ஓஷோவின் குட்டிக் கதைகள்! (Post No.11,129)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,129

Date uploaded in London – –    23 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஓஷோவின் குட்டிக் கதைகள்!

ச.நாகராஜன்

ஓஷோவின் குட்டிக் கதைகள் சிரிக்க வைக்கும்; சிந்திக்க வைக்கும்; சிறந்த பல உண்மைகளைச் சொல்லும்.

அவற்றில் நான்கு கதைகளைப் பார்ப்போம்.

1

ஒரு ஜென் மாஸ்டருக்கு இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவருமே புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இருவரும் மாஸ்டரிடம் புகை பிடிக்க அனுமதி வாங்க எண்ணம் கொண்டார்கள்.

“நாளை நிச்சயம்  மாஸ்டரிடம் அனுமதி வாங்கப் போகிறேன்” என்றான் முதலாம் சீடன்.

“நானும் தான்” என்றான் இரண்டாவது சீடன்.

மறு நாள் தோட்டத்தில் முதல் சீடனைப் பார்த்த இரண்டாமவன் மிக்க கோபம் கொண்டான்.

ஏனெனில் அவன் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.

“என்ன, அனுமதி வாங்கினாயா, புகை பிடிக்க, என்னை புகை பிடிக்கக் கூடாது என்றல்லவா சொன்னார்” என்றான் இரண்டாம் சீடன்.

“இல்லை, எனக்கு அனுமதி உண்டு” என்றான் அவன்.

“அது, எப்படி உனக்கு மட்டும் அனுமதி?”

இப்போது விழித்துக் கொண்ட முதல் சீடன், “ நீ என்னவென்று அவரிடம் கேட்டாய், சொல், பார்ப்போம்!”

“தியானத்தின் போது புகை பிடிக்கலாமா?” என்று கேட்டேன்.

“அது தான் நீ செய்த தவறு. நான் புகை பிடித்தாலும் தியானம் செய்யலாமா? என்று கேட்டேன். தாரளமாக என்றார். இதோ புகை பிடிக்கிறேன்!”

ஒரு விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரு வெற்று கான்வாஸ். அதை நல்ல ஒரு கலை நோக்குடன் அணுகி ஓவியங்களை வரைய வேண்டும்!

2

ஒரு சூஃபி சாது மன்னன் ஒருவனின் அரண்மனைக்குச் சென்றார்.

அவரை யாராலும் தடுக்க  முடியவில்லை. நேராக மன்னன் இருக்குமிடம் வரைக்கும் அவர் சென்று விட்டார்.

“நீர் யார்?” என்று கேட்டான் மன்னன்.

“நான் ஒரு வழிப்போக்கன். இன்று ஒரு நாள் மட்டும் இந்த சத்திரத்தில் தங்க விருப்பம் கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் சாது.

கோபம் கொண்ட மன்னன், “இது சத்திரம் இல்லை. எனது அரண்மனை” என்றான்.

“சரி, இந்த அரண்மனை உன்னுடையது என்கிறாயே? உனது அப்பா எங்கே” என்று கேட்டார் சாது.

மன்னன் : “அவர் இறந்து விட்டார்!”

சாது : “அவருக்கு முன்னால் இங்கு யார் இருந்தார்?”

“எனது தாத்தா இருந்தார்!”

“அவருக்கும் முன்னால்…?”

“எனது தாத்தாவின் அப்பா!”

“ஓ! இப்படி ஒவ்வொருவர் சில காலம் இருந்து போன இந்த இடம் சத்திரம் இல்லாமல் வேறு என்னவாம்?”

மன்னன் வெட்கித் தலை குனிந்தான்.

3

நஸ்ருத்தீன் ஷாவிடம் ஒருவன் வந்து ஒரு வாத்தைக் கொடுத்தான்.

அதை நன்கு வேக வைத்து சூப் தயாரித்துத் தந்தார் ஷா.

