
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,034
Date uploaded in London – 31 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கோவில் கொள்ளைத் துறையும் ஒரு ராஜாவின் கதையும்!
ச.நாகராஜன்
1
திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர் அனைவரும் ஆரோக்கியமாகவும் மன நிம்மதியுடனும் வாழ்வதற்கு வழிகாட்டும் கட்டுரைகளைக் கொண்டு வெளிவரும் தமிழ் இதழாகும். இதன் ஆசிரியர் ஆர்.சி.ராஜா சிவன் பால் சித்தம் வைத்து வாழ்ந்து வருவதோடு அனைவரின் நலனையும் மனதில் கொண்டிருப்பவர் என்பது இந்த இதழைப் படிப்பவர்களுக்கு நன்கு புரியும். அவர் 2021, ஆகஸ்ட், 28ஆம் தேதியன்று ஒரு கதையை அனுப்பி இருந்தார் எனக்கு. நல்ல கதை. சிந்தனையைத் தூண்டி விடும் கதை. உடனே அவருக்கு இதை ஒரு கட்டுரையாக எழுதுங்களேன், ஏனெனில் இது இன்றைய ஆலய நிலையைச் சுட்டிக் காட்டுகிறது என்றேன். நீங்களே எழுதுங்கள் என்று பதில் அனுப்பி விட்டார் அவர். இதோ எழுதுகிறேன் – இந்தக் கதையை அனுப்பிய அவருக்கும் அவருக்கு இதை அனுப்பிய அவரது நண்பருக்கும் நன்றி கூறி!
2
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் தனது மந்திரியுடன் ஒரு நாள் மாலை நகர் வலம் சென்றார். ஆற்றங்கரை ஓரமாக அவர்கள் சென்ற போது ராஜா ஒரு வெள்ளரிக் கொடியைப் பார்த்தார். அதில் காய்கள் நன்கு காய்த்து அழகுறத் தொங்கின.
மந்திரியைப் பார்த்து ராஜா, “அதோ அந்தக் காய்களைப் பறித்து வாரும். உண்ணலாம்” என்றார்.
மந்திரி உடனே அதைப் பறிக்கப் போனார். அப்போது அங்கே ஒரு கண்பார்வையற்ற முதியவர் உட்கார்ந்திருந்தார்.
யாரோ ஒருவர் காயைப் பறிக்க முன் வருவதை உணர்ந்த அவர் கூறினார்:”ஐயா, காயைப் பறிக்காதீர்கள். அது வெள்ளரிக்காய் போலத் தோன்றும் குமட்டிக்காய். அதைத் தின்றால் வாந்தி தான் வரும்”.
கண்பார்வையற்ற ஒருவர் சொன்னதை நம்பாத ராஜா, “மந்திரி, எங்கே அதைப் பறித்துச் சாப்பிடும். உமக்கு வாந்தி வருகிறதா என்று பார்க்கலாம்” என்றார்.
அரச கட்டளை ஆயிற்றே! மந்திரி காய்களைப் பறித்துச் சாப்பிட்டார். உடனே ஒரே வாந்தியாக வந்தது. மந்திரி தொடர்ந்து வாந்தி எடுத்ததைப் பார்த்த ராஜா திகைத்துப் போனார்.
“அட, கபோதியே! நீ சொன்னது உண்மையாக அல்லவா இருக்கிறது. நான் அரசன். எனது மந்திரி வாந்தி எடுக்கிறாரே. இதை எப்படி நிறுத்துவது? வழி தெரியுமா உனக்கு?” என்றார் ராஜா.
“ராஜாவா! வணக்கம் ராஜா! ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அருகில் கை போலக் காட்சி அளிக்கும் ஒரு சிறிய செடியில் வளர்ந்துள்ள இலைகளைப் பறித்துக் கசக்கிச் சாப்பிடச் சொல்லுங்கள். வாந்தி உடனே நிற்கும் “ என்றார் அந்தக் குருடர்.
உடனே மந்திரி அப்படியே பச்சிலைகளைப் பறித்து வாயில் போட்டுக் கொண்டார். வாந்தியும் நின்றது.
ராஜாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. குருடரைப் பார்த்து, “அது சரி, உனக்குத் தான் கண் பார்வை இல்லையே, இதையெல்லாம் எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார்.
