
Post No. 9957
Date uploaded in London – 10 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமயம் சார்பில் சுந்தரர் குருபூஜை தினமான ஆடி சுவாதித் திருநாளையொட்டி சுந்தரர் சப்தாஹ – ஏழு நாள் விழாவில் இரண்டாம் நாள் விழாவில் 9-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை. இந்த உரையை facebook.com/gnnamayam தளத்தில் எந்த நேரமும் காணலாம்.
பல் பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர்! – 1
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் நமஸ்காரம். வணக்கம். இன்றைய தினம் ஆடி மாதம் சுவாதி நன்னாளையொட்டி சுந்தரர் சப்தாஹம் – ஏழு நாள் விழாவின் இரண்டாவது நாளாக இன்றைய நன்னாள் அமைகிறது. இந்த நாளில் உலகெங்கும் வாழும் சைவர்களை ஒருங்கிணைத்து சிவனருளைப் பெற்றுத் தரும் அரிய பணியில் ஈடுபட்டிருக்கும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும், ஞானாசிரியர்களுக்கும் எனது நமஸ்காரங்கள். சிவனடியார்களுக்கும் மெய்யன்பர்களுக்கும் தாய்க்குலத்தோருக்கும் என் நமஸ்காரம் வணக்கம். நாயன்மார்களில் பன்முகப் பரிமாணமும் சிறப்புக்களையும் கொண்ட காப்பியத் தலைவராகவும் ஒரு அபூர்வமான நாயனாராகவும் சுந்தர மூர்த்தி நாயனார் திகழ்கிறார்.
அது என்ன பன்முகப்பரிமாணம் என்றால் அதற்கு பதிலை விரித்துக் கொண்டே போகலாம்.
முதலாவதாக நாயன்மார்களின் சரிதத்தை உலகெலாம் என்று ஆரம்பித்து உலகெலாம் என்று முடித்து பெரியபுராணத்தை இயற்றி அருளிய சேக்கிழார் பெருமானுக்கு அதை இயற்ற வழி வகுத்துக் கொடுத்தவர் சுந்தரரே. அதுமட்டுமல்ல, 4286 பாடல்களைக் கொண்ட அந்தப் புராணத்தின் காப்பியத் தலைவராக சுந்தரரையே சேக்கிழார் பிரான் சித்தரிக்கிறார். அவர் திருத்தொண்டத்தொகையில் கூறிய 60 நாயன்மார்களோடு அவரையும் அவரது தாயார் இசைஞானியார் தந்தையார் சடையனார் ஆகிய மூவரையும் சேர்த்து 63 நாயன்மார் கொண்ட சரித நூலாக அதைப் படைத்தார். ஆக மற்ற நாயன்மார்களுக்கு இல்லாத தனி நாயகச் சிறப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

சம்பந்தரின் வரலாற்றை 1256 பாடல்களிலும் நாவுக்கரசர் வரலாற்றை 419 பாடல்களிலும் சித்தரித்த சேக்கிழார் பிரான் சுந்தரரின் வரலாற்றை ஐந்து இடங்களில் 879 பாடல்களில் சித்தரித்துள்ளார்.
திருஞானசம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் போலல்லாது சிவபிரானை சகா த்வமேவ, த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ என்று சகாவாக, ஏன் அனைத்துமாக அவர் சிவபிரானை வழிபட்டதும் அவரது வாழ்க்கையில் ஒரு தனிச் சிறப்பாகும்.
நடுநாட்டில் அமைந்துள்ள திருநாவலூரில் அவதரித்தவர் சுந்தரர். அவரது இயற்பெயர் ஆரூரன். ஆலாலசுந்தரர் என்ற பெயரைக் கொண்ட அவர் சிவலோகத்தில் பார்வதி தேவியாருக்கு சேடியராக இருந்த கமலினி, அனிந்திதை ஆகிய இருவரைப் பார்த்து ஆசை கொண்டார். அதனால் அவரை பூலோகம் சென்று அதன் பயனை அனுபவிக்குமாறு சிவபிரான் அருள்பாலிக்க அவர் பூவுலகில் பிறந்தார். தேவியாரின் சேடியர் இருவரும் பரவையாராகவும் சங்கிலியாராகவும் பிறந்தனர். 18 தேவ நாட்கள் அதாவது 18 மனித ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்து செயற்கரிய பணியை எல்லாம் செய்து முடித்து தன் இருப்பிடம் மீண்டார் அவர்.
பூவுலகில் சுந்தரத் தோற்றத்துடன் அவதரித்த அவருக்கு சிவபிரானே சுந்தரர் என்ற அழகிய நாமத்தை அளித்தார்.
தெருவீதியில் விளையாடிக் கொண்டிருந்த அழகிய சிறுவனைக் கண்ட திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் அந்தப் பையனை அழைத்துக் கொண்டு போய் அரண்மனையில் வளர்க்கலானார். மணமுடிக்கும் வயதில் அவருக்குப் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் முடிக்கும் வேளையில் சிவபிரான் அங்கு வந்து அவரை தடுத்தாட் கொண்டார். சிவபிரானுக்கே அவர் மீளா அடிமையானார். அவர் பாடிய பாடல்கள் மொத்தம் 38000 என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது ஏழாம் திருமுறையில் அவர் இயற்றியுள்ள பதிகங்களாக நமக்குக் கிடைத்துள்ளவை 101 பதிகங்கள். 84 தலங்களுக்குச் சென்று அவர் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கை 1037. சுந்தர நாயனாரின் பாடல்கள் அனைத்தும் அவற்றின் சிறப்பைக் கருதி, திருப்பாட்டு என்று விசேஷமாக அழைக்கப்படுகிறது.
