WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,669
Date uploaded in London – – 18 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 18
அதர்வண வேத பூமி சூக்தத்தை இன்று நிறைவு செய்வோம். கடைசி மந்திரம் கீதையின் கடைசி ஸ்லோகத்துடன் நிறைவு
அடைகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
63ஆவது மந்திரம் கீதையின் 18-78 ஸ்லோகத்தில் உள்ள ஸ்ரீ , பூதி ஆகிய இரண்டு சொற்களை உடையது சிறப்புடைத்து . இதன் பொருள் ‘வளமும் பெருமையும்’ அல்லது ‘வெற்றியும் பெருமையும்’ என்பதாகும் . பெருமாள் கோவில்களில் பெருமாளின் இரு புறத்திலும் ஸ்ரீ தேவியும் பூ தேவியும் காட்சி தருகிறார்கள்
பூதி, விபூதி என்றால் பெருமை/ வளம் என்று சொல்லலாம்.
இதோ பகவத் கீதையின் கடைசி ஸ்லோகம்; இதை பூமி சூக்த கடைசி மந்திரத்துடன் ஒப்பிடுங்கள்
யத்ர யோகேஸ்வர: கிருஷ்ணோ யத்ர பார்த்த தனுர்தரஹ
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம -18-78
ஸ்ரீர் ,பூதிர், நீதிர் மதிர் என்ற சொல் அழகை நோக்கவும் ; இது கீதை .
இதன் 18-78 பொருள்
எங்கே யோகேஸ்வரனாகிய கிருஷ்ணன் இருக்கிறானோ
எங்கே வில் வீரனாகிய அர்ஜுனன் இருக்கிறானோ ,
அங்கேதான் மங்களமும், வெற்றியும், பெருமையும், உறுதியான நீதியும் இருக்கிறது என்பதே எனது துணிபு என்று சஞ்சயன் சொல்வதே கீதையின் கடைசி ஸ்லோகம் 18-78.
தென் கிழக்காசிய நாடுகளில் கொடிகட்டிப் பறந்த இந்து நாகரீக வம்சாவளியும் ஸ்ரீ விஜய என்றே அழைக்கப்பட்டது .
XXXX
இனிய பேச்சின் மஹிமையை வள்ளுவன், மநு ஆகியோர் புகழ்ந்தது எல்லோருக்கும் தெரியும்
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் – 96
நல்லதே சொன்னால் தருமம் செழிக்கும்; அதர்மம் அழியும் என்பது வள்ளுவன் துணிபு.
பாடல்/ மந்திரம் 58
யத் வதாமி மதுமத் தத் வதாமி யதீக்ஷே தத் வனந்தி மா
த்விஷீ மாநஸ்மி ஜுதி மானவான்யான் ஹன்மி தோதஹ -58
பொருள்
நான் தேனினும் இனிய சொற்களைப் பேசுகிறேன்.என்னைக் கண்டவுடன் மக்கள் அன்புமழை பொழிகிறார்கள் .நான் உடனடியாக துணிந்து முடிவு செய்வேன். என் மீது கோபம் கொள்வோரை நான் ஒ டுக்குவேன் -58
சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம்
ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாதேஷ தர்ம சநாதன: — மனுஸ்ம்ருதி 4-138
உண்மையே பேசு,
இனிமையே பேசு,
இனிமையற்றதை, உண்மையே ஆனாலும், சொல்லாதே.
அதற்காக இனியது என்று கருதி பொய் பேசாதே.
இதுவே எக்காலத்துக்கும் பொருந்தும் சநாதன தர்மம் (இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு) – மனுஸ்மிருதி 4-13
XXX
பாடல்/ மந்திரம் 59
சந்தி வா ஸுரபிஹி ஸ்யோனா கீலாலோக்னீ பயஸ்வதீ
பூமிரதி ப்ரவீ து மே ப்ருதிவீ பயஸா ஸஹ –59
பொருள்
பூமாதேவியின் பால் தரும் ஸ்தனங்கள் அமைதியாகவும், சுகந்தமாகவும், இனிமையாயாகவும் பால் நிறைந்ததாகவும் உளது. அவள் அந்தப் பாலைச் சொறிந்து என்னை ஆசீர்வதிக்கட்டும்- 59
பாடல் 5-9ல் பால் நினைந்தூட்டும் தாயாக பூமியை வருணிக்கிறான் புலவன்
XXX
பாடல்/ மந்திரம் 60
யானமன்வைச்சத்தவிஷா விஸ்வகர்மாந்தரர்ணாவே ரஜஸி ப்ரவிஷ்டாம்
புஜிஷ்யம் அ பாத்ரம் நிஹிதம் குஹா யதாவிர் போகே அபவன் மாத்ரு மத்ப்யஹ- 60
பொருள்
வானக் கடலின் அகத்திலே அவள் ஒளியுடன் நுழைந்தபோது விஸ்வ கர்மன் அவளை அவி உணவுடன் சந்தித்தான்; அப்போது ரகசியமாக வைக்கப்பட்ட பொருள்களுடன் போக பூமியான அவள் மக்களுக்கு ப்ரசன்னமானாள் – 60
விஸ்வ கர்மன் என்பவன் தேவ லோக தச்சன். அவனால் தட்டிக்கொட்டி, வடிவாக உருவாக்கப்பட்டது பூமி. அது வான மண்டலத்தில் ஒளியுடன் வல ம் வருவதை புலவன் காட்டுகிறான்.