அவன் போய் அடுத்த நாள் அவனது நண்பன் என்று வந்த ஒருவன் சூப் கேட்டான்.

அவனுக்கு சூப்பைத் தயாரித்துத் தந்தார் அவர்.

அடுத்த நாள் அந்த நண்பனுக்கு நண்பன் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவன் சூப் கேட்டான்.

அவனுக்கும் சூப் செய்து தந்தார் ஷா.

அதற்கு அடுத்த நாள் அந்த நண்பனுக்கு நண்பனுக்கு நண்பன் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவன் சூப் கேட்டான்.

இது தொடர்ந்தது.

ஒரு நாள் அவரிடம் வந்து நண்பனுக்கு நண்பன்….. என்ற தொடர்கதையைச் சொல்லி சூப் கேட்டான் ஒருவன்.

நஸ்ருத்தீன் பார்த்தார். நல்ல தண்ணீரை சுடச்சுட சூடாக்கி அவனிடம் தந்தார்.

“ஹூம்! இது சூப் இல்லையே வெறும் வெந்நீர் போல அல்லவா இருக்கிறது!” என்றான் அவன்.

“இது சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்புக்கு சூப்” என்று சொல்லி முடித்தார் ஷா.

வந்தவனைக் காணோம். ஓடி விட்டான்!

4

ரின் ஜாய் என்ற ஜென் மாஸ்டரின் சீடர் ஒரு நாள் ஒரு ஆலமரத்தடியின் கீழ் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

பல மாஸ்டர்களின் சீடரும் அங்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒருவன் தனது மாஸ்டர் செய்த அற்புதங்களை விவரித்தான்.

அதற்கு இன்னொருவன் தனது மாஸ்டர் செய்த அற்புதங்களை விவரித்தான். ஒவ்வொருவரும் இப்படி அவரவர் மாஸ்டர் செய்த அற்புதங்களை விவரிக்கும் போது ரின் ஜாயின் சீடர் மட்டும் பேசாமல் இருந்தார்.

“என்ன, உனது மாஸ்டர் ஒரு அற்புதமும் செய்யவில்லையா?” என்று கேலியாக அனைவரும் அவரைக் கேட்டனர்.

“ எனது மாஸ்டர் ஒரு அற்புதமும் செய்யவில்லை. அது தான் அவர் செய்யும் அற்புதம்” என்றார் ரின் ஜாயின் சீடர்.

அனைவரும் அசந்து போய் அதில் இருக்கும் உண்மையை அறிந்து கொண்டனர்.

எல்லா அற்புதங்களையும் ஆற்ற வல்ல ஒருவராக இருப்பினும் கூட, அதைச் செய்து விளம்பரம் தேடாமல் இருப்பதே பெரிய அற்புதம் என்பதை ரின் ஜாயின் சீடர் விளக்கியதை அவர்களால் உணர முடிந்தது.

***

புத்தக அறிமுகம் – 6

அதிசய மஹாகவி பாரதியார்!

ச.நாகராஜன்

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

முதல் பாகம் – பாரதியார் பா நலம்

1. பாரதி தரிசனம்

2. பாரதி 100!

3. பார் போற்றும் மகாகவி!

4. அரவிந்தரின் கண்களில் அரும்பிய நீர்!

இரண்டாம் பாகம் – பாரதியாரின் இசை, வானவியல் அறிவு

5. பாரதியாரும் வானசாத்திரமும்! – 1

6. பாரதியாரும் வானசாத்திரமும்! – 2

7. பாரதியாரும் வானசாத்திரமும்! – 3

8. பாரதியாரின் ராகங்கள்! – 1

9. பாரதியாரின் ராகங்கள்! – 2

10. பாரதியாரின் ராகங்கள்! – 3

11. திரைப்படங்களில் பாரதியார்! – 1

12. திரைப்படங்களில் பாரதியார்! – 2

13. மஹாகவிக்குச் செய்யும் மஹத்தான துரோகம்!

