மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67 (Post No.11,102)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,102

Date uploaded in London – –    14 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67

பாரதி புதையல் – 1

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் படைப்புகள் பலவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வெளிக் கொணரப் பாடுபட்டவர்களுள் மிக முக்கியமானவர்

ரா.அ.பத்மநாபன்.

1958 நவம்பர் மாதம் அமுத நிலையம் பிரைவேட் லிமிடட் வாயிலாக பாரதி புதையல் – முதல் பாகம் என்ற நூலில் பாரதியாரின் வெளிவராத 11 கவிதைகள், 10 கதைகள் மற்றும் 8 கட்டுரைகள் ஆகியவற்றைத் தொகுத்து அவர் வெளியிட்டார்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறிய அறிமுக உரையையும் அவர் தந்துள்ளார்.

சுதந்திர தேவியிடம் முறையீடு என்ற கட்டுரையில் ‘அன்னாயிங்குனை’ என்று தொடங்கும் பாரதியாரின் பாடல் – 1909ஆம் ஆண்டு துருக்கியில் முடியரசை ஒழித்துக் கட்டி குடியரசு நிறுவியதை வரவேற்று அவர் பாடிய பாடல் – இடம் பெறுகிறது.

அடுத்து ‘இந்தத் தெய்வம் நமக்கு அநுகூலம் இனிக் கவலைக் கிடமில்லை’ என்ற பாடல் மண்டயம் ஶ்ரீநிவாஸாச்சார்யாரின் புதல்வி யதுகிரி அம்மாள் எழுதி வைத்த கைப்பிரதியிலிருந்து கிடைத்த பாடல் ஆகும்.

அருவி போலக் கவி பொழிய என்று தொடங்கும் ‘குருவிப் பாட்டு’ 1909ஆம் ஆண்டு ஜனவரி மாதல் முதல் தேதி இளைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் பிள்ளையின் வேண்டுகோளுக்கிணங்க பாரதியார் இயற்றிய பாடல் ஆகும்.

எட்டயபுரத்தில் எட்டயபுர அரசர், அண்ணாமலை ரெட்டியாரின் காவடி சிந்துகளைப் புகழ்ந்து பேச அன்று மாலையே ‘பச்சைத்  திருமயில் வீரன்’ என்று தான் இயற்றிய சிந்து பாடலைப் பாடிக் காட்டி  மன்னரின் பாராட்டுதலைப் பெற்றார் பாரதியார்.

அடுத்து ‘செல்வத்துட் பிறந்தனமா’ என்ற பாடல் பாரதியார் பாடிய பாடலாக 13-4-1958 கல்கி இதழில் எல். கிருஷ்ணஸ்வாமி அவர்கள் வெளியிட்ட பாடலாகும்.

பிரெஞ்சு தேசீய கீதமான “லா மார்ஸெலேஸ்’ என்ற கீதத்தை

‘அன்னை நன்னாட்டின்’ என்று தொடங்கி பாரதியார் தமிழ்ப் படுத்திய கவிதையை மண்டயத்தார் குடும்பத்தைச் சேர்ந்த ரங்கநாயகி அம்மாள் பாதுகாத்து வைத்திருந்தார்; அந்தக் கவிதை அடுத்து இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.

மணிமுத்துப் புலவர் என்பவர் எட்டயபுரம் புலவர்களில் ஒருவ்ர். அவரைப் பாராட்டி பாரதியார் இயற்றிய ஒரு வெண்பா அடுத்து இடம் பெறுகிறது. இதை இப்போது வரும் நூல்களில் காண முடிவதில்லை.

அடுத்து வந்தே மாதரம் பாடலில், இடம் பெறாத ஒரு சரணத்தை இங்கு பார்க்கிறோம்.

தேவி நம் பாரத பூமி – எங்கள்

      தீமைகள் யாவையுந் தீர்த்தருள் செய்வால்

ஆவியுடல் பொருள் மூன்றும் – அந்த

      அன்னை பொற்றாளினுக்குக் கர்ப்பிதமாக்கி (வந்தே)

என்ற ஆறாவது சரணம் நம்மை மகிழ்விக்கிறது.

