யாருக்கு எத்தனை நமஸ்காரம்? (Post No10,961)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,961

Date uploaded in London – –     10 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

யாருக்கு எத்தனை நமஸ்காரம்?

ச.நாகராஜன்

ஒவ்வொரு விஷயத்திற்கும் விளக்கமும் விதியும் நம் முன்னோரால் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன.

நமஸ்கார விதிகளும் அப்படியே!

 சிவனை எப்படி நமஸ்கரிக்க வேண்டும்?

“அம்பிகையோடு கூடியவரும், கணங்களோடு கூடியவரும், விநாயக, குமாரர்களோடு கூடியவரும், நந்தியோடு கூடியவரும், கங்கையை உடையவரும், ரிஷபத்தை உடையவருமாகிய சிவபிரான் பொருட்டு நமஸ்கரிக்கிறேன்.”

“தாராநாயகனை (சந்திரனை) தலையில் ஆபரணமாகக் கொண்டவரும், ஜகங்களுக்கு ஆதாரமாக உள்ளவரும், மேகங்களின் நிறமுள்ள கழுத்தை உடையவரும், கிரிஜையின் ஸங்கத்தையே சிருங்காரமாகக் கொண்டவரும், நதியினால் (கங்கையினால்) சிரோ பூஷணம் உடையவரும், நேத்திரத்தினால் திலகம் உடையவரும், நாராயணனால் பாணத்தை உடையவரும், நாகங்களால் கங்கணம் என்னும் ஆபரணத்தை உடையவரும், மலையையே இல்லமாகக் கொண்டவரும் ஆகிய நாதன் பொருட்டு இந்த நமஸ்காரத்தைச் செய்கிறேன்.”

இப்படிப்பட்ட சிவரஹஸ்யம் உள்ளிட்ட நூல்களில் உள்ள ஸ்லோகங்களைச் சொல்லியவாறே மூன்று முறை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும்.

சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் என்ன?

கால்கள் இரண்டு, கைகள் இரண்டு, மார்பு, முகம், ஆகியவை பூமியில் நன்றாகப் படும்படியாகவும், மனம், புத்தி ஆகிய இரண்டும் வேறு விஷயங்களில் செல்லாமலும், செய்யப்படும் நமஸ்காரமே சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

நந்தி பீடத்தின் அடியில் நந்தியின் முகத்திற்கு முன்னால் வடக்கு முகமாக நோக்கி, கர்ப்பகிருஹத்திலுள்ள ஸ்வாமியை உத்தேசித்து சாஷ்டாங்க நமஸ்காரத்தை மேலே கூறியவாறு செய்ய வேண்டும்.

ஸ்லோகங்களை உச்சரித்தவாறே மூன்று முறை செய்த பின்னர் இடது புறமாக பிரதக்ஷணமாகச் சென்று விநாயகரை விநாயக ஸ்லோகம் சொல்லியவாறே ஒரு நமஸ்காரம் செய்ய வேண்டும். விநாயகருக்கு ஒரு நமஸ்காரமே விதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் விநாயகரை பிரதக்ஷணமாகச் சுற்றி, சுப்ரமண்யரை மும்முறை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும். பின்னர் பிரகாரத்துடன் வந்து ஆலயத்துக்குள் சென்று சிவபெருமான கர்ப்பகிருஹத்தில் நின்று தரிசித்து ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டும். ஏராளமான துதிகள் உள்ளன. அவற்றில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

பிறகு விபூதி ப்ரஸாதத்தைப் பெற்றுக் கொண்டு உட்பிரகாரத்தில் பிரதக்ஷணமாகச் செல்ல வேண்டும்.

தக்ஷிணாமூர்த்திக்கு எதிரில் பஞ்சாக்ஷரத்தை ஜபிக்க வேண்டும்.

பிறகு பிரதக்ஷணமாக வந்து அம்பிகையின் சந்நிதி வந்து ஸ்துதி பூர்வமாக அம்பிகையின் எதிரில் நின்று நமஸ்கரிக்கும் போது கால் பக்கத்தில் தேவதா பிரதிபிம்பங்கள் இல்லாத நிலையில்  சாஷ்டாங்க நமஸ்காரம் மூன்று முறைக்குக் குறையாமல் செய்ய வேண்டும். பிறகு ப்ரஸாதம் பெற்றுத் திரும்ப வேண்டும்.

சிவாலயங்களில் மும்முறையோ அல்லது பதினொரு முறையோ பிரதக்ஷணமாக வெளி பிரகாரத்தில் வலம் வர வேண்டும்.

வெளிப் பிரகாரத்தில் உள்ள சண்டீஸ்வரரிடம்  சண்டீஸ்வர ஸ்துதியைச் சொல்லி, வெளி வந்து கால் பக்கத்தில் தேவதா மூர்த்திகள் இல்லாத மண்டபம் அடைந்து நமஸ்காரத்தை மும்முறை செய்து நந்தியின் கொம்புகள் இரண்டுக்கும் நடுவின் வழியாக கர்ப்பக்ருஹத்தில் உள்ள ஸ்வாமியின் வடிவத்தை நோக்கிக் கொண்டு பிரார்த்தித்து திரும்ப வேண்டும்.

இதுவே சிவ தரிசன விதியாகும்.

சிவாலய தரிசனம் செய்த பிறகு விஷ்ணு ஆலய தரிசனத்தை இரவில் மேற்கொள்ள வேண்டும்.

விஷ்ணுவாலய தரிசனம் செய்த பிறகு சிவாலய தரிசனம் காலையில் செய்ய வேண்டும்.

இப்படி நமஸ்கார விதிகள், தரிசன விதிகள் நமது அற நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

***

Leave a comment

Leave a comment