குருடர் கூறினார்: “ அரசே! நாட்டில் எங்கும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்துத் தாண்டவம் ஆடுகிறது. அப்படி இருக்கும் போது வெள்ளரிப் பிஞ்சுகளை எவனாவது செடியில் விட்டு வைத்திருப்பானா? ஆகவே தான் அதை குமட்டிக்காய் என்று அறிந்தேன். அத்தோடு இறைவன் எப்போதுமே நோய் கொடுக்கும் காயை வைத்திருந்தால் அதற்குப் பக்கத்திலேயே அதைத் தீர்க்கும் மருந்தையும் வைத்திருப்பார் என்பதால் அந்த பச்சிலை பற்றிச் சொன்னேன்” என்றார்.
ராஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி. “அடடா! அற்புதம். என் பெயரைச் சொல்லிக் கிழக்கு வாயிலுக்குப் போ. அங்கே பட்டை சாதம் இலவசமாகத் தருவாங்க. வாங்கிச் சாப்பிடு” என்றார்.
நாட்கள் பல கழிந்தன.
அயல் தேசத்து வியாபாரி ஒருவர் அந்த அரசனிடம் வந்தார். “ராஜாவே, என்னிடம் வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார்.
இந்த வைரங்கள் நிஜமானவையா அல்லது போலியானவையா என்று எப்படிக் கண்டு பிடிப்பது என்று ராஜாவுக்குக் குழப்பம் வந்து விட்டது. “மந்திரியைக் கூப்பிட்டு இது பற்றி உனக்குத் தெரியுமா” என்றார்.
மந்திரிக்கு வாந்தி எடுத்த அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது. வைரத்தைச் சாப்பிடச் சொன்னால் உயிர் அல்லவா போய்விடும்! அலறிப் போனார்.
“எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு வல்லுநரை அழைத்துத் தான் கேட்க வேண்டும்” என்றார் அவர்.
ராஜாவுக்கு அந்தக் குருடரின் ஞாபகம் வந்தது.
மந்திரியைப் பார்த்து, “அந்த குருடர் கொஞ்சம் விஷயம் அறிந்தவராக இருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்’ என்றார்.
மந்திரியும் அப்பாடா பிழைத்தோம் என்று எண்ணி அந்தக் குருடரை அழைத்து வரச் செய்தார். குருடரும் வந்தார்.
அவரிடம் ராஜா, ” அப்பனே! இது நிஜமான வைரமா? போலியும் கலந்திருக்கிறதா என்று எப்படிக் கண்டு பிடிப்பது. சொல்லேன்” என்று கேட்டார்.
“அரசே, இது மிக சுலபம். கற்களை வெயிலில் வையுங்கள். கண்டு பிடித்து விடலாம்” என்றார் குருடர்.

ராஜா அசந்து போனார் – இது என்ன அற்புத உத்தியாக இருக்கிறதே என்று!
அப்படியே நல்ல வெயிலில் வியாபாரி கொண்டு வந்த வைரங்கள் வைக்கப்பட்டன. சிறிது நேரம் கழிந்தது. குருடர் அந்த வைரங்களைத் தடவிப்
பார்க்க ஆரம்பித்தார். சிலவற்றை ஒரு புறமாக வைத்து இவை நல்ல வைரங்கள் என்றார். இன்னும் சிலவற்றை வேறொரு பக்கம் வைத்து இவை போலி வைரங்கள் என்றார்.
ராஜா வியாபாரியைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று அதட்ட, அந்த வியாபாரியும் குருடர் சொன்னது சரிதான் என்றும் அவர் தரம் பிரித்தது மிகவும் சரிதான் என்றும் உண்மையைக் கூறியதோடு அந்த வைரங்களை ராஜாவுக்கு இலவசப் பரிசாக அளித்து தண்டனையிலிருந்து தப்பித்தார்.
ராஜாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை.
“அப்பனே! எப்படி இப்படி எளிதாக கையால் தடவி கண்டு பிடித்தாய்? இரண்டு கண்களும் நன்றாக உள்ள எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே” என்று வியப்புடன் கேட்டார்.
“அரசே!இது மிகச் சுலபமான ஒன்று தான். வெயிலில் வைத்த போது கண்ணாடி என்றால் அது சுடும் இல்லையா? நல்ல வைரங்கள் சுடாது. அதை வைத்து கண்ணாடிக் கற்களை ஒதுக்கி வைத்தேன். அவ்வளவு தான்” என்றார் குருடர்.
