
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9852
Date uploaded in London – 15 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருவாசகம் என்னும் தேன்! -2
ஞானமயம் ஆனி மக நாளன்று (13-7-2021) மாணிக்கவாசகரின் குருபூஜை நாளையொட்டி சிவஞான சிந்தனை மணிவாசகர் குருபூஜை தினத்தை உலகளாவிய விதத்தில் சிறப்பாக இணையதள வழியே கொண்டாடியது. இந்த விழாவில் திருவாசகம் என்னும் தேன் பற்றி ஆற்றிய உரை:- Second Part


திருவாசகத்தில் 51 அதிகாரங்களில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்தால் மகிழ்ந்த சிவபிரான் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று கூற திருக்கோவையார் 400 பாடல்களாக மலர்ந்தது. ஆக இந்தப் பாடல்களில் 51 அதிகாரத்தில் உள்ள பதிகங்களில் 21798 சொற்களும் திருக்கோவையாரில் 11805 சொற்களும் ஆக மொத்தம் 33603 சொற்கள் நம்மிடம் இன்று உள்ளன. சிவனே தமிழ் என்பதால் அவனே இதை அருளினான். ஆக இந்த 33603 சொற்களில் உள்ள சொல் ஒவ்வொன்றும் உயிர் காக்கும் அமிர்தத் துளியாகும். ஒவ்வொரு சொல்லும் தேனென இனிக்கிறது.
யஜுர் வேதத்தில் நடு நாயகமாக உள்ளது ஸ்ரீ ருத்ரம். இந்த ஸ்ரீ ருத்ரத்தில் நடு நாயகமாக வகிப்பது நமசிவாய என்னும் மந்திரம். இதைத் தொடர்ந்து உச்சரிப்பவர் சிவனாகவே ஆகிறார். ஸ்ரீ ருத்ரம் ஓதுவது என்பது அனைவராலும் முடியாது. ஆனால் திருவாசகத்தை யார் வேண்டுமானாலும் ஓதலாம். நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று உளமுருகிப் பாடும் போது நெஞ்சில் சிவபிரான் நம்மை விட்டு நீங்காத
நிலை தானே வந்து அடையுமல்லவா!
புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்ன
டிகள் கண்டு இன்று வீடு உற்றேன் என்கிறார் மாணிக்கவாசகர்.
இன்று அறிவியல் ஒத்துக் கொள்ளும் மறுபிறவித் தத்துவம் இந்து மதத்தின் தனிப் பெரும் ரகசியத் தத்துவம் ஆகும். REINCARNATION எனப்படும் மறுபிறவித் தத்துவத்தை ஐயான் ஸ்டீவன்ஸன் நூலில் 20 cases suggestive of Reincarnatin என்பதில் காண்கிறோம். எட்கர் கேஸ் என்ற முற்பிறவி கூறும் திறன் படைத்த அறிஞர், 2000 பேருக்கு அவர்களுடையமுன் பிறப்பு விவரங்களைக் கூறி இருக்கிறார். அதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். அறிவியல் அறிஞர்கள் மறுபிறப்பு உண்டு என்பதை நிரூபித்து விட்டனர். ஆனால் மீண்டும் மீண்டும் பிறக்கிறோமே அந்தப் பிறப்பை அறுக்கும் வழியை மணிவாசகர் ‘மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்’ என்பதால் நமக்குச் சொல்லியருளி நல் வழியைக் காண்பிக்கிறார்.
திருவைந்தெழுத்து – அதாவது நமசிவா
ய – ஓரெழுத்தொரு மொழி ஐந்து சேர்ந்த ஒரு தொடர் மொழி ஆகும்.
இதில் ந என்பது நடப்பு ம என்பது மறைப்பு சி என்பது சிறப்பு வ என்பது வனப்பு. யா என்பது யாப்பு. இதில் யா குறுகி ய என்று ஆனது. வ நீண்டு வா என்று ஆனது.
சிறப்பு வனப்பு ஆகிய இரண்டும் சேர்ந்து சிவ என்று ஆனது.
அருட்பிரகாச வள்ளலார் சிவாய நம என்பதை விளக்கி அருளும் போது சி என்பது பதி என்றும் வா சத்தி என்றும் ய என்பது ஜீவன் என்றும் ந என்பது திரோதை என்றும் ம என்பது மாயை என்றும் குறிப்பிடுகிறார். நமசிவாய என்ற பஞ்சாக்ஷரத்தால் ஏம சித்தியும் தேக சித்தியும் உண்டாகும். ‘சிவாய நம’ எனச் செப்ப, செம்பு பொன்னாயிடும் என்ற திருமூலர் வாக்கையும் ‘சிவாய நம் என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’ என்ற அவ்வையார் வாக்கையும் அவர் பிரமாணமாகச் சுட்டிக் காட்டுகிறார்.
