ருக்மிணீ விஜயம் மகா காவியம்-2 (Post No10041)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,041

Date uploaded in London – 1 September   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ருக்மிணீஷ விஜய மகிழ்ச்சித் ததும்பும், மேன்மையான ஓர் இலக்கியம். மேலே கூறிய மகா காவியத்துக்கு உரிய எல்லாவித லட்சணங்களையும் கொண்டது.

இது பக்திரசத்தையே முன்நிறுத்தியுள்ளது. பாரதம் 10-வது காண்டத்தில் முதலிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளச் சம்பவங்களையே காவியத்தின் கதைக் கருவாக எடுத்துக் கொண்டுள்ளார்.அந்த உயர்ந்த, கம்பீரமான கிருஷ்ணாவதாரம் எனும் பேசும் பொருளும், அவனது தீராத விளையாட்டுச் செயல்களுமே தனிச் சிறப்பைக் கொடுத்து விட்டது. இதில் சுயக் கட்டுப்பாடு, தன்னடக்கம்,(தீரோதாத்த), உயர்ந்தக் குண,நலம் வாய்ந்த ஶ்ரீகிருஷ்ணப் பரமாத்மாவே நாயகன், நாயகி தேவி ருக்மிணி.

முதல் சர்கத்தில்,தேவேந்திரனின் தூதுவராக கிருஷ்ணனைக் காண வரும் நாரதர், சிசுபாலனுடன் போருக்குத் தயாராகுமாறு கோரிக்கை வைக்கிறார். மகான் வாதி ராஜர் தீமை விலகி நன்மைப் பயக்கும் பாற்கடல் கடையும் சம்பவத்தை மிக அழகாக, ரசனையுடன் ரூபக அணியில் விவரித்து ஒரு படி முன்னேறி விடுகிறார். மாகா, ரைவதகா மலைத் தொடரிலுள்ள ரிஷிகள் பதஞ்சலி யோக சாஸ்திரத்தை

அனுஷ்டிக்கிறார்கள் என விவரிக்கிறார். ஶ்ரீவாதிராஜர் கிருஷ்ணன் நிகழ்த்தும் கோவர்தனகிரி லீலைகளையும், அதன் சுற்றுப்புறச் சூழல் பயன்பாட்டையும் சொல்கிறார். பருவகால சிலேடையுடன் கூடிய குரு மாத்வாச்சாரியார் பற்றிய வர்ணனை (5-36-39) நம்மை ஈர்க்கிறது. இன்னும் இதுமாதிரி பல உண்டு.

மிகச் சிறந்தச் செய்யுட்களும், தத்துவ ஞானமும் இணைபிரியாதவை. ஒரு வெற்றிகரமானப் புலவருக்கு இவையிரண்டும் இன்றியமையாதவை ஆகும்.  அதைச் செவ்வனே செய்து முடித்திருக்கிறார் ஶ்ரீவாதிராஜர்.