ராஜா அவரது அறிவை மெச்சி ,”மேற்கு வாயிலுக்குச் செல்லுங்கள், உங்களுக்கு பட்டை சாதம் தயாராகக் காத்திருக்கும். பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.
குருடரும் நகர்ந்தார்.
மாதங்கள் சில கழிந்தன. தன் குமாரனுக்கு நல்ல பெண்ணாகப் பார்க்க ராஜா விரும்பினார். பல தேச இளவரசிகளில் சிறப்பான ஒரு இளவரசியை எப்படித் தீர்மானிப்பது. யாரையும் அவர் நம்பத் தயாரில்லை. குருடரின் புத்தி கூர்மை அவருக்கு நினைவுக்கு வரவே அவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார் ராஜா. குருடரும் வந்தார்.
ராஜா தனது பிரச்சினையைச் சொன்னார்.
“நிறைய இளவரசிகள் இருக்கிறார்கள். எப்படி தேர்ந்தெடுப்பது மருமகளை?” என்று ராஜா கேட்டார்.
குருடர் ராஜகுமாரிகள் இருக்கும் இடங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் கேட்டார்.
“ராஜா! இது ரொம்ப சுலபம். உங்களது அடுத்த நாட்டிற்கு அடுத்த நாட்டில் உள்ள இளவரசியை நிச்சயம் செய்து மணத்தை முடித்து விடுங்கள்.
ராஜாவுக்கு ஒரே சந்தோஷம். இப்படிப்பட்ட பிரம்மாண்டமான பிரச்சினைக்கு இப்படி ஒரு வரியில் ஒரு தீர்வா?
சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்ற அவர் குருடரைப் பார்த்துக் கூறினார்’ “ஆஹா! அந்த இளவரசி அற்புதமான பெண் தான்! ஆனால் இவ்வளவு பேர் இருக்கும் போது அவளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? காரண காரியம் இல்லாமல் நீங்கள் தீர்மானிக்க மாட்டீர்களே. எப்படி தேர்வு செய்தீர்கள் என்று சொல்லுங்கள்” என்றார்.
“அரசே! அந்த ராஜாவை உங்க சம்பந்தி ஆக்கிக் கொண்டால் எல்லை பிரச்சினை வரவே வராது. இரண்டு பேருக்கும் நடுவில் இருப்பதால் நடு தேசத்து ராஜா அடங்கி இருப்பார். அத்துடன் நம் நாட்டில் நிலவும் பஞ்சம் ஒரேயடியாக ஒழிந்து விடும். நமது நாட்டில் மற்ற இரு தேசங்களின் நட்புறவால் வளம் கொழிக்கும். எல்லை பிரச்சினையும் என்றுமே இருக்காது” என்றார் குருடர்.
“அடடா! என்ன ஒரு அற்புதமான யோசனை. இதோ இப்போதே நம் வடக்கு வாயிலுக்குச் செல்லுங்கள் . அங்கு உங்களுக்கு பட்டை சாதம் தயாராக இருக்கும். அதை வாங்கிச் சாப்பிடுங்கள்’ என்று உபசரித்தார் ராஜா.
குருடரும் வடக்கு வாயிலை நோக்கிப் போனார்.
நாட்கள் சில கழிந்தன.

ராஜா ஒரு நாள் அந்தக் குருடரை தனது அந்தரங்க அறைக்கு வரச் சொன்னார். மற்ற அனைவரையும் உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிட்டார்.
குருடரைப் பார்த்து, “அப்பனே! நீண்ட காலமாக என் மனதை அரித்து வரும் விஷயத்தைப் பற்றி உன்னைக் கேட்க விரும்புகிறேன். இந்த தேசத்தில் பலரும் என்னை பிச்சைக்காரிக்குப் பிறந்தவன் என்கிறார்கள். இதைக் கேட்கவே சகிக்கவில்லை. இது உண்மையா? காரண காரியத்தோடு பதிலைச் சொல்லு” என்றார் ராஜா.
குருடர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். ராஜா அவரைப் பார்த்து, “பயப்படவே வேண்டாம். உம்மை ஒன்றும் செய்ய மாட்டேன். இது சத்தியம். உண்மையைச் சொல்லலாம்” என்றார்.
