நிரோட்டம் – 1 (Post No.10,847)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,847

Date uploaded in London – –     15 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

நிரோட்டம் – 1

ச.நாகராஜன்

நிரோட்டம் என்பது ஒரு வகை சித்திர கவி அமைப்பாகும்.

உ, ஊ,ஒ,ஓ,ஔ,ப, ம, வ ஆகிய எழுத்துக்கள் வராமல் பாடப்படும் செய்யுள் நிரோட்டம் எனப்படும்.

இதை நிரோட்யம் என்றும் கூறுவர்.

நிர் என்றால் இன்மை என்று பொருள்.

ஒட்டியம் எனால் ஒட்ட சம்பந்தம் உடையது. ஒட்டம் என்றால் உதடு.

சுருக்கமாகச் சொல்லப் போனால் உதடு ஒட்டாமல் சொல்லக் கூடிய பாடல்கள் நிரோட்டப் பாடல்கள்.

இதற்கு உதாரணமாக வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் ‘சித்திர கவி விளக்கம்’ என்ற தனது நூலில் தரும் பாடல் இது:

சீலத்தான் ஞானத்தாற் றேற்றத்தாற் சென்றகன்ற

காலத்தா லாராத காதலான் – ஞாலத்தர்

இச்சிக்கச் சால சிறந்தடி யேற்கினிதாங்

கச்சிக்கச் சாலைக் கனி

இதன் பொருள்;

சீலத்தான் – ஒழுக்கத்தோடும்

ஞானத்தான் – ஞானத்தோடும்

தேற்றத்தான் – மனத்தெளிவாகிய சித்த சுத்தியோடும்

சென்று அகன்ற காலத்தான் – மிக நீண்ட காலத்தோடும்

ஆராத காதலான் – அடக்க முடியாத பக்தியோடும்

ஞாலத்தார் – இந்தப் பூவுலகில் உள்ளவர்கள்

இச்சிக்க – விரும்பி வணங்கவும்

சால சிறந்து – மனம் வாக்குகளுக்கு எட்டாமல் மிகவும் பெரிதாக விளங்கி

அடியேற்கு இனிதாம் – எளியேனாகிய எனக்குப் பேரானந்தம் அளிப்பதாகும்

கச்சி கச்சாலை கனி – காஞ்சீபுரத்தில் திருக்கச்சாலை என்ற இடத்தில் உள்ள கோவிலில் எழுந்தருளி இருக்கும் கனி போன்ற கடவுளாகிய சிவபெருமான்

(எனக்கு அருள் புரிவாராக!)

ஒழுக்க ஞான சித்த சுத்திகளோடு நீண்ட காலம் ஆரா அன்பு செய்த ஞாலத்தார்க்கு எட்டாது பெரிதும் சிறந்திருந்தும் அடியேனுக்கு எளிதாய் இன்பம் பயப்பது கச்சாலைக் கனி என்பது திரண்ட அர்த்தமாகும்.

கலாவது நாடகம் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியால் இயற்றப்பட்ட ஒரு நாடகம்.

அதில் ஒரு பாடலை அவர் நிரோட்டப் பாடலாக அமைத்துள்ளார்.

அதையும் எடுத்துக்காட்டாக தனது நூலில் தருகிறார்:

செய்யா யினிய நலஞ் சேரரசர் சீராளா

கையா லெனைத்தழீ இக் காதலியே யென்றழைத்த

லையா தகையேய்ந் தழகார்ந்தா யென்றைக்கே

நையாநிற் கின்றே னனி

நலம் – அழகு, நன்மை

சீராளன் – சிறப்பினை ஆள்பவன்

தழீஇ – தழுவி

தகை – பெருந்தன்மை

ஏய்ந்து – பொருந்தி

அழகு ஆர்ந்தாய் – அழகு நிறைந்தவனே

நனி – பெரிதும்

அழைத்தல் என்றைக்கு, நனி நையா நிற்கின்றேன் என்று கூட்டிப் பொருள் காணல் வேண்டும்.

இதற்கான சூத்திரம் :

“உ, ஊ, ஒ, ஓ, ஔ, ப, ம, வ, விவற்றியைபு,

சேரா நிரோட்டத் திறத்து’

மாறனலங்காரம் நிரோட்டியம் என்று குறிப்பிட்டுத் தரும் விளக்கம் : இதழ்குவிந்தியையாதியல்வது நிரோட்டியம்.

அதரமுமதரமும் குவியாது கூடாது நடப்பது நிரோட்டியம் என்றவாறு.

எடுத்துக்காட்டாக மாறனலங்காரம் தரும் செய்யுள்:-

நாதனரங்கநகர்நாராயணனேறைசே

சீதநளினத்தினிற்சிறந்த – காதற்

கனிநானிலக்கிழத்திகட்கினியகாந்தித்

தனிநாயகன்றாள் சரண்

இதில்,

நறைசேர் சீத நளினத்தினிற்சிறந்த காதற் கனி என்பது திருமகளைக் குறிக்கும்.

நானிலக் கிழத்தி என்பது பூமி தேவியைக் குறிக்கும்

கட்கினிய காந்தி என்பதன் பொருள் கண்ணுக்கு விருப்பத்தைத் தரும் அழகு என்பதாகும்.

துறை – கடவுள் வணக்கம்.

**

tags- நிரோட்டம், உதடு, வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்,

Leave a comment

2 Comments

  1. Kannan B's avatar

    Kannan B

     /  April 15, 2022

    நன்று. இவ்வகை அணி பாடல்களில் மட்டுமல்ல உரைநடை இலக்கியத்தலும் மகாகவி தண்டின் தனது தசகுமார சரித்திரத்தில் “ப” வர்க்க 5 எழுத்துகளும் வராமல் ,ஒரு ராஜகுமாரன் தன் விருத்தாந்தத்தைச் சொல்வதாக அமைத்துள்ளார். ஏனெனில் சல்லாபத்தின் போது காதலி உதட்டைப் புண்படுத்தி விட்டாளாம்!
    கண்ணன்
    தில்லி

  2. santhanam nagarajan's avatar

    santhanam nagarajan

     /  April 17, 2022

    அருமையான கருத்து! நன்றி!! இப்படி சம்ஸ்கிருதத்தில் உள்ள நிரோட்ட செய்யுள்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதலாமே!

Leave a comment