14. பாரதியார் கவசம் அணியுங்கள்!

மூன்றாம் பாகம் மத – நல்லிணக்கமும் மஹாகவியும்

15. பாரதியார் போற்றும் ஒரு மகமதிய ஸாது: கம்பளி ஸ்வாமி!

16. பாரதியார் கண்ட அகண்ட பாரதம்!

17. தமிழ் அபிமானி பற்றி பாரதியாரின் விளக்கம்!

18. தீபாவளி பண்டிகை பற்றி பாரதியார்!

19. முஸ்லீம்கள் யார்? ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமை பற்றி பாரதியார்!

20. பாரதியாரின் சத்ரபதி சிவாஜி கவிதை – 1

21. பாரதியாரின் சத்ரபதி சிவாஜி கவிதை! – 2

22.பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்!

நான்காம் பாகம் – கவிதாஞ்சலி

23. பாட்டிற்கோ பாரதியே தான்!

24. அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

25. முடிவுரை

*

இந்த நூலுக்கு கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் புதல்வர் திரு சுப்ரமணியன் சீதாராம் அவர்கள் அணிந்துரை தந்து என்னை கௌரவித்துள்ளார். அந்த அணிந்துரை இதோ:

அணிந்துரை

‘சிவமென்னும் செம்பொருளே தமிழாய் வந்த

சிறப்பிதனைச் சிந்தையிலே சேர்ப்பார் தம்முள்
நவசித்தன் பாரதிநம் தலைவன் ஆக’

அமைந்த நற்பொருளைப் பயின்று, வாழ்நாளெல்லாம் பாரதியுகத்தின் பிரஜையாக வாழ்கின்ற சந்தானம் நாகராஜன் அவர்களின் அரிய நூல் ‘அதிசய மஹாகவி பாரதியார்’ என்னும் இந்த நூல்.

’கிருதயுகம் எழுக மாதோ’ என்று அறைகூவல் விடுத்து, பாரதி கனவுகண்ட இன்றைய யுகத்தில் வாழ்கின்ற நாம் அனைவருமே பாரதியுகத்தின் பிரஜைகள்தாம். வாராது வந்த மாமணியாய் சென்ற நூற்றாண்டில் நம் தமிழ்நாட்டில் தோன்றி, தமிழ்ச்சாதியையும் பாரத நாட்டையும் உய்விக்கவந்த மஹாகவியின் வழிவந்த நாம், அக்கவிக்கு பூசனை செய்ய கோடி கோடி மலர்களை தினம் தினம் அவன் பாதங்களில் அர்ப்பித்து வருகிறோம். ‘யதா சக்தி’ என்று அவரவர் சக்திக்கேற்ப அர்ப்பணம் செய்கிறோம். ‘நிதி மிகுந்தவர் பொற்குவை’ தருவதைப் போல சந்தானம் நாகராஜன் இந்த நூலை பாரதிக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார்.

“பாரதியின் பெருமை உலகமெங்கும் பரவ வேண்டும். அதற்கு நான் பயன்படவேண்டும். இது ஒன்றே என்னுடைய ஆசை” என்று சொன்னவர் பாரதியைப் பரப்புவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள். அவரைப் போன்றே எப்போதும் பாரதியின் சிந்தனைகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவராக இருப்பவர் நாகராஜன் அவர்கள். ‘பாரதி ரத்தம்’ பாய்ந்த யாரும் எப்போதும் அவனைக் குறித்து பேசியும் எழுதியும் வருபவராகி விடுவார். அந்தவகையில் பாரதியின் சிந்தனைகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவராக இருப்பவர் நாகராஜன் அவர்கள். ‘பாரதி ரத்தம்’ பாய்ந்த யாரும் எப்போதும் அவனைக் குறித்து பேசியும் எழுதியும் வருபவராகி விடுவார். அந்தவகையில் பாரதியைப் பற்றி பல நூல்களையும் எழுதி, உரைகளையும் நிகழ்த்தி வருபவர் தான் இந்நூலாசிரியர்.