குருடர் ராஜாவைப் பார்த்து, “ராஜாவே! இதில் சந்தேகமே வேண்டாம். நீங்கள் பிச்சைக்காரிக்குப் பிறந்தவர் தான்!” என்றார்.
ராஜாவுக்கு ஒரே வருத்தம். குருடரைப் பார்த்து, “அடடா! எவ்வளவு சோகமான செய்தி! இருந்தாலும் சரி, எப்படி இதைச் சொல்கிறாய், அந்தக் காரணத்தைச் சொல்” என்றார்.
குருடர் கூறினார்: “ ராஜாவே! முதலில் நீங்கள் என்னைப் பார்த்தீர்கள். குமட்டிக்காயைப் பற்றிச் சொல்லி உங்கள் மந்திரியைக் காப்பாற்றினேன். அதற்காக எனக்கு கிழக்கு வாயில் பட்டை சாதத்தைக் கொடுத்தீர்கள். உண்மையான ராஜாவாக இருந்தால் தனது வைர மோதிரம், மாலை உள்ளிட்டவற்றை கழட்டிக் கொடுத்திருப்பார். அடுத்ததாக கோடிக் கணக்கான பெறுமானமுள்ள வைரங்களை தரம் பிரித்ததோடு அந்த வியாபாரி அதை இனாமாக உங்களுக்குக் கிடைக்கச் செய்தேன். அதற்கு மேற்கு வாயில் பட்டை சாதத்தை வழங்கினீர்கள். உண்மையான ராஜாவாக இருந்திருந்தால் எனக்கு அரண்மனை பொக்கிஷத்தை வாரி வழங்கி இருப்பார். அடுத்து ஒரு ராஜ்யத்தையே உங்கள் வசமாக்கியதோடு நடுவில் இருந்த நாட்டையும் நிரந்தர நட்பு நாடாக்கி ஒரேயடியாக நம் நாட்டின் பஞ்சத்தையும் ஒழிக்க வழி வகை கூறினேன். அதற்கு எனக்கு நீங்கள் அளித்தது வடக்கு வாயில் பட்டை சாதம். உண்மை ராஜாவாக இருந்திருந்தால் எனக்கு மாடமாளிகை கூட கோபுரம் கொடுத்து என்னை உச்சி மேல் வைத்துக் கொண்டாடி இருப்பார். பல கிராமங்களை மானியமாக அளித்து என்னை மேலே உயர்த்தி இருப்பார் அல்லவா! நீங்களோ என்ன செய்தீர்கள் என்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு பட்டை சாதத்திற்கு மேலே போக உங்கள் புத்தி அனுமதிக்கவில்லை. வாயில் வாயிலாக கிழக்கு, மேற்கு, வடக்கு என்று அனுப்பிப் பட்டைச் சாதம் வழங்கினீர்கள். இதிலிருந்தே தெரியவில்லையா அலைந்து பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரிக்குத் தான் நீங்கள் பிறந்தீர்கள் என்பது” – இப்படி விளக்கமாகக் கூறி முடித்தார் அந்த முதியவரான குருடர்.
ராஜா வெட்கித் தலை குனிந்தார். குருடரின் மன்னிப்புக் கேட்டு விசும்பி விசும்பி அழுதார்.
இது தான் கதை!
இன்றைய தமிழகத்தின் நிலைமையும் இது தான்! மக்கள் கொடுத்த அரசுப் பொறுப்பைத் துஷ் பிரயோகம் செய்து தமது “புத்திக்கு எட்டியவரை” கோவில்களை எப்படி எல்லாம் அழிக்கலாம், அந்தச் சொத்துக்களை எப்படி எல்லாம் சுரண்டலாம் என்று பார்க்கும் கோவில் கொள்ளையையும் பண்பாட்டை அழிக்கும் செயலையும் நன்கு விளக்கும் கதை இது தான்!
அனைவருக்கும் பரப்ப வேண்டிய கதை இது!
3
ரீடர்ஸ் டைஜஸ்ட் மாத இதழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதை நவீனமாக்கித் தருகிறேன் இங்கு.
நவீன அறிவியல் உத்தியின் படி ஒரு புது வித கார் வடிவமைக்கப்பட்டது.
அதை டிஸைன் செய்த பேரறிஞரின் மானேஜர் பத்திரிகைகாரர்கள், அறிஞர்கள்,சாமானிய மக்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரு டெமோவுக்கு அழைத்தார்.
