ஒரு பாடலில் ஒன்பது பாடல்கள்! (Post No.10,834)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,834

Date uploaded in London – –     12 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

ஒரு பாடலில் ஒன்பது பாடல்கள் (நவ பங்கி)

ச.நாகராஜன்

ஒரு பாடலில் ஒன்பது பாடல்கள் வருமாறு அமைப்பது கவித்திறனின் உச்ச கட்ட நிகழ்வாகும்.

இப்படி ஒன்பது பாடல்கள் ஒரே பாடலில் அமைவது நவ பங்கி என்று அழைக்கப்படுகிறது.

இதைச் சாதித்துக் காட்டியவர் இராமச்சந்த்ர கவிராயர்.

இவர் மயிலாசல முருகன் மீது பாடிய ஒரு பாடல் அபூர்வமான பாடலாகும்.

அரிமரு காகரு ணாலய னேதிட வாரணனே போதன்

     அரியிமை யோர்சூழ் புனிதா புலவட ரயிலவர் பொற்கரனே

கரிமுக னேயசகோ தரனே படிகா ரணனே நாதங்

     கதியுற வேவா னவனே நலமிகு கயிலை யனற்குருவே

குரவலர் நீபமணிப் புயனே வடிகூ ரமுதே யோதுங்

            குருமணி சேர்மார் பினனே யுலகருள் குயிலுக வுத்தமனே

மரகத மாமயில் வாகனனே கொடி வாரணனே கோதின்

     மதியக மேவாழ் குமரா குலவிய மயிலம லைக்குகனே

பாடலைப் பிரித்துப் பார்ப்போம்:

அரிமருகா கருணாலயனே – திட ஆரணனே

போதன்னரியிமையோர் சூழ் புனிதா – புலவடர் – அயிலமர் -பொற்கரனே

கரிமுகனேய சகோதரனே படி -காரணனே

நாதங்கதியுறவே வானவனே- நலமிகு -கயிலை யனற்குருவே

குரவலர் நீபமணிப்புயனே- வடிகூர் அமுதே

ஓதுங் குருமணி சேர் – மார்பினனே – உலகருள் – குயிலுதவுத்தமனே

மரகத மாமயில்வாகனனே – கொடி – வாரணனே

கோதின் மதியகமே வாழ் குமரா – குலவி – மயிலமலைக் குகனே

நவபங்கி எனப்படும் ஒன்பது பாடல்களின் பிரிவை இப்போது பார்ப்போம்.

அதாவது ஒரே பாடல் எப்படி ஒன்பது பாடல்களாக விரிகிறது என்பதைப் பார்ப்போம்.

1 சிந்தடி வஞ்சி விருத்தம்

அருமருகா கருணாலயனே, கரிமுகனே யசகோதரனே,

குரவலர் நீப மணிப்புயனே, மரகதமாமயில் வாகனனே

2. சிந்தடி வஞ்சி விருத்தம்

புலவடரயிலமர் பொறகரனே, நலமிகு கயிலைய னற்குருவே,

உலகருள் குயிலுத வுத்தமனே, குலவியமயில மலைக்குகனே.