ஆன்மீகம், தேசப்பற்று, மொழியறிவு, மொழிப்பற்று, புராண இதிகாசங்களின் ஈடுபாடு, வேத வேதாந்தங்களில் சூல்கொண்ட உண்மைகளின் உறவாடல் என்று பாரதி ஆழ்ந்து கற்று, கற்றதை கவிதையாய்ப் பொழியாத விஷயம் உண்டா? பாரதியைப் பற்றி எந்த கோணத்தில்தான் எழுதமுடியாது? ‘யாதுமாகி நிற்கின்ற’ அவனைப் பற்றி அதிகக் கோணங்களில் ஒரு நூல் எழுதவதும் அத்தனை எளிதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். எவ்வளவோ எழுதலாம் என்கிற வசதியே எப்படி எழுதுவது என்கிற மலைப்பையும் கொடுக்குமல்லவா? அத்தகைய மலைப்பைத் தாண்டி அவனை சொற்களில் படம் பிடிக்கவல்ல ஒருவர் தான் சந்தானம் நாகராஜன் அவர்கள்.

இந்த நூலில் பாரதி என்னும் சித்திரம் எப்படியெல்லாம் வரையப்பட்டிருக்கிறது என்று பார்ப்பதே ஓர் அனுபவம். கேள்வி பதில் வடிவத்தில் பாரதியின் பாக்களே விடையாக வருமாறு வினாக்களை எழுப்பி இருக்கும் முறை புதுமை. உண்மையில் குழந்தைகளுக்கு பாரதியை அறிமுகம் செய்ய இந்தமுறை மிகப் பயனுள்ளதாக இருக்கும். 70களின் தொடக்கத்தில் ‘பாரதி பாடம்’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கென்று சென்னை ஆல் இந்தியா ரேடியோவிற்காக ஜெயகாந்தன் அவர்கள் ஒரு நிகழ்ச்சியை தயாரித்திருந்தது நினவுக்கு வருகிறது.

இதுமட்டுமன்றி, ஒரு வர்ணஜாலம் போல் பாரதியைப் பல கோணங்களில் காட்டுகிறார் ஆசிரியர். பாஞ்சாலி சபதத்தில் உள்ள ‘இயற்கை வருணனை’ – பல சொற்பொழிவுகளில் பொதுவாக சொல்லப்படாமல் கடக்கப்படும் பகுதி -, பாரதியே தன் பாடல்களுக்கு அமைத்த ராகங்கள், மத ஒற்றுமை குறித்த ‘கம்பளி ஸ்வாமி’ தெளிவு (ஜெயகாந்தனும் குணங்குடி மஸ்தானும் நினவுக்கு வருகிறார்கள்), பாரதி ஒரு கர்வமும் கௌரவமும் மிகுந்த ஹிந்து தான் என்பதை பாரதியின் சொற்களைக் கொண்டே நிறுவுதல், ‘சிவாஜியின் வீர வசனம்’ பகுதியில் இஸ்லாமியர்கள் மனம் நோகும் வண்ணம் உள்ள வரிகளைப் பற்றிய விளக்கம், இஸ்லாமியர்கள் அந்த வரிகளின் சரியான காவியத் தேவை காரணங்களை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள், 

இந்தியாவில் உள்ள மற்ற மதத்தினர் அனைவரும் பழங்காலத்து இந்துக்களே என்ற வரலாற்றுத் தெளிவு, பாரதியின் ‘ஆரியன்’ என்ற சொல்லாட்சி, ‘ஆரிய’, ‘திராவிட’ என்ற சொற்களின் மூல வரலாறு, ‘ஸ்ரீ சிவாஜி உத்ஸவம்’, திரைப் பாடல்களில் பாரதியின் பாடல்கள் பற்றிய நீண்ட குறிப்பு என்று அனைத்தையும் திரிகடுகம், சிறுபஞ்சமூலம் கலந்ததைப் போல் கலந்து கொடுத்திருக்கிறார்.