XXX
பாடல்/ மந்திரம் 61
த்வமஸ்யாவபனீ ஜனாநாமதிதிஹி காமதுதா பப்ரதானா
யத் த ஊனம் தத் த ஆ பூரயாதி ப்ரஜாபதிஹி ப்ரதமஜா ருதஸ்ய -61
பொருள்
பூமா தேவியே , நீ மக்களுக்கு எல்லாம் தாய்போன்றவள் ; விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் அமுத சுரபி நீ. சனாதன விதிகளுக்குள் இயங்கும், முதலில் பிறந்த பிரஜாபதி , உன்னிடமுள்ள குறைகளை நிறைவு செய்கிறான் ; எது குறைவு படுகிறதோ அதை அளிக்கிறான்.
இந்த மந்திரத்தில் பூமியில் எந்தக் காலத்திலும் குறையே இராது; ஏனெனில் பிரஜாபதி, அதை வளப்படுத்திக்கொண்டே இருப்பான்; குறைந்துபோன பொருள்களை நிறைவு செய்கிறான் என்பார் புலவர்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே-
என்று ஞான சம்பந்தரும் பாடி இருக்கிறார். இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்பது அப்பர் வாக்கு
XXX
பாடல்/ மந்திரம் 62
உபஸ்தாஸ்தே அனமீவா அய க்ஷ்மா அஸ்மப்யம் ஸந்து ப்ருதிவி ப்ரபூதாஹா
தீர்க்க ந ஆயுஹு ப்ரதி புத்யமானா வயம் துப்யம் பலிஹ்ருதஹ ஸ்யாம -62
பொருள்
பூமியே , உன்னிடம் பிறந்தோர் , எங்கள் நலனுக்காக,நோய் நொடியில்லாமல் இருக்கட்டும் . விழிப்புடன் நீண்ட காலம் வாழ்வார்களாகுக! உனக்கு நாங்கள் நண்றிக கடன் செலுத்துவோம்.
எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்; நோய்கள் பறந்தோட வேண்டும் என்கிறது இந்த மந்திரம்; நல்ல சிந்தனை ;
வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.—
என்ற சம்பந்தர் பாடலை நினைவுபடுத்தும் மந்திரம் இது. அந்தணர் முதலான எல்லா ஜாதியினரும், பசுக்கள் முதலான எல்லா ஜீவராசிகளும் நலமே வாழ்க! அதர்மம் அழிக ; மழை பொழிக; ஆட்சி சிறக்க என்பது அவரது வேண்டுகோள்.
XXX
பாடல்/ மந்திரம் 63
பூமே மாதர்னி தேஹி மா பத்ரயா ஸு ப்ரதிஷ்டிதம்
ஸ ம் விதானா திவா கவே ஸ்ரீயாம் மா தேஹி பூத்யாம் -63
பொருள்
தாயே , தரணியே , என்னை உன் ஆசியுடன் உறுதியாக நிற்க வை. புத்திசாலியான நீ என் புகழ் ஓங்கும்படி செய்வாயாக கவிதா ராணியே ஒளிபடைத்த வாழ்வு கிடைக்க அருள் பொழிவாயாகுக -63
இந்த கடைசி மந்திரத்தில்தான் ஸ்ரீ, பூதி இரண்டும் வேண்டப்படுகிறது வைணவர்கள் நெற்றியில் இடுவது ஸ்ரீ சூர்ணம்; சைவர்கள் நெற்றியில் இடுவது விபூதி; அவ்விரண்டும் செல்வத்தையும் புகழையும் தரும் .
.ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிமை பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண் டிரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா
மெய்மை கொண்ட நூலையே =அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா
நொய்மையற்ற சிந்தையாய் வா வா வா
நோய்களற்ற உடலினாய் வா வா வா
என்ற பாரதியின் கருத்து அனைத்தையும் இந்த மந்திரங்களில் கண்டோம். மந்திரத்தை ஒத முடியாதவர்கள் , பாரதி பாடல் வரிகளை தினமும் உரத்த குரலில் ஒருமித்த மனதுடன் படித்தாலே பலன் கிடைக்கும்.
அதர்வண வேத பூமி சூக்தம் நிறைவு
XXXX SUBHAM XXX
tags- அதர்வண வேத, பூமி சூக்தம், நிறைவு, கட்டுரை 18,