சிவ நாமத்தின் மகிமையை முற்றிலுமாகச் சொல்லவே முடியாது. நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற சொற்களில் இவ்வளவு அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.

மனிதனைப் பாதிப்பவை ஐந்து மலங்கள் அதாவது பஞ்ச மலங்கள் ஆகும்.
ஆணவம் என்பது அறிவை மயக்கும். கன்மம் என்பது ஆன்மாவுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கும். மாயை என்பது தநுகரண புவன போகங்களைத் தோற்றுவிக்கும். மாயேயம் என்பது தநுகரண புவன போகங்களாய் வந்து பொருந்தும். திரோதாயி என்பது மலத்தின் வழி நின்று அறிவை மறைக்கும். ஆக இவையே பஞ்ச மலங்களாகும்.
இவையே பிறப்புக்குக் காரணம். இந்த பஞ்ச மலங்களை நீக்க வல்லது பஞ்சாக்ஷரமே. பஞ்ச மலங்களை நீக்க வல்லான் ஒருவனே. சிவனே அவன். ஆகவே,
‘பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெம்மான்’, ‘பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க’, மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி, என்று போற்றி பஞ்ச மலங்களை அறுத்து பிறப்பை அறுக்கும் மன்னவனை, தென்னவனை, தென்னாடு உடைய சிவனைப் போற்றுங்கள் என்கிறார் அவர். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று உருகிப் பாடுகிறார் அவர்..
திருவாசகம் படிப்பது என்பது அமிர்தத் துளிகளை அன்றாடம் பருகுவது போன்ற ஒரு அரும் செயலாகும்.
மணிவாசகருக்கும் இறைவனுக்கும் நடந்த யார் சதுரர் என்ற ஒரு போட்டி பற்றி அவரே விளக்குகிறார். இருவருக்கும் நடந்த போட்டியில் தானே வென்றதாகவும் அவர் உறுதி கூறி அதை நிலைப் படுத்துகிறார்.
சிவ பிரான் கேட்கிறார்: “ என்ன, நீயே வென்றாயா? உனக்கு நீயே நீதிபதியா? காரணத்தைச் சொல்லு, பார்ப்போம்?”
மாணிக்கவாசகர் தர்க்கரீதியாக, ஆணித்தரமாக தன் தீர்ப்பை வாசிக்கிறார் இப்படி:
தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னை
‘இது உண்மையா’ என்கிறார் மாணிக்கவாசகர். ‘ஆம் உண்மை தான்; நீ உளம் உருகி என்னைக் கேட்டாய், நான் என்னைத் தந்தேன்’ என்கிறார் சிவபிரான்.
சங்கரா யார் கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது ஒன்று என்பால்
காலமும் கணக்கும் நீத்த காரணன், கற்பனை கடந்த ஜோதி நீ என்னிடம் வந்து விட்டாய்; என்னிடம் இருந்து எதை நீ பெற்றாய்? ஒன்றே ஒன்றைச் சொல் பார்ப்போம்! யார் கொலோ சதுரர்?!
சிவன் புன்னகை மலர்ந்து தலை அசைக்கிறார், உனது நீதி சரிதான் என்று,
தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச் சங்கரா யார் கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே
கடைசி வரியில் நான் வெற்றி பெற்றாலும் உனக்கு என்ன கைம்மாறு என்னால் செய்ய முடியும்? ஜீவ சொரூபம் போகச் செய்து சிவ சொரூபமாக என்னை ஆக்கி விட்டாயே இதற்கு என்னால் பிரதியாக என்ன செய்ய முடியும் என்று உள்ளம் உருகி காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கக் கூறுகிறார்.
இதைப் படிக்கும் போது நமக்குப் புல்லரிக்கிறது. கண்ணீர் மல்குகிறது.
இப்படி ஒரு சுவை மிக்க அமிர்தப் பாடலை வேறெங்கும் பார்க்க முடியுமா? மூன்று இடங்களிலே அவர் சதுர என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இந்த இடத்தில் வரும் சதுரர் என்ற சொல்லை அவர் பயன்படுத்திய விதமும் இடமும் சொல்லும் விதமும் ஒப்புமை காண முடியா ஒரு அற்புதக் கவிச் செல்வமாகும்.

திருவண்டப் பகுதியின் முதல் நான்கு வரிகளைப் பார்ப்போம்:
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.
என்ன அற்புதமான ஒரு காட்சியை அழகான தமிழில் தருகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.