பாரதியைப் பயிலும் முறையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைமை பற்றியும் எச்சரிக்கை செய்யாமல் இல்லை ஆசிரியர். பாரதியைப் பதிப்பிக்கும் வெளியீட்டளர்கள் தங்கள் மனம் போன போக்கில் மாற்றங்கள் செய்வதையும் ஆசிரியர் கண்டிக்கின்றார். இது மிகவும் தேவையான எச்சரிக்கை. பாரதியே தன் கைப்பட எழுதி ஐயமற நம் கைக்குக் கிடைத்திருக்கும் விஷயங்களில் கூட பதிப்பாளர்கள் மாற்றங்கள் செய்வது மன்னிக்க முடியாத குற்றமே ஆகும். அவர்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை. பாரதியின் படைப்பில் மாற்றம் செய்யும் குற்றம் மிகப்பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது என்பதைக் காண்கிறோம். பாரதியார் தன் மனைவி செல்லம்மா மேலே எழுதிய ‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி’, ‘பீடத்திலேறிக்கொண்டாள்’, ‘எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ’ முதலிய பாடல்கள் பலவற்றிலும் ‘செல்லம்மா’ என்றே எழுதினார் என்றும், ஆனால் செல்லம்மாவின் சகோதரர் அப்பாதுரை அய்யர் தன் சகோதரியின் பெயரில் அந்தப் பாடல்கள் வெளியாவது நாகரிகக் குறைவென்று கருதி ‘கண்ணம்மா’ என்று மாற்றி விட்டதாகவும் பாரதியாரின் மகள்கள் தங்கம்மாள் பாரதியும் சகுந்தலா பாரதியும் குறிப்பிட்டுள்ளார்கள். காரணம் எதுவானாலும், ‘ஆழ்ந்த கவியுள்ளம் காண்கிலார்’ இந்தக் குற்றவாளிகள்.

இப்படி இந்த நூல் ஒரு ‘பாரதி சுற்றுலா’விற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகள் நிற்காமல் சுழலும் இந்தச் சுற்றுலாவில் நம் அனைவரையும் கூட்டிச் செல்ல சந்தானம் நாகராஜன் அவர்கள் அழைக்கிறார். வாருங்கள், செல்லலாம்.

சுப்ரமணியன் சீதாராம்

மும்பை தாணே
18 ஏப்ரல், 2022

*

புத்தகத்தில் என்னுரையில் திரு சுப்ரமணியன் சீதாராம் பற்றிய ஒரு பகுதி இது:

என்னுரை

இதற்கு நல்லதொரு அணிந்துரை தந்திருப்பவர் பாரதியாரின் மானசீக புத்திரராக அமைந்து பாரதி பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கவிஞர் திரு திருலோக சீதாராம் அவர்களின் புதல்வரான திரு சுப்ரமணியன் சீதாராம் அவர்கள்.

தந்தையாரான கவிஞர் தனது மகனை அவையத்து முந்தி இருக்கச் செய்து தன் கடமையை ஆற்றிய போது மகன் ‘இவன் தந்தை என் நோற்றான்’ என அனைவரும் வியக்கும் வண்ணம் தந்தையின் வழியிலே பாரதியைப் பரப்பும் பணியில் இன்றளவும் ஈடுபட்டு

தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். இவர் சிறந்த பேச்சாளர். கட்டுரையாளர். பண்பாளர். எனது இனிய நண்பர்.

பாரதியார் பற்றிய நூலுக்கு பாரதி பக்தரான சுப்ரமணியன் சீதாராம் அவர்கள் அணிந்துரை அளித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

Leave a comment

Leave a comment