

Post No. 9869
Date uploaded in London – 19 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.
தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc
உரை எண் : 1 – 16-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது.
காடுகளைப் பாதுகாப்போம்!
ச.நாகராஜன்

காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இன்று உலகளாவிய விதத்தில் பரவி வருவது ஊக்கமூட்டும் ஒரு நல்ல செய்தி.
ஆனால் இதற்கான வித்து தமிழகத்தில் தான் இடப்பட்டது என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதம் அளிக்கும் செய்தியாகும்.
1842ஆம் ஆண்டில் மதராஸ் போர்ட் ஆஃப் ரெவின்யூ (The Madras Board of Revenue)வின் தலைவரான அலெக்ஸாண்டர் ஜிப்ஸன் (Alexander Gibson) காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி அதில் அறிவியல் முறைகளைப் புகுத்தினார். காடுகளின் நிர்வாகம் பற்றிய தமிழகத்தில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமே உலகில் காடுகளைப் பாதுகாக்கும் முதலாவது திட்டமாகும். இது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவி இன்று மாபெரும் இயக்கமாக மாறியுள்ளது.
காடுகளின் முக்கியத்துவத்தை மனித குலம் நன்கு அறிதல் அவசியம். நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்க காடுகள் அவசியம்.
நாம் பயன்படுத்தும் பல்வேறு மரத்திலானான பொருள்கள், காடுகள் நமக்குத் தரும் செல்வமே! உலகில் 80 விழுக்காடு பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரமாக, ஏராளமான விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் வாழ்வாதார இடமாக அமைவது காடுகளே! மண் அரிப்பைத் தடுப்பது, உலகம் வெப்பமயமாதலைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நற்பலன்கள் காடுகளினாலேயே ஏற்படுகின்றன.
ஆறு கோடி பூர்வ குடியினருக்கு உறைவிடத்தையும் வாழ்வையும் தருவதும் காடுகளே! இது தவிர சுமார் 30 கோடி மக்கள் காடு தரும் செல்வங்களை நம்பி வாழ்கின்றனர்!
காடுகளைத் தவறான முறையில் அழிக்க விழையும் போது மரங்கள் மட்டும் அழிவதில்லை சுற்றுப்புறச் சூழல் அமைப்பே அழிகிறது, அத்துடன் மனித குலம் அழிவுப் பாதையில் செல்கிறது!
கடலுக்கு அடுத்தபடியாக கார்பனை சேமித்து வைத்திருக்கும் பெரும் கிடங்காக அமைவது காடுகளே! தீங்கு பயக்கும் பசுமை இல்ல வளிமங்களே தட்பவெப்ப நிலை மாறுதலுக்குக் காரணமாக அமைகிறது. இதை உறிஞ்சுவது காடுகளே.
வெப்ப மண்டலக் காடுகளில் மட்டுமே இருபத்தைந்தாயிரம் கோடி டன்கள் என்ற அளவில் கார்பன் நிலத்திற்கு மேலும் கீழுமாகச் சேமிப்பாக உள்ளது.
பருகும் நீரையும் இதரப் பயன்பாடுகளுக்கான நீரையும் வழங்குவது காடுகளே. உணவு, பழங்கள், மூலிகைகள் என மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதும் காடுகளே. இயற்கைச் சீற்றமாக அமையும் வெள்ளப் பெருக்கு, மற்றும் அதிக மழை ஆகிய காலங்களில் அரணாக இருந்து தடுப்பதும் காடுகளே. நிலத்தில் வாழும் உலக உயிரினங்களில் பாதிக்கு உறைவிடமாக அமைவதும் காடுகளே!இப்படிப்பட்ட அரும் காடுகளைக் காப்பது நமது தலையாய கடமை அல்லவா!
–subham–

tags- காடுகளை, பாதுகாப்போம்,