பல கோடி அண்டங்கள்! பால்வீதி மண்டலத்தைப் பற்றிப் பேசும் விஞ்ஞானிகள் அடடா, பல பல கோடி பால் வீதி மண்டலங்கள் உள்ளன. அவைகளைக் கொண்டிருப்பது போல இருப்பது ஒரு பிரபஞ்சம் மட்டும் அல்ல – ஒரு universe அல்ல நாங்கள் கண்டு அறிவது multiverse பல் பிரபஞ்சங்கள் என்கின்றனர். இந்த பிரபஞ்சங்களும் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்காக உள்ளன ஒரு மிலிமீட்டர் இடைவெளியில் உள்ளன என்கின்றனர்.
Nature, Scientific American, Live Science ஆகிய அறிவியல் இதழ்களில் இது பற்றிப் படிக்கும் போது வியப்பும் திகைப்பும் பிரமிப்பும் ஏற்படுகிறது. மல்டிவர்ஸ் பற்றி முதலில் கூறிய ஹ்யூ எவரெட் (Hugh Everett) என்ற விஞ்ஞானியை இன்று அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர்.
இவர்கள் இன்று சொல்வதை அன்றே நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்று சுருங்கச் சொல்லி விளக்கி விட்டார் அவர்.இன்று 13-7-2021 LiveScience இதழில் வெளிவந்துள்ள கட்டுரை சுவாரசியமான ஒன்று. மனிதனின் உடம்பில் உள்ள அணுக்களைக் கணக்கிட்ட விஞ்ஞானிகள் அவை மொத்தம் – 7 ஆக்டில்லியன் – 7 octillion, or 7×10^27 (7 followed by 27 zeros), –என்று கணக்கிட்டுள்ளனர். காலக்ஸிகள் மட்டும் நாம் கண்ணால் பார்க்கின்ற பிரபஞ்சத்தில் 10^12 உள்ளனவாம். (10^12 galaxies in the observable universe) சரி, பிரபஞ்சம் அணு மயம் என்றால் எத்தனை அணுக்கள் உள்ளன?
இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய, அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க, ஐயா போற்றி, அணுவே போற்றி என்று இப்படி எல்லாம் திருவண்டப்பகுதியிலும், போற்றித் திருவகவலிலும் கூறுகிறார் மாணிக்க வாசகர்! அதாவது சூரியக் கதிரில் பல துகள்களைப் பார்த்து நாம் ‘சே, இவை தூசி’ என்பது போல அகிலாண்டங்கள் கோடானு கோடியும் சிவபிரானுக்குத் தூசியாம் என்கிறார் இப்படி.
விஞ்ஞானிகள் இன்று தரும் கட்டுரையில் நாம் காண்கின்ற பிரபஞ்சத்தில் உள்ள அணுக்கள் எத்தனை என்றால் அவற்றின் எண்ணிக்கை இது தான் – ஒன்றுக்குப் பக்கத்தில் 82 சைபர்களைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று விடையைத் தருகின்றனர். ட்ரில்லியன், ஜில்லியன், ஆக்டில்லியன் என்று சொல்லிக் கொண்டே போக வேண்டியது தான். நாம் பார்க்கின்ற இடத்தில் மட்டுமே இவ்வளவு அணுக்கள் என்றால் கோடானு கோடி பிரபஞ்சங்களில் எத்தனை அணுக்கள்? அறிவியல் அறிஞர்களுக்குத் தலை சுற்றுகிறது. ஆனால் மாணிக்கவாசகருக்கு இறைவன் தரும் காட்சி அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சியாக அமைகிறது.

அளக்க முடியாதது; ஆனால் வளப்பெரும் காட்சி என்கிறார்.
திருவண்டப் பகுதி போல உலகில் இன்னொரு பாவைப் பார்க்க முடியுமா என்ன?
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். திருவாசகம் நம்மை பக்தி சிகரத்தின் உச்சியில் ஏற்றும். சிவஞான அறிவைப் பெருக்கும். ஆயிரக்கணக்கில் அருமையான ரகசியங்களையும், நாம் உய்த்துணர்வதற்கான வழிகளையும அருளும்.
மாணிக்கவாசகரின் பொன்னடி போற்றுவோம். அவர் பெருமை பேசுவோம். திருவாசகத் தேனை அள்ளி அள்ளிக் குடிப்போம். அதன் பயனையும் பெறுவோமாக.
தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.
அருள் வாதவூரர் சொல அம்பலவர் தாம் எழுதும்
திருவாசகத்தைத் தெளிந்தால் – கருவாம்
பவகதியும் நீங்கிப் பரமரருளாலே
சிவகதியும் உண்டாம் சிவம்
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
வாய்ப்பளித்த அனைவருக்கும், இந்த உரையைச் செவி மடுத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக! நன்றி, வணக்கம் .
xxxxx
tag–திருவாசகம் -2

