
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,018
Date uploaded in London – 25 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்! – 2
((வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 23-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)(
ஒரு நாள் குகை நமச்சிவாயர் தனது சீடனை சோதிக்க எண்ணி தான் சாப்பிட்டதை தனது திருவோட்டில் உமிழ்ந்து அதை குரு நமச்சிவாயரிடம் கொடுத்தார். “இதை யார் காலடியும் படாத இடத்தில் கொட்டு” என்றார். ஆழ்ந்து சிந்தித்த குரு நமச்சிவாயர் யார் காலடியும் படாத இடம் தானே, என்று அதை தானே உண்டு விட்டார். பின்னர் குகை நமச்சிவாயர், “அதை எங்கே கொட்டினாய்?” என்று கேட்க குரு நமச்சிவாயர் அதைத் தானே உண்டு விட்டதாகவும் அது யார் காலடியும் படாத இடம் என்றும் கூறினார்.
ஒரு நாள் குகை நமச்சிவாயர் ஒரு வெண்பாவின் பாதியைப் பாடினார் இப்படி:
“ஆல் பழுத்துப் பட்சியினுக் காகார மானதென
வேல் பழுத்து நின்ற நிலை வீ ணிலென –
இத்தோடு நிறுத்தியவர் தனது சீடனை நோக்கி, “இதை நீ முடி பார்க்கலாம்” என்றார்.
உடனே குரு நமச்சிவாயர் ‘”சாலவனச்
செய்யா ஒருத்தருடன் சேர்ந்தும் இருப்பீரோ
ஐயா நமச்சிவா யா” என்று முடித்தார்.
சீடனின் பக்குவ நிலையைக் கண்ட குகை நமச்சிவாயர், “அப்பனே! நீ ஞானத்தில் சிறந்தவன், இது போக க்ஷேத்ரம். நீ இங்கு இருக்க வேண்டா, தெய்வீக க்ஷேத்ரமான சிதம்பரம் செல்லலாம். நான் அண்ணாமலைக்கு அடிமையாக இருந்து இங்கேயே வாழ்கிறேன்” என்றார். குரு நமச்சிவாயர் இதனால் வருந்தினார். ஆனால் குகை நமச்சிவாயரோ, “இரு யானைகள் ஒரு கம்பத்தில் கட்டப்பட முடியாது, கூடாது “ என்றார்.
தனது குருவின் வாக்கைப் போற்றிய குரு நமச்சிவாயர் உடனே பத்துப் பாடல்களால் குருவின் பெருமையைப் போற்றிப் பாடினார்.
“வாக்காலே தியானத்தாலே மனமகிழ் கிருபையாலே
நோக்காலே (ஸ்)பரிசத்தாலே நுண்ணிய பிறவி தீர்க்கும்
தாக்கான நமசிவாயம் சலக்கமெய் யாடுகின்ற
நாற்காலி காலதானால் நான் முத்தி பெறலுமாமே”
இப்படி குருநாதரைப் போற்றி விட்டு பிரியா விடை பெற்று குரு நமச்சிவாயர் சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டார். சிதம்பரம் நோக்கிப் புறப்பட்ட அவர் பசியால் வாடினார். அண்ணாமலை ஈசனைத் தொழுது உண்ணாமுலை தேவியை பசி தீர்க்குமாறு ஒரு பாடலைப் பாடினார்..
அண்ணா மலையார் அகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே – நண்ணா
நினைதோறும் போற்றி செய நின்னடியார் உண்ண
மனைதோறுஞ் சோறு கொண்டு வா
அவரது வேண்டுதலைக் கேட்ட அம்மை மனமிரங்கினாள்.
உடனே அம்பிகை அங்கு தனக்கு அர்த்தஜாம பிரசாதமாக தரப்பட்ட சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை தங்கத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்து அவருக்குத் தந்தார். பிரசாதத்தை உண்டு பசியாறிய அவர் தங்கத் தட்டை ஒரு மரத்தின் அடியில் வீசினார்.
