கல்லுக்குள் இருக்கும் வடிவங்களை சிற்பியே அறிவார்! (Post.10,805)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,805

Date uploaded in London – –     3 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோகவாசிஷ்டம்

கல்லுக்குள் இருக்கும் வடிவங்களை சிற்பியே அறிவார்!

ச.நாகராஜன்

சித் பூஜை பற்றியும் மூர்த்தி பூஜை பற்றியும் சிவபிரானின் அருளுரையை ராமருக்குக் கூறிய வஷிஷ்ட முனிவர் பின்னர் வில்வப் பழத்தைப் பற்றி விவரிக்கலானார்.

வில்வப் பழத்தின் சாறு மற்ற ஆறு ரஸங்களையும் விட அதிகச் சுவையானது.

அதை மருந்தாகவும் பயன்படுத்த முடியும்.

இந்தப் பழத்தில் எப்படி ருசியும் ஆரோக்கியமும் கலந்திருக்கிறதோ அது போலவே இந்த பிரபஞ்சம் முழுவதும் சுத்த பிரக்ஞையினுள்ளேயே அடங்கி இருக்கிறது.

ஒரு கல்லை எடுத்துக் கொள்வோம். அதனுள் சிற்பி வடிக்கும் எல்லா விதமான வடிவங்களும் அடங்கி உள்ளன.

மிகப் பெரும் சிற்பியானவர் அந்த அனைத்து வடிவங்களையும் அறிவார்.

ஆனால் ஒரு சாதாரண மனிதனுக்கு இவ்வளவு வடிவங்களும் கல்லுக்குள் இருப்பது தெரிவதில்லை!

வடிவங்கள் அனைத்தும் கல்லை விட வேறானவை அல்ல.

அதே போலவே வெவ்வேறான அனுபவங்களைக் கொண்டுள்ள ஆத்மாவும் உலகமும் சித்தில் உள்ளடங்கி உள்ளன.

வெவ்வேறு சிற்பங்கள் கல்லின் சுஷுப்தி நிலையில் உள்ளன.

சிற்பி அவற்றைப் பார்த்து உளியால் செதுக்கும் போது அவை தமது வடிவங்களுடன் வெளிப்படுகின்றன.

இந்த வடிவங்கள் அனைத்தும் எப்படி ஒரு கன்னிப் பெண்ணின் மனதிலே காதலன் உருவம் பதிந்து கிடக்கிறதோ அல்லது வில்வப் பழத்தில் பழச் சாறு அடங்கி இருக்கிறதோ அதே போலவே கல்லில் அடங்கியுள்ளன.

இதைப் போலவே அனைத்து விகாரங்களும் கூட ‘சித்’தில் உள்ளன. பின்னர் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொள்கின்றன. “எல்லாமே அங்கு இருக்கும்” மாயை ஏற்படுத்தப்படுகிறது.

ஆகவே நம்மால் உணரப்படும் அனைத்து வடிவங்களும் பிரம்மன் அல்லது ‘சித்’தில் இருப்பது உணரப்பட வேண்டும்.

தமக்காகவே அவற்றிற்கு ஒரு உண்மைத் தன்மை இல்லை.

அவை நீரில் காணப்படும் பிரதிபிம்பங்கள் போன்றவை.

பொருள்கள், காலம், ஸ்பேஸ் எனப்படும் வெளி,  எண்ணங்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் பிரக்ஞையின் உருவாக்கங்களே.

ஆகவே அவை உண்மையற்றவை என்பதில்லை. அதே சமயம் அவை நிலையானவை என்பதுமில்லை.

கல்லில் இருக்கும் வெளிப்படுத்தப்படாத வடிவங்கள் அவை எனலாம்.

அவை வெறும் தோற்றங்களே!

வசிஷ்டர் மயில் ஒன்றின் முட்டையை உவமையாக எடுத்துக் கூறலானார்.

பல்வேறு விசித்திர வண்ணங்களைக் கொண்ட மயிலின் தோகைகள் இந்த உண்மையை எளிதாக விளக்கி விடும்.

இந்த அற்புதமான வண்ணங்கள் கொண்ட தோகைகள் அனைத்தும் மயிலின் முட்டையினுள்ளேயே உள்ளன. எல்லா வண்ணங்களும் அதிலேயே உள்ளன.

அதைப் போலவே, ‘சித்’தானது பல்வேறு உலகங்களையும் அதன் வெவ்வேறான வேறுபாடுகளையும் கொண்டுள்ளது.

இப்படி விவரித்த வசிஷ்டர், ராமரிடம் அனைத்தும் பிரம்மனே என்பதை உணர்வாயாக என்று கூறினார்.

இன்னொரு உதாரணத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.

நூற்றுக் கணக்கான வடிவங்கள் கொண்ட மண் பானைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே மண்ணினால் உருவானவையே.

அதைப் போலவே ஆத்மனும் ப்ரக்ருதியும் வேறல்ல என்பதை உணர வேண்டும்.

எப்படி மண் ஆனது குடமாகத் தோன்றுகிறதோ அதே போலவே ஆத்மனானது ப்ரக்ருதியாகத் தோன்றுகிறது.

வெளியில் தோற்றமளிக்கு வேறுபாடுகளைக் கண்டு ஒருவன் ஏமாந்து விடக் கூடாது.

அனைத்திற்குள்ளும் அடங்கியுள்ள ‘உண்மைத் தன்மையை’ ஒருவன் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த விளக்கத்தைக் கேட்ட ராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

புன்முறுவல் பூத்த அவர் தனது அடுத்த சந்தேகத்தை வசிஷ்டரிடம் கேட்க ஆரம்பித்தார்.

***

tags-கல் , சிற்பி, யோகவாசிஷ்டம்

Leave a comment

Leave a comment