WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 10,415
Date uploaded in London – – 6 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 5-12-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திரு இரும்பூளை என்னும் ஆலங்குடி
துயர் ஆயின நீங்கித் தொழும் தொண்டர் சொல்லீர்
கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடனாகி
இயல்பாய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே
திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது நவகிரகங்களில் தெய்வீக அறிவுக்கும் ஞானத்திற்கும் அதிபதியான குரு பகவானின் சிறப்புத் தலமும் பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களில் ஒன்றாக அமைவதுமான திரு இரும்பூளை எனப்படும் ஆலங்குடி திருத்தலம் ஆகும். தமிழகத்தில், கும்பகோணத்திற்கு தெற்கே 17 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.
இறைவனின் திருநாமம் : ஸ்ரீ காசி ஆரண்யேஸ்வரர், ஆபத்சகாயர்
அம்மன் : ஏலவார்குழலி ஸ்தல வ்ருக்ஷம் : பூளைச் செடி
தீர்த்தம் : அமிர்த புஷ்கரணி விசேஷ மூர்த்தி: குரு தக்ஷிணாமூர்த்தி
விநாயகர் : கலங்காமல் காத்த விநாயகர்
இத்தலத்தில் ப்ரம்ம தீர்த்தம், லக்ஷ்மி தீர்த்தம் இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்கள் உள்ளன.
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு. பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் உருவாகவே அதைக் கண்டு தேவர்கள் அஞ்சி நடுங்கினர். சிவபிரான் தன் தோழராகிய சுந்தரரைக் கொண்டு விஷத்தைக் கொண்டு வரச் செய்து அதைக் குடித்து தன் கண்டத்தில் அடக்கினார். அதனால் இத்தலம் ஆலங்குடி என்னும் பெயரைப் பெற்றது. இறைவன் ஆபத்சகாயர் என்னும் திருப்பெயரைப் பெற்றார். இங்கு விஷம் தீண்டி யாரும் இறப்பது கிடையாது.
இங்குள்ள விநாயகருக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. கஜமுகாசுரனால் தேவர்களுக்கு நேர்ந்த இடர்களைக் களைந்து அவர்களைக் காத்தமையால் இவர் கலங்காமல் காத்த விநாயகர் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
உமாதேவி தவம் செய்து இறைவனைத் திருமணம் செய்து கொண்ட தலம் இது.
ஒரு முறை கைலாயத்தில் பார்வதி தேவி தனது தோழிகளுடன் பந்தாடிக் கொண்டிருந்த சமயம், உயரப்போன பந்தைப் பிடிக்க கையை உயரத் தூக்கவே வானவீதியில் வலம் வந்து கொண்டிருந்த சூரியன் தன்னைப் பார்த்துத் தான், அம்பிகை நிற்கச் சொல்வதாகக் கருதி நின்றான். அதனால் அவன் தொழில் தடைப்பட்டு உலகம் ஸ்தம்பித்தது. அவன் சிவபிரானிடம் முறையிடவே அவரிட்ட சாபத்தின் காரணமாக அம்பிகை பூலோகத்தில் காசி ஆரண்ய தலமான இத்தலத்தில் அவதரித்து தவம் செய்து சிவபிரானைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த இடம் இன்று திருமண மங்கலம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அம்பாளின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, லக்ஷ்மி, கருடன், அஷ்டதிக் பாலகர்கள், ஐயனார் வீரபத்திரர் முதலானோர் தம் தம் பெயரால் லிங்கங்களை நிறுவி இங்கு வழிபட்டனர். முசுகுந்த சக்ரவர்த்தி, சுவாசனன், திருஞானசம்பந்தர், சுந்தரர் உள்ளிட்டோர் வந்து வழிபட்ட தலம் இது.
முசுகுந்த சக்ரவர்த்தியைப் பற்றிய ஒரு வரலாறும் இத்தலம் பற்றி உண்டு. முசுகுந்த சக்ரவர்த்தி தன் மந்திரியும் சிறந்த சிவபக்தருமான அமுதோகர் என்பவருடைய சிவ புண்யத்தில் பாதியையாவது தருமாறு வேண்டினார். அவரோ மறுத்தார். இதனால் வெகுண்ட மன்னன் அவர் தலையை வெட்டும் படி உத்தரவிட்டான். கொலை செய்ய வந்தவர்கள் வாளை எடுத்தவுடன் சிவபிரானின் ஆணையால் அவர்கள் உயிர் அக்கணமே நீங்கியது. உடனே அமுதோகர் என்ற சப்தம் எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. அரசன் வியந்தான். தான் செய்த தவறை உணர்ந்தான். அபசாரம் நீங்க இத்தலத்தில் வந்து வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றான்.
கோவில் ஊரின் நடுவே, நான்கு புறமும், தாமரை பூத்திருக்கும் அகழி சூழ, உயரமான மதில்களுடன் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கோவிலில் உள்ளே பிரவேசித்ததும் கலங்காமல் காத்த விநாயகர் மேலக்குடவறையில் அமைந்து காட்சி அளிக்கிறார். எதிரே உள்ள முதல் பிரகாரத்தில் அம்பாளின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மஹாமண்டப வாயிலில் கர்பக்ருஹத்தில் கிழக்கு நோக்கி ஆபத்சகாயர் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாகிய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் அமைந்து தரிசனம் தந்து அருள் பாலிக்கிறார்.
குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழியே குருவின் பெருமையை நன்கு உணர்த்தும். அந்தணர், பசுக்களுக்கு அதிபதி குரு. உடலில் சதை இவர். வடக்கு திசை குருவிற்கு உரியது. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் ப்ரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம். தனுர், மீன ராசிகளுக்கு அதிபதி குரு. மஞ்சள் நிறத்திற்கு உரியவர். கடலை தானியமும் முல்லை மலரும் அரசு சமித்தும் இவருக்கு உகந்தவை.
இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஏலவார் குழலியும் காசி ஆரண்யேஸ்வரரும், குரு பகவானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
தேவானாஞ் ச ரிஷீணாஞ் ச குரும் காஞ்சந ஸந்நிபம்
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்|
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆசாரியன். பொன்னன். மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன். அந்த பிரஹஸ்பதியை நமஸ்கரிக்கிறேன்.
நன்றி, வணக்கம்! ***
tags- ஆலங்குடி, திரு இரும்பூளை, குரு பார்த்தால் கோடி நன்மை