துவைதம்-அத்துவைதம் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளார். காளிங்க நர்த்தன விவரணையில் கிருஷ்ணனின் பாதங்களை கருடனின் உள்ளங்கைகளாகப் பாவித்துள்ளார்(4-63). “தேவர்களின் அதிகாரி பிரம்மா, அவர் தேவி லக்ஷ்மிக்குக் கட்டுப்பட்டவர், நான் ஶ்ரீதேவியின் தலைவன்… தேவர்களின் படிநிலையைக் குறிப் பிடுகிறார். மேலும் சர்கம்3-ல் அசுரன் த்ருனாவ்ரதா ஆகாயத்திலிருந்து விழுவதில் அடங்கியுள்ள வேதாந்தக் கருத்தையும் (காரண காரியத்துக்குக் கிடைக்கக் கூடிய சரியான பலன்-cause & effect) விளக்குகிறார். அனைத்துவித உருவக அணிகளையும் கையாண்டிருக்கிறார். கிருஷ்ணனும், கோபிகையரும் உரையாடுவது லதானுப்ராசா அணியில் அமைந்துள்ளது.(4-32,33) அதாவது, ஒரு சொல்லை ‘ஏற்புடையது அல்ல’ என்றுப் பொருள்படும்படி குறிப்பிட்டு அடுத்து அதே சொல்லை அனுமதிக் கலாம் ,ஏற்கத்தக்கது’ என்றுப் பொருள்பட பேசுவதாகும். கோபிகையரைக் குழப்புவது மட்டுமின்றி நம்மையும் சிந்திக்க வைத்துவிடுகிறார். தாயார் யசோதை கஷ்டப்பட்டு கிருஷ்ணனைத் தூங்கவைக்கையில், ‘ஏன் தூங்க வேண்டும்? என்று அடம் பிடிப்பது முறுவலிக்க வைத்தாலும், அதற்கு யசோதை தரும் விளக்கத்தில் பொதிந்திருக்கும் தத்வார்த்தம் சிந்திக்க வைக்கிறது! (3-12) ராசக்க்ரீடை (அத் 8, 9), ருக்மிணி தேவியின் கேசாதி-பாத வர்ணனை (அத். 18) பிரமிக்க வைக்கின்றன. சித்திரக் கவியில், தாமரை இதழ் பந்தம் (17-70), சக்கர பந்தம் (19-36) வியக்க வைக்கின்றன.

இரு கவிகளுமே ஒரே எழுத்தைக் கொண்டுப் பாடல் புனைவதில் வல்லவர்கள். ஆனால் அதிலுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்….

மாகா பாடியதோ ‘த’ எழுத்து வரிசையின் 3-வது மெய்யெழுத்து d=द வைக் கொண்டுச் சாதாரணமாக இயற்றப்பட்டதாகும்.

दाददो दुद्ददुद्दादी दाददो दूददीददोः ।            

தாததோ துத்துத்தாதி தாததோ தூததீததோ:

दुद्दादं दददे दुद्दे दादाददददोऽददः ॥18-114       

துத்தாதம் தததே துதே தாதாததததோ தத:

இதன் பொருள்-

“கேட்பதைக் கொடுப்பவனும், தீய எண்ணம் கொண்டவர்களுக்குக் கசையடி தண்டனை அளிப்பவனும்,உள்ளத்தைத் தூய்மைப் படுத்துபவனும், துஷ்டர்களைச் சம்ஹாரம் செய்பவனுமான பகவான் கிருஷ்ணன் எதிரியின் மீது ரணவலி உண் டாக்கும் தன் அம்பைச் செலுத்தினான்”

இதற்குச் சவால்விடும் தொனியில் மகான் வாதிராஜர் ‘த’ எழுத்து வரிசையின் 5-வது மெய்யெழுத்தான n=न வைக் கொண்டு ஒரு பன்முகத்தன்மை வாய்ந்தப் பாடலை

இயற்றியுள்ளார். அதில் உயிர் எழுத்துக்களின் கூட்டு வார்த்தைகளும் (அ+அ, அ+இ, அ+ஐ, அ+உ),பூர்வரூப சந்தி (ते + अत्र = तेऽत्र), விசர்க சந்தி ( तप: + वन =तपोवन) என்ற வெவ்வேறு அணிகள் அமைக்கப்பட்டுப் பாடலுக்கு ஏற்றம் தந்துள்ளன.         

नानाननाननुत् नूनम् न एन: अनन्ने अन्निनाम् नु नौ: ।

நாநாநநாநநுத் நூநம் ந ஏந: அநந்நே அந்நிநாம் நு நௌ: |

नानान्ननुन्नेन अनेन न ऊन: ना इन न नो ननु ॥ 8-3      

நாநாந்நநுந்நேந அநேந ந ஊந: நா இந ந நோ நநு || 

இதன் பொருள்……

ஹே, ஒப்பற்றத் தலைவனே! ஒருவனுக்கு உணவளிப்பவனுக்குப் பாபம் சேராது. இந்திரியச் சுகங்களில் மூழ்கியிருப்போரை விட்டு அவ்வளவு எளிதில் ஆசை அகலாது. அது விடுபடுவது ஆத்மானந்தத்தை அனுபவித்தப் பிறகுதான். களியாட் டத்தில் உழல்பவனைப் படகு எனும் யோகி கரை சேர்த்து,பிரம்மானந்தத்தை அடைய வழி காட்டுவான்!” என்பதே இதன் உட்பொருளாகும்.