மைதானம் ஒன்றில் காரை நிறுத்தி அதன் வடிவமைப்பை விளக்கினார் மானேஜர்.
“அற்புதமான இந்தக் காரில் பிளாஸ்டிக் இல்லை. மாசுப் பொருள்களை ஏற்படுத்தும் எரிபொருள் இல்லை. பேரறிஞர் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாக இதைக் கொள்ளலாம். இதோ இந்த பட்டனை அமுக்கினால் ரிமோட் கண்ட்ரோலினால் இது ஓடும்! பாருங்கள் இதோ, ஓடப் போகிறது” என்று கூறியபடியே அவர் ஒரு பட்டனை அமுக்கினார்.
கார் வெகு விரைவாகப் பறந்தது. அனைவரும ஆஹா ஆஹா என்று வியந்தனர்.

ஆனால் திடீரென்று மைதானத்தில் ஒரு இடத்தில் அந்தக் கார் ஒரு குட்டிக் கரணம் போட்டது. அனைவரும் ஓவென்று கூவினர். இன்னும் சில இடங்களிலும் அந்தக் கார் குட்டிக் கரணம் போட்டது.
ஜனங்கள் வியந்தனர். டெமோ முடிந்தவுடன்வடிவமைப்பு பற்றி கூறி டெமோ செய்தவரிடம் அனைவரும் கேட்ட ஒரே கேள்வி இது தான்: “ பேரறிஞரின் வடிவமைப்பு பற்றி நீங்கள் அளந்த கதை வியக்கும் படியாகத் தான் இருக்கிறது. ஆனால் ஏன் சில இடங்களில் இது குட்டிக் கரணம் போடுகிறது? இதில் பயணிப்பது ஆபத்தாக அல்லவா இருக்கும். உயிர் போய் விடுமே. இது குட்டிக் கரணம் போடுவதன் காரணம் என்ன?”
எல்லோரும் பதிலுக்காக நெருக்கவே அந்த டெமோ செய்தவர் உண்மையைச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்!
“அதுவா! வேறொன்றுமில்லை. இந்தக் கார் முற்றிலும் பன்றித் தோலினால் ஆனது. ஆகவே தான் மைதானத்தில் சகதியாக உள்ள இடங்களில் எல்லாம் அது குட்டிக் கரணம் போடுகிறது”
அடடா! என்ன அழகான ஜோக்! மலத்தைத் தின்று உயிர் வாழும் பன்றியின்
பிறவிக் குணத்தை நவீன தொழில்நுட்பம் கூடப் போக்க முடியாது!
உண்மை தான் இல்லையா!
சுரண்டுவது, அழிப்பது என்பதை பிறவிக் குணமாகக் கொண்டவர்களும் கூட சகதிகளில் குட்டிக் கரணம் போடுவது இயல்பே அல்லவா! கோவில்களை இறைவன் இருக்கும் இடம் புண்ய தீர்த்தமாக நினைப்பது பக்தர்கள். அதை சகதிகளாக நினைப்பவர்கள் என்ன செய்வார்கள்?
இந்த பன்றிக் காரில் யாராவது சவாரி செய்ய முடியுமா, சொல்லுங்கள்!
***
INDEX
காரண காரிய தொடர்பு விளக்கும் ராஜா-குருடர் கதை,
பன்றித் தோல் கார் குட்டிக்கரணம் அடிப்பது ஏன்?
ஹெல்த்கேர் ஆசிரியர் ராஜா அனுப்பிய கதை, நன்றி
tags-
ராஜா-குருடர் கதை,,காரண காரியம்,
Kannan B
/ August 31, 2021ராஜா-குருடன் கதை இரு நாட்களுக்கு முன் நண்பர் வாட்ஸ்அப் பில் அனுப்பியிருந்தார். A good moral story. சிந்திக்க வைக்கும் சம்பவம். Save பண்ணி வைத்திருந்தேன். நீங்களே எழுதி விட்டீர்கள். பன்றி ஜோக் TN HR&CEக்கு ஏற்றது. Well done!
Kannan, Delhi
santhanam nagarajan
/ August 31, 2021thanks a lot Mr kannan. thirudanay parththu thiruntha vittaal thiruttai ozikka mudiyathu. arame koorramaakum ivarukalukku.