதல் நீ இருக்க முடியாது. ஆகவே இன்று ஒரு நாள் சற்றே இரு” என்ற பொருள் அமையும் படி ஒரு பாடலைப் பாடினார். மறு நாள் திருநின்றவூர் சென்றார். அங்கு காளத்தி நாத முதலியாரைச் சந்தித்தார். அவரது தரித்திரம் தொலைந்தது. அப்படிப்பட்ட கொடைவள்ளல்கள், தமிழின் பால் அடங்காப் பற்று கொண்டவர்கள் வாழும் மண்டலம் தொண்டை மண்டலம் அல்லவா என்று பெருமிதப்படுகிறது தொண்டைமண்டலச் சதகத்தின் 61ஆம் பாடல்.
பாடல் இதோ:-
நீளத்திரிந்தென்று வெண்பாவினாலன்று நின்றையர்கோன்
காளத்திவாணனனிப் பாடிய பாடல் கருதுமண்ட
கோளத்தினுஞ்சென்று பாதாளம் புக்குக் குலவுசக்ர
வாளத்தினுஞ் சென்றதாலெளிதோ தொண்டை மண்டலமே
இதன் பொருள்:-
திருநின்றையூர்க் காளத்திவாண முதலியார் புலவோரை வறுமை என்னும் கொடுமையான பகை வருத்தாமல் ஆதரவு செய்பவர் ஆதலின், அப்புகழ் தோன்ற ஒரு புலவர், “என்னுடன் நட்பு கொண்ட வறுமையே! நீ என்னோடு நெடுங்காலம் திரிந்து வருந்தினாய் அல்லவா, நாளை நான் திருநின்றையூர் சென்றால் அப்புறம் நீ என்னுடன் இருக்க முடியாதல்லவா? அதன் பின்னர் நீ எங்கேயோ, நான் எங்கேயோ! அறிய மாட்டேன். ஆகவே, இன்றைக்கு மாத்திரமாவது என்னுடன் இருந்து விட்டுப் போ” என்ற பொருளை உள்ளடக்கி ஒரு வெண்பாவைப் பாடினார். அந்தப் பாடல் அண்டமுகட்டினும் சென்று பாதாளத்திலும் புகுந்து அமையாமல் சக்ரவாள மலையையும் சூழ்ந்து கொண்டது. அத்தகைய பிரபுவைக் கொண்டது தொண்டை மண்டலமே அல்லவோ!
புலவர் பாடிய “ நீளந் திரிந்துழன்றாய்” என்று ஆரம்பிக்கும் வெண்பா
இதோ:
நீளந் திரிந்துழன்றாய் நீங்கா நிழற்போல
நாளைக் கிருப்பாயோ நல்குரவே – காளத்தி
நின்றைக்கே சென்றக்கா னீயெங்கே நானெங்கே
யின்றைக்கே சற்றே யிரு.
நெடு நாள் திரிந்து உழன்றாய் என்னுடன் நீங்காத நிழல் போல! நாளைக்கு இருப்பாயோ, மாட்டாயோ, வறுமையே! காளத்தி நாதனைப் பார்க்கச் செல்கிறேன். ஆகவே நாளை முதல் நீ எங்கேயோ, நான் எங்கேயோ, இன்றைக்குச் சற்றே இரு- இது தான் பாடலின் பொருள்.
ஒரு பாம்பானது பகலெல்லாம் புற்றுக்குள் மறைந்திருக்கும். இரவில் அது இரை தேட வெளியில் வரும். அப்போது புற்றுக்குள் மறைந்திருந்து அது தனது மாணிக்கத்தை வாயு பந்தனம் செய்து துவாரத்தின் வழியே வெளியே கொண்டு வந்து ஒளியை உருவாக்கும். அதனால் இரையைத் தேடி உண்டு பின்னர் பழையபடி இருளைக் காணாமல் தேடி அலைந்து பூர்வ ஞாபகம் வந்து முன் போல சுவாசத்தின் வழியே அந்த மாணிக்கத்தை உள்ளிறக்கிக் கொள்ளும். இருளாகிய தனது இருப்பிடத்திற்குச் செல்லும். அதே போல தற்போதம் உடைய ஒருவன் அந்த போத அறிவு உள்ள வரை சுகம் சித்திக்க மாட்டாது.
இந்த உவமானங்களை ஒழிவிலொடுக்கம் என்னும் சிவஞானசித்தியார் சுபக்ஷம், பரபக்ஷம் ஆகியவற்றில் காணலாம்.
இந்தக் கருத்தை அமைத்து புலவர் பாடிய வெண்பா இருப்பது போல எண்ணி மகிழலாம்.
தரித்திரம் தொலைய வழிகளை நமது சாஸ்திரங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன.
சனி அஷ்டம ஸ்தானத்திற்குப் புகும் போது பல விஷயங்கள் நேரும். அப்போது நளன், தர்மர், சீதை, புரூரவன், கார்க்கோடகன்,தமயந்தி, ருதுபர்ணன் ஆகியோரை உதய காலத்தில் தியானித்தால் பாவம் தொலையும். கீர்த்தி கூடும். ஆயுள் நீட்டிக்கப்படும். இவர்களை தியானித்தால் சனீஸ்வரன் துன்பம் செய்யக் கூடாது என்பது வரமாகும். அதே போல திருநின்றவூர் காளத்திவாண முதலியாரை ஒரு போது நினைத்தாலேயே வறுமை ஒழியும். அந்த ஊரில் லக்ஷ்மி வாசமாயிருப்பதால் திரு, நின்ற, ஊர் என்ற பெயரைப் பெற்றதல்லவோ!
துடைப்பத் தூசி மேலே படக் கூடாது.
பெண்களின் பாத தூளி மேலே படக் கூடாது.
கழுதை தும்பு, ஆட்டின் தும்பு, மந்தைகள் முன் வரும் தும்பு மேலே படக் கூடாது.
தூணின் நிழல், கட்டிலின் நிழல், இரவில் அரச மரத்தின் நிழல், பகலில் விளா மரத்து நிழல், பனை மரத்து நிழல் ஆகியவற்றில் ஒரு போதும் செல்லக் கூடாது.
உதய காலத்திலும் , சூரியாஸ்தமன சமயத்திலும் தூங்கக் கூடாது.
பிறர் முகந்த சந்தனத்தையும் புஷ்பத்தையும் தான் ஏற்கக் கூடாது.
இப்படி முற்காலத்தில் பல விதிகளை தமிழ் மக்கள் பின்பற்றி வந்ததை தொண்டைமண்டல சதகத்தின் இந்தப் பாடலின் விரிவுரையில் காண முடிகிறது.
***
INDEX
தொண்டைமண்டல சதகம் பாடல் 61
ஏழ்மையை விரட்டும் பாடலும், புலவர் பாடிய வெண்பாவும்
திரு நின்ற ஊர், லக்ஷ்மி வாசம்
காளத்தி நாத முதலியார் என்னும் வள்ளல்
தமிழ்ப் பற்று
தரித்திரம் போக, விலக்க வேண்டிய சில விதிகள்
மாணிக்கத்தைக் கொண்ட நாகம் இருளைத் தேடல்
சிவஞான சித்தியார் சுபக்க உவமை

****
tags- காளத்தி நாத முதலியார், திரு நின்ற ஊர்