WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,431
Date uploaded in London – – 11 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
டிசம்பர் 11 பாரதியார் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது.
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 65
‘தினமணி மகாகவி பாரதியார் – நினைவு நூற்றாண்டு மலர் 1921-2021
ச.நாகராஜன்
மஹாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை ஒட்டி விசேஷமாகத் தயாரிக்கப்பட்டு தினமணி நாளிதழால் வெளியிடப்பட்டுள்ள இந்த மலரில் நான்கு பகுதிகள் அமைந்துள்ளன.
முதல் பகுதியில் காந்திஜி, ராஜாஜி, திரு.வி,க., வ.உ.சி., வ.வே.சு ஐயர், பரலி சு.நெல்லையப்பர், பாரதிதாசன், செல்லம்மா பாரதி, சோமசுந்தர பாரதி, தங்கம்மாள் பாரதி, சகுந்தலா பாரதி, யதுகிரி அம்மாள், வ.ரா., ரா.கனகலிங்கம், வையாபுரிப் பிள்ளை, சுத்தானந்த பாரதியார், பி. ஸ்ரீ., நாமக்கல் கவிஞர், ம.பொ.சிவஞானம், திருலோக சீதாராம், ரா.அ.பத்மநாபன், ஜீவா, ஜெயகாந்தன், கண்ணதாசன், சக்கரை செட்டியார், கி.வா.ஜகந்நாதன் பெ.சு.மணி ஆகிய 27 பாரதி ஆர்வலர்கள்/ நெருங்கிய குடும்பத்தார், சுற்றத்தார் ஆகியோரது அருமையான கட்டுரைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாம் பகுதியில் பாரதியாரின் ஐந்து புகைப்படங்கள் காட்சி தருகின்றன.
மூன்றாம் பகுதியில் 13 அறிஞர்களின் கட்டுரைகளும் நான்காம் பகுதியில் இன்னும் 6 கட்டுரைகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
178 பக்கங்கள் கொண்ட மலராக அமைந்துள்ளது இது.
காந்திஜி பற்றிய கட்டுரையில், பாரதியாரின் பாடல்களை பர்மா அரசாங்கத்தின் யோசனையின் படி அல்லது கட்டளையின் படி சென்னை அரசாங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை எதிர்த்து மஹாத்மா காந்திஜி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
அடுத்து 1958ஆம் ஆண்டு தினமணி சுடரில் ராஜாஜி எழுதிய ஒரு கட்டுரை மிக அருமையாக இருக்கிறது.
அந்தக் கட்டுரையின் இறுதியில் அவர் குறிப்பிடுவதாவது;
“அன்னிய ஆட்சி தீர்ந்து நாம் சுதந்திரம் பெற்று விட்டதை அவர் பார்க்கவில்லை. சுதந்திரத்திற்காகப் பாடுபட்டதைப் பார்த்தே மகிழ்ந்தார். பாரதியைக் கொடுத்த தமிழ் வயல் நல்ல வயல். அந்த வயலைச் சரியாகப் பாதுகாத்து வருவோம். முள்ளும், பூண்டும் வளர்ந்து கெட்டுப் போக விட மாட்டோம். பாரதி பிறந்த நாட்டில் பொய்யும் பித்தலாட்டமும் இருக்கலாமா, வேண்டாம்.”
ராஜாஜியின் வார்த்தைகள் இந்தக் காலத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது.
மாமா பாரதியார் என்று வ.உ.சி அவர்கள் தனது அனுபவங்களை விளக்கும் கட்டுரை மிக அருமையாக உள்ளது.
நாட்டில் புதிய இயக்கம் பிறந்ததும் அதற்கேற்ற ஒரு புதிய கவி தோன்றினார் என்று கூறும் வ.வே.சு. ஐயர் அவர் பெயர் சுப்பிரமணிய பாரதியார் என்பதை அனைவரும் கண்டு பிடிப்பார்கள் என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார் தனது ‘மறு மலர்ச்சிக் கவிஞர்’ என்ற கட்டுரையில்.
பாரதியின் கடைசி நாளை பரலி. சு. நெல்லையப்பர் உருக்கமாக விவரிக்கிறார் தனது கட்டுரையில்.
பாரதியாருடனான தனது முதல் சந்திப்பை பாரதி தாசன் தனது ‘ரவிவர்மா பரமசிவப் பட பாரதி’ என்ற கட்டுரையில் சுவைபட விவரிக்கிறார். படிக்க சுவாரசியமாக அமையும் இந்தக் கட்டுரை பலரும் அறியாத புது விவரங்களைத் தருகிறது.
செல்லம்மா பாரதி, தங்கம்மாள் பாரதி, சகுந்தலா பாரதி ஆகியோர் பாரதியின் உற்ற குடும்பத்தார். அவர் தம் கட்டுரைகள் சுவையான சொந்த அனுபவங்களை விவரிக்கின்றன.
யதுகிரி அம்மாள் புதுவையில் வசித்தவர். பாரதியாருடனான தனது நினைவுகளைத் தனி ஒரு நூலில் பதிவு செய்தவர். காணி நிலம் வேண்டும் என்ற தனது கட்டுரையில் புதுவையில் பெய்த கன மழை பற்றி விவரிக்கிறார்.
மகாகவி 16-11-1916 அன்று புது வீடு போன செய்தியையும் பார்க்க முடிகிறது.
“பாரதியாரின் கவிதை ஆழமும் கரையும் காண முடியாத கடலாகும்” என்ற வ.ரா. அவர்களின் சரியான கணிப்பைத் தருகிறது அவரது ‘விசித்திரமான கவிதை’ என்ற கட்டுரை.
பக்கத்திற்குப் பக்கம் பாரதியாரைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல்களைப் படிக்கும் போது உள்ளம் குளிர்கிறது.
மஹாகவியைப் பற்றி ஆராய ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவரைப் பற்றி முழுதுமாகக் கண்டவர் இது வரை யாருமில்லை.
பாரதி பற்றிய ஒரு பெரும் களஞ்சியம் உருவாக வேண்டும்.
அதற்கு இப்படிப்பட்ட மலர்களும், நூல்களும் உதவியாக இருக்கும்.
நூற்றாண்டு நினைவு மலராக வந்திருக்கும் இந்த மலர் பாரதி ஆர்வலர்களுக்கு ஒரு வர பிரசாதம்.
தமிழர்கள் அனைவரும் வாங்கிப் படித்துத் தங்கள் இல்லத்தில் பாதுகாக்க வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை.
பாரதி புகழ் ஓங்குக!
TAGS- பாரதியார் நூல்கள் – 65