இங்கே அருணகிரிநாதர்,  வில்லிப்புத்தூராருடன் வாதிட்ட போது பாடியச் சவால் பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் தானே! ஆஹா, எவ்வளவு அருமை!

திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா       

திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா              

திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து

திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!

அவரது உணர்ச்சியூட்டும் பாடல் வரிகள் நமக்குப் பாரதியாரையும், ஆங்கிலக் கவிஞன் பெர்சி ஷெல்லியையும் நினைவூட்டுகின்றன. இப்படிப்பட்ட ஓர் அமர காவியத்தை வெரும் 19 நாட்களில் தினம் ஒரு காண்டமாக இயற்றி, கெடுவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே வித்வத் சபையோரிடம் சமர்ப்பித்து விட்டார்.

அதைப் படித்தப் பண்டிதர்கள் ஆச்சரியமடைந்தனர். மகானின் இனிமையான எழுத்து நடை அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. எளிதில் புரியக் கூடியப் பாடல் வரிகள், இன்னிசை இழையோடும் சொற்கள், அசர வைக்கும் உபமானங்கள், ஊக்குவிக்கும் உருவகம், யமகம், சிலேடை,சித்திரக் கவிதைகள் அனைத்தும் அவர்கள் மனதைப் பெரிதும் கவர்ந்து விட்டன. ‘மாகாவின் தலைப்பு எதிர்மறை எண்ணங்களையே

தரும்,ஆனால் என்னுடையது கிருஷ்ணனின் வெற்றியைக் குறிக்கும் ஒரு மங்கலச் சொல், அது நேர்மறை எண்ணங்களையேத் தரவல்லது. தெய்வத்தைச் சிறுமைப் படுத்தி ஒரு லடகனை (வில்லன்) உயர்த்திக் காட்டுவது ஏற்புடையது ஆகாது!’ என்ற மகானின் வாக்கிலுள்ள நிதர்சனத்தை ஆமோதித்தனர். மகா காவியத் தகுதியையும் ஒருமனதாக அளித்தனர்.                                    

மகான் ஶ்ரீவாதிராஜருக்குக் கவிசமூகத்தின் திலகம் என்றப் பட்டத்தையும் கொடுத்துக் கௌரவித்தனர். அது மட்டுமின்றி, நன்கு அலங்கரிக்கப்பட்ட “கண்டாமாகா” யானை மீது ஶ்ரீருக்மிணீஷ விஜய காவியப் பிரதி

வைக்கப்பட்டு, புண்ணியபுரி முழுதும் வெகு கோலாகலத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கௌரவிக்கப் பட்டது.

மகாவிஷ்ணுக்குரிய சாதுர்மாஸ்ய விரதக்காலத்தில் அவரது கிருஷ்ணாவதாரத்தைப் போற்றி இயற்றப்பட்ட ஶ்ரீருக்மிணீஷ விஜய நூல் ஆறாவது மகாகாவியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ன பொருத்தம்!                                                                                                                                                                                                                                                                             

இரு காவியங்களுக்கிடையே என்ன ஒற்றுமை, வேற்றுமை இருந்தாலும் முடிவில் வெற்றிவாகைச் சூடியது என்னவோ, சம்ஸ்க்ருதம் தான்!

ஜயது, ஜயது சம்ஸ்க்ருதம்!

நன்றி, வணக்கம். ஜெய்ஹிந்த்.      

——————————————————————————————————-

tags- ஶ்ரீ  , ருக்மிணீஷ விஜய நூல்-2, வாதிராஜர், B Kannan

Leave a comment

Leave a comment