காலையில் கோவிலில் தங்கத் தட்டைக் காணாத அர்ச்சகர் திகைத்தார். பலரும் அங்கு குழுமி தங்கத் தட்டைத் தேட ஆரம்பித்தனர். “தங்கத் தட்டு மரத்தின் அடியில் கிடக்கிறது. அங்கே செல்லுங்கள்” என்று கோவிலிலிருந்து அசரீரி ஒலி எழவே அனைவரும் அங்கே சென்று தட்டை எடுத்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரிக்கு குரு நமச்சிவாயர் வரவே அவருக்கு தில்லை நகரின் வானளாவிய கோபுரங்கள் நான்கும் தெரிந்தன.
உடனே மனமுருகிய குரு நமச்சிவாயர்,
கோபுரங்கள் நான்கினையும் கண்ட மட்டிற் குற்றமெலாம்
தீ பரந்த பஞ்சது போல் சென்றதே – நூபுரங்கள்
ஆர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம்
பார்க்கின்றார்க் கென்னோ பலன்” என்று பாடி சிதம்பரநாதனை வழிபட்டார்.
தில்லையில் நடனமாடும் கூத்தப் பிரானை தரிசித்த அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அது அவரது குருவான குகை நமச்சிவாயர் போல அவருக்குக் காட்சி தரவே ஆனந்தம் பொங்கப் பாடினார் இப்படி:-
“திருவணாமலையிறி குகை நமசிவாய தேசிக வடிவமாயிருந்து
கரவனாமடியேன் சென்னி மேல் உனது கழலினை வைத்தவாறுணரேன்
விரகநாரியரைப் புதல்வரைப் பொருளை வேண்டிய வேண்டியதனைத்தும்
பரவினார் புகழ்வார்க் களித்திடும் பொன்னம்பலவனே! பரமராசியனே!”
பரமராசியனை அதி வேகத்தில் நூறு பாடல்களில் அவர் போற்றிப் பாடிய பாமாலை பரமராசிய மாலை என்று போற்றப்படுகிறது. இன்றும் அப்பாடல்கள் நம்மிடையே உள்ளன.
தில்லையில் அவர் நடத்திய அற்புதங்கள் ஏராளம். பொன் தாம்பாளத்தை ஏந்தி நடராஜப் பெருமானை அவர் துதிக்கவே அதில் ஒரு பொற்காசு விண்ணிலிருந்து விழுந்தது. நடராஜருக்கு அப்போது இல்லாமல் இருந்த பாதச் சிலம்பு, கிண்கிணி, வீர கண்டாமணி உள்ளிட்ட ஆபரணங்களை நிறைய பொருள் செலவில் அவர் தயாரித்து நடராஜருக்கு அணிவித்ததோடு ஒரு முறை அனைவரும் பார்க்க நடராஜரை கூத்தியற்றிக் காட்டுமாறு வேண்டினார். நடராஜரும் கூத்தியற்றிக் காட்டினார். இப்படிப் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய அவரது அற்புதங்கள் ஒரு நீண்ட பட்டியலாகும்.
For the truly faithful no miracle is necessary, for those who doubt no miracle is sufficient – Nancy Gibbs
நம்பிக்கை உடையவர்களுக்கு அற்புதங்கள் அவசியமே இல்லை, சந்தேகப் பேர்வழிகளுக்கு எத்தனை அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டாலும் அவை போதுமானதில்லை என்பது உண்மையான வாக்கியம்!
நீண்ட காலம் வாழ்ந்து பின்னர் திருப்பெருந்துறையிலே குரு நமச்சிவாயர் முக்தி அடைந்தார்.
குகை நமச்சிவாயரும் நீண்ட காலம் வாழ்ந்து திருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்தார். அண்ணாமலையார் ஆலயத்தின் பின்புறம் உள்ள கோபுரத்திலிருந்து மலையில் ஏறினால் சிறிது தூரத்தில் இந்த ஜீவ சமாதி ஆலயத்தை அடையலாம். குகை நமச்சிவாயர் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் பல நமக்குக் கிடைக்கவில்லை. அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, உள்ளிட்ட சில நூல்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன.
சித்தர் பூமி பாரதம் என்பதை நிரூபிக்கும் வகையில் சித்தர் பரம்பரையில் தோன்றி அனைவருக்கும் அருள் பாலித்த குகை நமச்சிவாயர் மற்றும் குரு நமச்சிவாயர் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்.
நன்றி, வணக்கம்!

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

t a g s — குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர் – 2