
Post No. 10,112
Date uploaded in London – 20 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அன்னை சாரதா தேவியார் வாழ்வில்….!
ச.நாகராஜன்
ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் மனைவியான அன்னை சாரதா தேவியாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது.
ஒருமுறை சாரதா தேவியார் தனது பிறந்தகமான ஜெயராம் பாடியிலிருந்து தக்ஷிணேஸ்வரத்தில் இருந்த தனது கணவரின் இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தார். கால்நடையாகச் சென்று கொண்டிருந்த அவருக்கு கூடவே வழித்துணையாக ஒரு பெண்மணியும் அவர் கூட வந்து கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெண்மணியோ வேகமாக விறுவிறுவென்று நடந்து வெகுவாக முன்னே சென்று விட்டார். தனியே மெதுவாகச் சென்று கொண்டிருந்தார் சாரதா தேவியார்.
திடீரென்று ஒரு முரட்டுக் குரல் கேட்டது : “அங்கே யார் போவது?”
சாரதா தேவியார் குரல் வந்த திசையை நோக்கிப் பார்த்தார். ஒரு முரட்டு ஆசாமியும் அவன் கூட ஒரு பெண்மணியும் அவரை நோக்கி வந்தனர். மிக்க இளமைப் பருவத்தில் இருந்த சாரதா தேவியாருக்கு நிச்சயமான ஆபத்து காத்திருந்தது.
ஆனால் அந்த பயத்திலும் கூட சாரதா தேவியார் நிதானத்தை இழக்காமல் பேச ஆரம்பித்தார் :” தந்தையே! நல்ல வேளையாக நீங்கள் வந்தீர்கள். நான் இதோ எனது கணவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன். என் கூடத் துணையாக வந்தவள் வேகமாக நடந்து முன்னே சென்று விட்டாள். எனக்கு நடந்து அவ்வளவாகப் பழக்கமில்லை என்பதால் நான் மிகவும் பின் தங்கி விட்டேன். எனக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்கள்; பின்னர் என்னை என் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்”.
அன்னை சாராதா தேவியாரின் இந்த மிருதுவான பேச்சைக் கேட்ட அந்தக் கொள்ளைக்காரன் உடனே பதில் அளித்தான் இப்படி :”அம்மா, தாயே! நீங்கள் கேட்டபடியே எல்லாவற்றையும் உடனே செய்கிறேன்”
இப்படிக் கூறி விட்டு அந்தக் கொள்ளைக்காரன் தனது மனைவியிடம் உணவுக்கு ஏற்பாடு செய்து அதை அவருக்குக் கொடுத்தான். தனது உணவை அவர் முடித்துக் கொண்டவுடன் அந்தக் கொள்ளைக்காரனும் அவன் மனைவியும் கூடவே வந்து சாரதா தேவியாரை பத்திரமாக அவர் இல்லத்தில் கொண்டு சேர்த்தனர்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவர்களை வரவேற்று ஒரு மாமனார்- மாமியாருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை அவர்களுக்குக் கொடுத்தார்.
ஹிந்து வாழ்க்கை முறையில் ஒரு கொள்ளைக்காரன் கூட தனியே வந்த பெண்மணிக்கு ஒரு துன்பமும் இழைக்க மாட்டான் என்பதற்கான அருமையான உதாரணம் இது. அத்தோடு ஒரு பெண்மணி எப்படிப் பேச வேண்டும் என்பதையும் அனைவருக்கும் எடுத்துக் காட்டாக சாரதா தேவியார் செய்து காண்பித்தார்.
சிறு சிறு விஷயங்களில் கூட தன் வாழ்க்கை முழுவதும் அவர் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவே விளங்கினார்.
அன்னை சாரதா தேவியார் பிறந்த தினம் 22, டிசம்பர் 1853. அவர் மறைந்த தினம் 20, ஜூலை 1920)

tags — அன்னை, சாரதா தேவி,