பத்தாவது பாடலாக இடம் பெறுவது ‘காலனுக்கு உரைத்தல்’ என்ற பாடலாகும். 1919இல் டிஸம்பர் மாதம் சுதேச மித்திரன் வருஷ அனுபந்தத்தில் இடம் பெற்ற பாடலின் முழு வடிவத்தை இங்கு காண்கிறோம்.

இறுதிப் பாடலாக, ‘இறவாமை’ என்று பாரதி பாடிய தாயுமானவர் வாழ்த்துப் பாவைக் காண்கிறோம்.

அடுத்து, பாரதியாரின் கதைகளில் பஞ்ச கோணக் கோட்டை, பாம்புக் கதை, காக்கை இலக்கணம் கற்ற கதை, பூலோக ரம்பை, மன்மத ராணி வேணு முதலி, வேணு முதலி விசித்திரம், ஆவணி அவிட்டம், பிராயச் சித்தம், கதவு ஆகிய பாரதியாரின் சுவையான பத்து படைப்புகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன.

கட்டுரைகள் பகுதியில் ‘தென்றலுடன் பிறந்த பாஷை’ என்ற தலைப்பில் 1906ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியா இதழில் பாரதியார் எழுதிய ஒரு அற்புதமான கட்டுரை இடம் பெறுகிறது.

பாரதியார் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வர முயன்றார்.  ‘தமிழில் எழுத்துக் குறை’ என்ற அவரது கட்டுரை தமிழில் உச்சரிப்புக்குத் தக எழுத்துக்கள் இல்லாத குறையைச் சுட்டிக் காட்டும் ஒன்றாகும்.

‘தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்’ என்ற கட்டுரையில் தமிழின் அருமை பெருமைகளையும் கம்ப ராமாயணத்தின் பெருமையையும் பாரதியார் விளக்குகிறார். ‘தமிழ் நாட்டில் நாடகம்’ என்ற சிறிய கட்டுரையும், அதைத் தொடர்ந்து இந்தியாவுக்குப் பொது பாஷை என்ற தலைப்பில் உள்ள கட்டுரையும் இடம் பெறுகிறது.

சம்ஸ்கிருத பாஷையை இந்தியாவின் பொது மொழியாகக் கொள்ளலாம் என்ற கொள்கையை ஆதரித்து அவர் எழுதியுள்ள கட்டுரையே இந்தியாவுக்கு பொது பாஷை!

அடுத்து ‘நமது கல்வி முறையிலே ஒரு பெருங்குறை’ என்ற கட்டுரையில் நமது உபநிஷத்துக்கள் பற்றி பாதிரிகள் சொல்லி இருக்கும் அபிப்ராயங்கள் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டு விடுவோமானால் நமது நாட்டிற்கு நாமே பரம் சத்துருக்களாக முடிவோம் என்பதை அழகுறச் சுட்டிக் காட்டுகிறார்.

மாதர் என்ற பகுதியில் ‘நாகரிக வளர்ச்சியிலே ஸ்திரீகளுக்குரிய ஸ்தானம்’, ‘ருதுமதி விவாஹம்’ ஆகிய கட்டுரைகள் உள்ளன.

அருமையான இந்தப் புதையலில் உள்ளவை அனைத்தும் அடங்கிய விரிவான முற்றுப் பெற்ற பாரதியாரின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் உள்ளிட்ட படைப்புகள் வெளி வர வேண்டும் என்பதே பாரதி ஆர்வலர்களின் ஆசை.

காலம் கனிந்தால் பாரதியாரை முற்றுமாகக் காண முடியும்!

பாரதி அன்பர்களின் பாரதி நூலகத்தில் நிச்சயம் இடம் பெற வேண்டிய நூல் இது!

***

tags- பாரதி நூல் 67

Leave a comment

Leave a comment