அவர் ஒரு சிறந்த இசைக் கலைஞர். அவர் பாடிய பாடல்கள் அனைத்திற்கும் பண்கள் உண்டு. ஆகவே அவை பண் சுமந்த பாடல்கள் என்று சிறப்பாகக் கூறப்படுகின்றன.அத்தோடு தேவாரப் பாடல்களில் செந்துருத்திப் பண்ணில் பாடலை இயற்றியவர் அவர் ஒருவரே தான். வேறு யாரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.
அவர் ஆற்றியுள்ள அற்புதங்கள் பல.
Time and Space என்று கூறுகின்றோமே காலம், வெளி என்று! – இவை இரண்டையும் கடந்த அருளாளர் அவர். ஏனெனில் காலமும் கணக்கும் நீத்த காரணனின் தோழர் அல்லவா அவர்!
சிவபிரான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் அவர் எடுத்த போது உலகமே வியந்தது. Space – இடம் என்பது தனக்கு ஒரு பொருட்டல்ல என்று அவர் நிரூபித்தார்.
அடுத்து அவிநாசி என்று இன்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூரில், அவர் சிவனடியார் வீட்டில் நடந்த ஒரு உபநயன விழாவில் கலந்து கொள்ளச் சென்ற போது எதிர் வீட்டிலிருந்து வந்த அழுகைக் குரலைக் கேட்டு அது என்ன அழுகைக் குரல் என்று விசாரிக்க, சிவனடியாரின் பிள்ளையின் வயதை ஒத்த தன் மகனை இழந்த தாயின் புலம்பல் அது என்று கேட்டு பச்சாதாபம் கொண்டார். இரு வருடங்களுக்கு முன்னர் ஐந்து வயதாகியிருந்த போது அவனை குளத்திலிருந்த முதலை ஒன்று விழுங்கிற்று என்று அறிந்து கொண்ட அவர் நேராக குளத்தருகே சென்றார். தனது நெருங்கிய தோழரான சிவபிரானை நோக்கிப் பாடலானார். இரண்டாவது பாடலில் உன்னை வணங்க வந்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் என்ன (புக்கொளியூரில் குளத்து இடை இழியாக் குளித்த மாணி என்னைக் கீறி செய்ததே?) என்று வினவினார். சிவபிரானைத் தோழனாகக் கொண்ட வன்தொண்டர் இல்லையா அவர்! நான்காவது பாடலில், உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய் அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே என்று இப்படி கட்டளை இடும் தொனியில் பாடினார்.
பாடலின் பொருள் : “உன்னைத் தோத்திரம் செய்பவர் உரையை உகப்பவனே! உன்னை நினைப்பவர் தலை மேல் இருப்பவனே! அரையில் ஆடும் பாம்பை அணிந்தவனே! ஆதியும் அந்தமுமாய் இலங்குபவனே! சிறந்த முல்லை நிலமும் சோலைகளையும் கொண்ட திருப்புக்கொளியூர் அவிநாசியில் எழுந்தருளியிருப்பவனே! காலனையும் முதலையையும் பிள்ளையைக் கொண்டுவந்து தருமாறு ஆணையிடுக”
உடனே நீரில்லாமல் வற்றி இருந்த குளத்தில் நீர் நிரம்பியது. அதனுள்ளிருந்து இரண்டு வருடங்கள் முன் ஐந்து வயதாக இருந்த பாலகனை விழுங்கிய முதலை இப்போது ஏழு வயதாக் வளர்ந்த நிலையில் அவனை உயிருடன் உமிழ்ந்து விட்டுச் சென்றது. இது அவர் காலம் கடந்த அருளாளர் என்பதைக் காட்டுகிறது. விஞ்ஞானிகள் வியந்து ஆராயும் TIME TRAVELஐ இது மெய்ப்பிக்கிறது. காலம் என்பது ஒரு அற்புதமான விஷயம். அதில் அவதாரங்களும் அருளாளர்களும் எப்படி வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
ஸ்ரீ கிருஷ்ணர் சாந்தீபனி ம்ஹரிஷியின் குருகுலத்தில் குருகுலவாசம் முடிந்த நிலையில் குருதக்ஷிணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது ஆசாரியர் நீ எனக்கு மாணவனாக வந்ததே என் பாக்கியம் என்கிறார். ஆனால் ஆசிரமத்தின் உள்ளிலிருந்து குரு பத்னியின் அழுகைக் குரல் கேட்கவே கிருஷ்ணர் பதறிப் போய் என்ன விஷயம் என்று கேட்கிறார். குரு பத்னி தன் மகன் காலன் வசம் அகப்பட்டுக் கொண்டதைக் கூறி வருந்த, கிருஷ்ண பிரான், இதோ கொண்டு வருகிறேன் உங்கள் மகனை என்று கூறி விட்டு ஒரே பாய்ச்சலில் அவன் மகன் இருந்த பிரபஞ்சம் சென்று அவனை மீட்டு வரும் வரலாறு அதிசயமான ஒன்று. அதே போல திருஞானசம்பந்தர் இறந்து அஸ்தியாக இருந்த பூம்பாவையை மயிலையில் உயிருடன் மீட்ட சம்பவமும் அற்புதமானதே. Miracles are visiting cards of Saints! -அற்புதங்கள் என்பது அருளாளர்களின் அடையாள முகவரிகள்-என்பதே உண்மை!


தொடரும்
tags- பரிமாணம், காப்பியத் தலைவர், சுந்தரர்! ,