
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9842
Date uploaded in London – – 12 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 11-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாந் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து
கபில தேவ நாயனார் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பாரதத்தின் வணிகச் சிறப்பு நகரான மும்பையிலிருந்து அருள் பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலயமாகும்.
மும்பை நகரில் மிகுந்த போக்குவரத்தும் ஜன நடமாட்டமும் உள்ள பிரபா தேவி பகுதியில் காகாசாஹிப் காட்கில் ரோடு, எஸ்.கே, போலே ரோட் சந்திப்பில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் தோன்றியது பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு. டியூபாய் படீல் என்ற பணக்காரப் பெண்மணி மாதுங்காவில் வசித்து வந்தார். ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்தவர் அவர். அவருக்குக் குழந்தைப் பேறு இல்லை. அவர் விநாயக பக்தர். தனக்கு குழந்தைப் பேறு வேண்டி விநாயகருக்கு இந்த ஆலயத்தை அமைத்தார். ஆனால் அவருக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் போயிற்று. என்றாலும் இங்கு வந்து வழிபடும் பெண்மணிகளுக்குக் குழந்தைச் செல்வத்தை அருள வேண்டுமென அவர் மனமுருகப் பிரார்த்தித்தார். அவரது பிரார்த்தனை பலிக்கும் விதமாக இங்கு வந்து வழிபடும் அனைவருக்கும் தடைகள் நீங்கின. வளங்கள் ஓங்கின. குழந்தைச் செல்வம் உள்ளிட்ட அனைத்து நலன்களும் வரவே சித்தி விநாயகர், வரம் தரும் வர சித்தி விநாயகராகப் பிரசித்தி பெற்றார். பக்தர்களும்,அரசியல் வாதிகளும், திரைப்பட நடிக, நடிகையரும், கலைஞர்களும், சாமான்யர்களும் காலை ஐந்தரை மணி முதல் இரவு வரை கூட்டம் கூட்டமாக இங்கு வந்து விநாயகரை வழிபட்டு அவர் அருள் கிடைக்கப் பெற்று ஆனந்தத்தில் திளைக்கின்றனர். இவரை நவசாலா பவனர கணபதி என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கின்றனர். தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் உள்ள இந்தக் கோவில் ஐந்து அடுக்கு கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேலே சுமார் 12 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட கலசமும் உள்ளது.

விநாயகர் இரண்டரை அடி உயரமும் இரண்டடி அகலமும் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விநாயகராக அமைகிறார். சாதாரணமாக விநாயகரின் தும்பிக்கை இடப்புறமே வளைந்து இருக்கும். இந்த விநாயகருக்கு உள்ள தனிச் சிறப்பு இவரது துதிக்கை வலப்புறமாகத் திரும்பி இருப்பது தான். இவருக்கு சிவபிரான் போல நெற்றியிலும் ஒரு கண் உண்டு. நான்கு கரங்களை இவர் கொண்டிருப்பதால் சதுர் புஜ விநாயகர் என்று அனைவரும் இவரை அழைக்கின்றனர். மேற்புற வலது கையில் தாமரை மலரையும் இடது கையில் கோடாரியையும் ஏந்தி இருக்கிறார். கீழே உள்ள கரங்களில் வலது கரத்தில் ஜபமாலையையும் இடது கரத்தில் மோதகத்தையும் கொண்டுள்ளார். பூணூலுக்குப் பதிலாக ஒரு நாகம் வலது தோளில் ஆரம்பித்து வயிற்றின் இடது பக்கம் வரை செல்கிறது.
விநாயகரின் இன்னொரு முக்கியமான சிறப்பு அம்சம் இவரது இரு பக்கங்களிலும் ஸித்தி, புத்தி ஆகிய இருவரும் இருப்பது தான். புத்தியை ரித்தி என்று வடக்கே சொல்வது பழக்கம் என்பதால் இவரை ஸித்தி, ரித்தி விநாயகர் என்று அனைவரும் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய நவீன யுகத்திற்கேற்ப அமைக்கப்பட்டுள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் நைவேத்தியம் ஒரு பிரத்யேகமான லிஃப்ட் மூலம் கர்பகிரஹத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகருக்கு படைக்கப்படுகிறது.
பழைய காலத்தில் விநாயகரின் அருகே ஒரு பெரிய ஏரி இருந்தது. இதர கட்டிடங்களும் இருந்தன. ஆனால் காலப் போக்கில் ஏரி இல்லை; கட்டிடங்கள் மாறி விட்டன. என்றாலும் விநாயகர் தனது இடத்தில் அப்படியே இருந்து அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்; அவ்வப்பொழுது கோவில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
1952ஆம் ஆண்டில் மும்பையில் எலிஃபின்ஸ்டன் சாலை அருகில் உள்ள சயானி சாலையை விரிவு படுத்தினர். அப்போது சாலையைத் தோண்டிய போது ஒரு அனுமார் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த அனுமார் இந்த சித்தி விநாயகர் ஆலையில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆக இங்கு அநுமாருக்கும் தனி சந்நிதி ஒன்று உண்டு. மஹராஷ்டிரத்திற்கே உரித்தான முறையில் இங்கு விநாயக சதுர்த்தி உள்ளிட்ட பல விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. மஹராஷ்டிரத்தை ஆண்ட பேஷ்வாக்கள் விநாயக சதுர்த்தியைப் பெரும் விழாவாக ஆக்கிக் கொண்டாடினர். பால கங்காதர திலகர் நாட்டு மக்களை ஒன்றிணைக்க இந்த பண்டிகையை மக்கள் பண்டிகையாக மாற்றினார். வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரம் பெற மக்கள் சக்தியை ஒருங்கிணைத்தார்.
1891இல் இப்படி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட விழா இன்று தேசிய அளவில் தேசீய விழாவாக மாறி விட்டது. விநாயகர் பாரத தேசத்தைக் காக்கும் தெய்வமாக, தடைகள் அகற்றும் தெய்வமாக இமயம் முதல் குமரி வரை கொண்டாடப்படுகிறார். அதற்கு மும்பை சித்தி விநாயகர் கோவிலில் கூடும் திரளான பக்தர்களே சாட்சி!ஏராளமான அளவில் பக்தர் கூட்டம் திரள்வதால் அனைவரும் கியூவில் நின்று விநாயகரை தரிசிக்கின்றனர். பாராட்டும் விதமான கட்டுப்பாட்டை அனைவரும் அனுஷ்டிக்கின்றனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மும்பை சித்திவிநாயகர், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
அருள் பிரகாச வள்ளலார் பெருமானின் அருள் வாக்கு இது :
முன்னவனே யானை முகத்தவனே முத்தி நலம்
சொன்னவனே தூய் மெய்ச் சுகத்தவனே – என்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின் தாள் சரண்!

நன்றி வணக்கம்!
***
Tags- மும்பை சித்தி விநாயகர் ஆலயம்