3. கட்டளைக் கலித்துறை

அரிமரு காகரு ணாலய னேதிட வாரணனே

கரிமுக னேய சகோதர னேபடி காரணனே

குரவலர் நீப மணிப்புய னே வடி கூரமுதே

மரகத மாமயில் வாகன னேகொடி வாரணனே

4.கொச்சகம்

ஆரணனே போத னரியிமையோர் சூழ்புனிதா

காரணனே நாதங் கதியுறவே வானவனே

கூரமுதே யாதுங் குருமணிசேர் மார்பினனே

வாரணனே கோதின் மதியகமே வாழ் குமரா

5. சந்த விருத்தம்

போதன்ன ரியிமையோர் சூழ்புனிதா புலவட ரயிலமர் பொற்கரனே

நாதங் கதியுறவே வானவனே நலமிகு கயிலைய னற்குருவே

ஓதுங் குருமணி சேர்மாபினனே யுலகருள் குயிலுத வுத்தமனே

கோதின் மதியகமே வாழ்குமரா குலவியமயில மலைக்குகனே

6. கலி விருத்தம்

போதன் னரியிமை யோர் சூழ் புனிதா

நாதங் கதியுற வேவா னவனே

ஓதுங் குருமணி சேர்மார் பினனே

கோதின்  மதியக மேவாழ் குமரா

7. குறளடி வஞ்சி விருத்தம்

அபிலமர் பொற்கரனே, கயிலைய னற்குருவே

குயிலுத வுத்தமனே, மயில மலைக்குகனே

8. இதுவுமது (குறளடி வஞ்சி விருத்தம்)

திட வாரணனே, படி காரணனே,

வடி கூரமுதே, கொடிவா ரணனே

9. வெண்பா

ஆரணனே போதன் னரியிமையோர் சூழ்புனிதா

கூரமுதே யோதுங் குருமணிசேர் – மார்பினனே

வாரணனே கோதில் மதியகமே வாழ்குமரா

காரணனே நாதங் கதி

இப்போது பாடலின் பொருளைப் பார்ப்போம்:

அரிமருகா – திருமாலுக்கு மருமகனே

கருணாலயனே – கருணைக்கு இருப்பிடமானவனே

திட ஆரணனே – எல்லோருக்கும் த்ருதரப்ரமாணமாகிய வேதப்ரதிபாதயனே

போதன் – பிரமனும்

அரி – திருமாலும்

இமையோர் – மற்ற தேவர்களும்

சூழ் – சூழ்ந்து வணங்குகின்ற

புனிதா – பரிசுத்தமானவனே

புலவு அடர் அயில் – மாமிசம் பொருந்திய வேலாயுதம்

அமர் -பொருந்திய

பொன்கரனே – பொன்போன்ற அழகிய கரத்தை உடையவனே

கரிமுகன் – யானை முகத்தோனாகிய விநாயகனுக்கு

நேய சகோதரனே – அன்புள்ள சகோதரனே

படி காரணனே – உலக காரணனே

நாதம் கதி உறவே – நாத வீடாகிய சுற்றமே

வானவனே – தேவனே

நலம் மிகு – நன்மை மிக்க

கயிலையன் – கைலாயபதியாகிய  சிவபிரானுக்கு

நல் குருவே – சிறந்த குருவே

குரவு அலர் – குரா மலர் மாலையையும்

நீபம் – கடப்ப மலை மாலையையும் அணிந்த

மணி புயனே – அழகிய தோள்களை உடையவனே

வடி கூர் அமுதே – தெளிவு மிகுந்த அமுதமே

ஓதும் குருமணி சேர் – சொல்லப்பட்ட நிறமுள்ள மணி மாலைகள் பொருந்திய

மார்பினனே – திருமார்பை உடையவனே

உலகு அருள் – உலகங்களை எல்லாம் ஈன்ற

குயில் – குயில் போல்பவளாகிய உமாதேவி

உதவு – பெற்ற

உத்தமனே – நல்லவனே

மரகதம் – மரகத மணி போன்ற

மா – பெரிய

மயில்வாகனனே – மயிலை வாகனமாக உடையவனே

கொடி வாரணனே – கோழிக் கொடியை உடையவனே

கோது இல் – குற்றமில்லாத

மதி அகம் – (அன்பர்களது)  அறிவில்

வாழ் – வாழ்கின்ற

குமரா – குமரனே

குலவிய – விளங்கிய

மயிலமலை – மயிலாசலத்திலுள்ள

குகனே – குகனே

எவ்வளவு பொருள் பொதிந்த பாடல்!

எத்தனை சந்த வகைகள்!

இனிய சொற்கள்!

ரசித்துப் படிக்க வேண்டும் ஒரு பாடலை – இல்லை இல்லை ஒன்பது பாடல்களை!

***

 tags —  ஒன்பது பாடல்கள் ,ஒரே பாடலில்,   நவ பங்கி , இராமச்சந்த்ர கவிராயர்.

Leave a comment

Leave a comment